114. உரையினில் வந்த பாவம் - பாடல் 11

பெருமானை மனதினில்
114. உரையினில் வந்த பாவம் - பாடல் 11


பாடல் 11:

    எரியொரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி
        நினையார்
    திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை
        
தொழுவான் 
    பொருபுனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை
        பத்தும் மொழிவார்
    திருவளர் செம்மையாகி அருள் பேறு மிக்கது உளது என்பர்
        செம்மையினரே 

விளக்கம்:

பொருபுனல்=கரையினில் மோதுகின்ற அலைகள் கொண்ட நீர்நிலைகள்; இந்த பாடலின் கடை அடியில் செம்மை என்ற சொல் இரண்டு முறை வருவதை நாம் உணரலாம். இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் இம்மை மற்றும் மறுமையிலும் சிறந்து விளங்கும் தன்மை இவ்வாறு குறிப்பிடப் படுகின்றது. செற்ற=வெற்றி கொண்ட: 

பொழிப்புரை:

தீயினைப் போன்று சிவந்த வண்ணத்தை உடையவனும் எமது தந்தையும் ஆகிய பெருமானை மனதினில் தியானித்து நினையாத திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை அன்று நெருப்பினில் எரிந்து அழியும் வண்ணம் வெற்றி கொண்ட பெருமான் பொருந்தி உறைகின்ற செல்வம் வாய்க்கப் பெற்ற திருநாரையூர் தலத்தினை தொழுது வணங்கிய வண்ணம், கரையினில் மோதும் அலைகள் கொண்ட நீர்நிலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரத்தைச் சார்ந்தவனும் மறைக் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், உரைத்த மாலையாகிய இந்த பத்து பாடல்களை ஓதும் அடியார்கள் இம்மையில் தங்களது செல்வம் வளரப் பெற்றும் மற்றும் மறுமையில் திருவருட்பேறு பெற்றும் சிறப்புடைய வாழ்வினை அடைவார்கள்.   

முடிவுரை:

பெருமான் உறைவதால் பெருமை பெற்ற தலம் என்பதை உணர்த்தும் பொருட்டு, சிவன் மேயச் செல்வத் திருநாரையூர் என்று பல பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கை தொழுவோர்க்கு பல வகையான நலன்களும், பெருமானை வழிபடும் சிந்தனையும், நமது குறைபாடுகள் மற்றும் குற்றங்கள் நீங்கும் நிலையும், நமக்கு வரும் இடையூறுகளும் வீண் பழிச் சொற்களும் நீங்கும் நிலையும் பெற்றுத்தரும் திருநாரையூர் தலம் சென்று. தலத்தையும் பெருமானையும் வழிபட்டு இம்மை மற்றும் மறுமையில் உய்வினை அடைவோமாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com