147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 1

கருணைக் கடவுளாகிய பெருமானை
147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 1


பின்னணி:

மண்புகார் என்று தொடங்கும் பதிகத்தை அடுத்து சாய்க்காடு தலத்து இறைவன் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் தான் இந்த பதிகம். மண் புகார் என்று தொடங்கும் பதிகத்தின் மூன்றாவது பாடலில், நாள்தோறும் இறைவனின் திருநாமத்தை விருப்பத்துடன் சொல்லி போற்ற வேண்டும் என்று அறிவுரை கூறிய ஞானசம்பந்தர், இந்த பதிகத்தினை நியமத்துடன் இறைவனை போற்றும் அடியார்களுக்கு அருளும் சிவன் உறையும் கோயில் சாய்க்காடு என்று தொடங்குகின்றார்.  

பாடல் 1:

    நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்
    சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
    மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்
    தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே
 

விளக்கம்:

இந்த பாடலில் மனம் ஒன்றி நியமத்துடன் இறைவனை தினமும் தொழவேண்டும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய தில்லைப் பதிகத்தின் பாடலை (4.81.2) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. கன்றிய=சினந்த; கருணைக் கடவுளாகிய பெருமானை மனம் ஒன்றி வழிபடுவதால் நமக்கு எந்த விதமான ஊனமும் இல்லை என்றும் மாறாக அவனது கருணை நமக்கு கிடைக்கும் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

    ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
    கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
    என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில், சம்பந்தர் தான் மனம் ஒன்றி இறைவனை தியானித்து அவரின் பெருமைகளை உணர்ந்து பாடிய பதிகம்  என்பதை குறிப்பிடுகின்றார்.

    அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
    பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
    ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
    திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்; பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள். மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில் அகலும் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு, காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம். இந்த நிலைக்கு சேக்கிழார் சுவையாக வேறொரு காரணத்தை கற்பிப்பதை நாம் பெரிய புராணத்து பாடல் ஒன்றினில் காணலாம். இந்த நயமான பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் திருமூல நாயனார் புராணத்தில் உள்ள பாடல். தில்லை நகரில் கூத்தபிரானை தரிசித்த திருமூலர் காவிரி நதிக்கரையினை சென்று அடைந்ததை குறிப்பிடுகின்றது. புலியூர் என்ற சொல், பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை உடைய தில்லைச்சிதம்பரத்தினை குறிக்கும்.  

    தடநிலைப் மாளிகைப் புலியூர் தனில் உறைந்து இறைஞ்சிப் போய்
    அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
    விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
    கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.

மேற்கண்ட பாடலில் சேக்கிழார், பெருமானிடம் சற்றும் பயம் கொள்ளாமல் கடல் அமுதத்தினை அளிப்பதற்கு பதிலாக, நஞ்சினை அளித்தமையால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, தனது நீர் வளத்தினை உலகத்திற்கு பெரிதும் அளித்துவிட்டு, கடலின் வயிறு நிறையாத வண்ணம் மிகவும் குறைந்த நீரினை கடலுக்கு அளிக்கின்றது என்று நயமாக கூறுகின்றார். பொன்னி என்பது காவிரியின் மற்றொரு பெயர்.  நியமம் என்று இங்கே குறிப்பிட்டது அவரவர்கள் குல வழக்கப்படி, தினமும் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். குறைந்த பட்சம் நீராடி உடலினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.   

பொழிப்புரை:

சிவ வழிபாடு எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டு, முறையாக நியமத்துடன் தினமும் பெருமானுக்கு நீரும் மலரும் அளித்து, தங்களது சித்தம் ஒன்றும் வண்ணம் பெருமானை தியானித்து வழிபடும் அடியார்களுக்கு அருளும் சிவபெருமான் உறையும் தலமாக விளங்குவது சாய்க்காடு தலமாகும். இந்த தலம், யானைத் தந்தங்கள் மற்றும் வளமான மயிற்பீலிகளைக் அடித்துக் கொண்டு வந்து கரை சேர்ப்பதும், துள்ளிக் குதித்து பாய்ந்து வருவதும் ஆகிய பொன்னி நதி கடலுடன் பொருந்தும் காவிரிப் பூம்பட்டினத்து  நகரில் உள்ளது இந்த சாய்க்காடு தலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com