138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 2

வாழ்க்கை இன்பமயமானதாக
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 2


பாடல் 2:

    அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
    வில்லை அன்ன வாள்நுதல் வெள்வளை ஓர் பாகமாம்
    கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

ஆதரித்து=விருப்பம் கொண்டு; நல்லதோர் நெறி=துன்பங்கள் அற்ற வாழ்க்கை முறை; வெள்வளை=வெண்மையான சங்கு வளையல்களை அணிந்த உமையம்மை; சென்ற பாடலில் உலக சிற்றின்பங்களில் மயங்கி கிடக்கும் வாழ்க்கையை விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை கூறிய ஞானசம்பந்தர், தான் அவ்வாறு கருதியதன் காரணத்தை இந்த பாடலில் உணர்த்துகின்றார். உலகியல் வாழ்க்கை இன்பமயமானதாக பல பல சமயங்களில் தோன்றினாலும், முடிவில் மீண்டும் அடுத்த பிறவிக்கு வழிவகுத்து உயிர்க்கு துன்பம் அளிப்பதால் அல்லல் மிக்க வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இன்பமயமாக தோன்றும் வாழ்க்கையை ஏன் அல்லல் வாழ்க்கை என்று கூறினார் என்பதை சற்று சிந்திப்போம். உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் நமக்கு அளிக்கும் இன்பங்கள், அந்த பொருட்களையும் உயிர்களையும் நாம் மேலும் மேலும் விரும்பும் வண்ணம் தூண்டுகின்றன. இந்த தூண்டுதலுக்கு அடிமைப்படும் நாம், அந்த பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது வைத்துள்ள பாசத்தை  மேலும் மேலும் அதிகரித்து அந்த பாச மயக்கத்தினால் மேலும் பல தவறுகளைச் செய்து  நமது வினைகளை பெருக்கிக்கொண்டு, வினைகளின் சுமையிலிருந்து மீளாமல் இருப்பதால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாமல் உலக இன்ப துன்பங்களில் ஆழ்ந்து விடுகின்றோம். இவ்வாறு இறுதியில் துன்பம் பயப்பதால், முதலில் நமக்கு இன்பமாக தோன்றினாலும் இறுதியில் துன்பம் விளைவதால் அல்லல் வாழ்கை என்று இங்கே கூறப்படுகின்றது. எனவே தான் இந்த அல்லல் தரும் வாழ்க்கையின் மீது விருப்பம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். கொல்லை= முல்லை நிலம்.         

பொழிப்புரை:

நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளவொட்டாமல், பல சிற்றின்பங்களை நமது உடலுக்கு அளித்து, உயிருக்கு துன்பம் விளைவிக்கும் வாழ்க்கையினை நீர் விரும்பாமல்,  உயிரினுக்கு நன்மை பயந்து உயிரினை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் நன்னெறியினை நாடி புறப்படுவீர்களாக. வில்லினைப் போன்று அழகாகவும் ஒளி பொருந்தியதாகவும் விளங்கும்  நெற்றியினையும் வெண்சங்கு வளையல்கள் அணிந்த கையினையும் உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவனும், முல்லை நிலத்தில் காணப்படும் வெண்மையான எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும் ஆகிய பெருமானை, கோடிகா தலம் சென்றடைந்து கண்டு வணங்கி வழிபட்டு  துன்பம் அளிக்கும் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக,        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com