142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 8

அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று
142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 8

பாடல் 8:

    திரை ஆர்ந்த மாகடல் சூழ் தென் இலங்கைக் கோமானை
    வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்று மாண்பினீர்
    அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
    நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைத்தீரே

விளக்கம்:

திரை=அலைகள்; வரை=மலை; ஆர்ந்த=பொருந்திய, போன்ற, மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஒரு ஆபரணம். மேகலையாள் என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. திருமீயச்சூர் இளங்கோயிலில் உள்ள அம்பிகை மேகலாம்பிகை என்றே அழைக்கப்படுகின்றாள். மேகலை அணிந்த அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டுள்ள இறைவன் என்ற பொருள் பட அரை ஆர்ந்த மேகலையீர் என்று இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

இடைமருது தலத்தின் மீது பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.56.2) மேகலையாள் பாகம் கொண்டீர் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏர்=அழகு; மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்தவளாக மிகவும் அழகுடன் விளங்கும் விளங்கும் தேவி என்று இங்கே குறிப்பிடுகின்றார்.  

    நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்
    போர் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்
    ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடை மருதில்
    சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

பொழிப்புரை:

அலைகள் பொருந்திய பெரிய கடலால் சூழப்பட்ட தென்னிலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணின், மலை போன்று வலிமை வாய்ந்த தோள்கள் கயிலை மலையின் கீழ் அமுக்குண்டு வருந்துமாறு, கால் விரலை ஊன்றி மலையினை அழுத்தும் பெருவீரம் உடையவரே, தனது இடுப்பினில் மேகலை என்ற ஆபரணத்தை அணிந்துள்ள தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவரே, அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை முறையாக   அமைந்துள்ள கோயிலினை, நீர் உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com