147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 4

செழிப்பாக கடல்
147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 4

பாடல் 4:

    வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
    புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
    இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கோடும் ஈண்டித்
    தரங்க நீள் கழித் தண்கரை வைகு சாய்க்காடே
    

விளக்கம்:

மன்னிய=பொருந்திய; வண் புகழ்=வளமையான புகழ், சிறந்த புகழ் என பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்; மருவார்=பகைவர்; இந்த பாடலில் புகார் நகரம் சிறந்த துறைமுகமாக இருந்தமையால் சங்க காலத்தில் செழிப்பாக கடல் வாணிபம் நடைபெற்ற புகார் நகரத்தில், சம்பந்தர் காலத்திலும் வாணிபம் செழிப்புடன் நடைபெற்று வந்தது போலும். எனவே தான் அவர் மிகுந்த ஆரவாரத்துடன் சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதும் நடைபெற்று வந்தது என்று குறிப்பிடுகின்றார். இரங்கல் ஓசை என்பதற்கு நெய்தல் நிலத்திற்கு உரிய பண் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுவதாலும் அலைகள் எழுப்பும் சத்தமும் சேர்ந்து ஆரவாரம் மிகுந்து காணப்பட்டது என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. ஈண்டி=கூடி; தரங்கம்=அலைகள்; கடலின் அருகே உள்ள இடங்களில் தாழை செழித்து வளரும் நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.     

பொழிப்புரை:

வேண்டிய வரங்களைத் தருவதால் சிறந்த புகழ் உடையவனாகத் திகழும் எமது தந்தையாகிய பெருமான், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் அம்பினை எய்தான். அவன் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தில் உள்ளது. வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த சரக்குகளை கப்பல்களில் சேர்ப்பதும், இறக்குமதி ஆகும் பண்டங்களை இறக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதால் மிகுந்த ஆரவாரத்துடன் காணப்படும் காவிரிப்பூம்பட்டினத்து கடற்கரையில், அலைகள் எழுப்பும் சத்தமும் கலந்து பேரிரைச்சலுடன் காணப்படும் கடற்கரையில், குளிர்ந்த சோலைகள் அமைந்த தலம் சாய்க்காடு ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com