143. கொடியுடை மும்மதில் - பாடல் 11

பசுவின் சிறப்பினை உயர்த்திய செயலும்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 11


பாடல் 11

    நல்லியல் நான்மறையோர் புகலித் தமிழ் ஞான சம்பந்தன்
    வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்னகரை
    சொல்லிய பாடல்கள் பத்தும் வல்லவர் தொல்வினை போய்ச்
    செல்வன சேவடி சென்று அணுகிச் சிவலோகம் சேர்வாரே  

விளக்கம்:

வல்லியம்=புலி; நல்லியல்=நல்லொழுக்கம்; புகலி=சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று; செல்வன்=எவரயும் அளிக்கமுடியாத சிறந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமான்;

பொழிப்புரை:

நல்லொழுக்கம் உடையவர்களாய் நான்கு மறைகளையும் கற்ற வல்லவர்கள் வாழ்கின்ற புகலி எனப்படும் தலத்தில் பிறந்தவனும், தமிழ் மொழியினில் நல்ல தேர்ச்சி பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், புலித்தோலை ஆடையாக உடுத்திய பெருமானும் வலம்புர நன்னகரினில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை புகழ்ந்து குறிப்பிட்ட பத்து பாடல்களையும் நன்கு கற்றறிந்து பொருளுணர்ந்து மனம் ஒன்றி, பொருத்தமான பண்ணுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்றவர்கள், தங்களது பழவினைகள் முற்றிலும் தீர்க்கப்பெற்று, உயர்ந்த முக்திச் செல்வத்தை உடைய செல்வனாகிய பெருமானின் திருவடிகளைச் சார்ந்து என்றும் அழியாத இன்பத்தில் திளைத்திருப்பார்கள்.

முடிவுரை;

இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பல வீரச் செயல்களும் சிறந்த தன்மைகளும்  உணர்த்தப் படுகின்றன. இந்த செயல்கள் ஏனையோர் செய்வதற்கு மிகவும் அரியதாக விளங்குவதையும் நாம் உணரலாம். பதிகத்தின் முதல் பாடலில் முப்புரங்கள் எரிக்கப்பட்ட  செயலும், இரண்டாவது பாடலில் மன்மதனை நெற்றிக்கண்ணை விழித்து அழித்த செயலும்,  மூன்றாவது பாடலில் கொலைவெறி ஊட்டப்பட்ட மானின் இயல்பினை மாற்றி முன்போல் துள்ளி விளையாடும் வண்ணம் மாற்றிய செயலும். நான்காவது பாடலில் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடி பசுவின் சிறப்பினை உயர்த்திய செயலும்,  ஐந்தாவது பாடலில் வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்று தேக்கிய செய்தியும், ஆறாவது பாடலில் அனைவரும் நடுங்கி ஓடும் வண்ணம் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தினை தானே உட்கொண்டு அனைவரையும் காத்த செய்தியும் ஏழாவது பாடலில் யானையின் தோலை உரித்து அந்த பசுந்தோலை தனது உடலின் மீது போர்த்த செய்கையும், எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனின் வலிமையை குறைத்து பின்னர் அவனுக்கு அருள் புரிந்த செய்கையும், ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் அறியா வண்ணம் நீண்ட தழலாக நின்ற தன்மையும், பத்தாவது பாடலில் அடியார்களின் உயிருக்கு உயிராக நிற்கும் தன்மையும் உணர்த்தப் படுகின்றன. பெருமானின் ஒப்பற்ற தன்மையை சம்பந்தர் அருளிய இந்த பதிகம் மூலம் உணர்ந்த நாம், முறையாக பெருமானை வழிபட்டும், இந்த பதிகத்தினை மனம் ஒன்றி, உரிய பண்ணுடன் பாடியும் நமது தொல்வினைகளை தீர்த்துக் கொண்டு அவனது திருவடிகளைச் சென்று அடைவோமாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com