136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 3

மண்ணுலகில் பிறக்கச் செய்தது
136. அயிலாரும் அம்பதனால்  - பாடல் 3


பாடல் 3:

    எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
    இப்பாலா என்னையும் ஆள உரியானை
    வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
    மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே

விளக்கம்:

மேவி நிற்றல்=விரும்பி நிற்றல்; வைப்பான=பெருமை மிகுந்த; மேய்ப்பான்=உண்மையான் மெய்ப்பொருள் எய்ப்பானார்=தொண்டு செய்து இளைத்தவர்; எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான் என்று மணிவாசகர் கூறியது நமது நினைவுக்கு வருகின்றது. பல பிறவிகள் எடுத்து அல்லல் பட்டு இளைத்தோம் என்பதை உணரும் பிறவிகள், இனியும் பிறவி எடுத்து உழலவேண்டாம் என்ற எண்ணத்தில் மிகவும் திவீரமாக இருப்பார்கள்; அத்தகைய மனிதர்களுக்கு, இறைவன் தங்களை ஆட்கொள்வது மிகவும் இனிமையாக இருக்கும் அல்லவா. அவ்வாறு பல பிறவிகள் எடுத்து வருந்திய தான், உண்மைப் பொருளான பெருமானைக் கண்டு கொண்டு அவனது அருளால் வீடுபேற்றினை அடைந்ததாகவும் மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார்.

    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்

பிறவி எடுத்ததற்கு மணிவாசகர் வருந்துவது போன்று ஞானசம்பந்தர் வருந்தியதை நாம் துருத்தி தலத்தின் மீது அவர் அருளிய பாடல் ஒன்றில் காணலாம். இந்த (2.98.4) பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் இறைவனிடம் கேள்வி கேட்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் சம்பந்தர் இங்கே கேட்கின்றார்.  

    துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
    இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

மணிவாசகர் தனக்கு இனிமேல் பிறவியேதும் இன்றி இறைவன் திண்ணமாக அருள் புரிவான் என்பதில் நம்பிக்கை வைத்து, வீடுற்றேன் என்று கூறுவது போல் இப்பாலா என்னையும் ஆள உரியான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம். திருவாசகம் பாடல்கள் உலகுக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக மணிவாசகருக்கு பிறவி அருளியது போன்று, உலகுக்கு தேவாரப் பதிகங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஞானசம்பந்தர்க்கு இறைவன் இந்த பிறவியை அளித்ததை சம்பந்தர் உணர்ந்தது இந்த பாடலில் வெளிப்படுகின்றது. இவ்வாறு இருவரையும் திருவாசகம், தேவார பதிகங்கள் பாடவைத்தது  இறைவன் தமிழ் உலகுக்கு புரிந்த மிகப் பெரிய கருணைச் செயல்.  

எய்ப்பானார் என்பதற்கு உடல் இளைத்தவர் என்று பொருள் கொண்டு, வயிற்றினை  வளர்ப்பதை பிரதானமாகக் கொள்ளாமல் இறைவனை தியானித்து விரதமிருந்து இளைத்த  உடலினை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல  பாடல்களில் குண்டர்கள் என்று சமணர்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. அவ்வாறு உடலினை வளர்க்கும் சமணர்கள் போன்று இராமல்   பெருமானின் அடியார்கள் இருந்த நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது.              

பொழிப்புரை:

பல பிறவிகள் எடுத்து வருந்திய பின்னர் இந்த பிறவியிலேனும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்ற ஏக்கத்துடன் இறைவனின் தொண்டராக மாறும் அடியார்களுக்கு, அவர்களது பிறப்பினைத் தவிர்த்து முக்தி நிலையினை அருள்வதற்கு வழி கோலி, தேனைச் சுவைத்தது போன்று இன்பத்தை அவர்களுக்கு அருளும் பெருமான், அடியேனுக்கும் முக்திநிலை அளித்து ஆட்கொள்ளும் உரிமை பெற்றவனாக விளங்குகின்றான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, சிறந்த மாட மாளிகைகள் சூழ்ந்த மணஞ்சேரி தலத்தில் உறையும் இறைவனை, விரும்பி அவனைத் தொழுது நிற்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்து போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com