148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 3

இறைவனை தியானித்து
148. உண்டாய் நஞ்சை உமை - பாடல் 3


பாடல் 3

    தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான் தனை உன்னிக்
    கண் முத்து அரும்பக் கழல் சேவடி கை தொழுவார்கள்
    உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும்
    வெண் முத்து அருவிப் புனல் வந்தலைக்கும் வெண்காடே

  
விளக்கம்:

தடமூன்று=முக்குளம்; கண்முத்து=கண்ணீர்த் துளிகள்; உள் முத்து அரும்ப=உள்ளம் மகிழ; தூய முத்து போன்று துன்பக் கலப்பு ஏதும் இல்லாத இன்பம்; தண் முத்து=குளிர்ந்த முத்து; கழல்=கழலினை அணிந்துள்ள திருப்பாதங்கள்; உன்னுதல்=தியானம் புரிதல்; இந்த கோயிலின் தெற்கு பிராகாரத்தில் சூரிய குண்டமும் வடக்கு பிராகாரத்தில் சோம குண்டமும் வெளி பிராகாரத்தில் அக்னி குண்டமும் உள்ளன. இந்த மூன்று குளங்களே தடம் மூன்று என்று இங்கே குறிப்பிடப்படுகின்றன. மூன்று குளங்களைப் போன்று மூன்று மூர்த்திகள் (வெண்காடர், அகோர சிவன், நடராஜர்), மூன்று அம்பிகை சன்னதிகள் (பிரம்ம வித்யா நாயகி, துர்க்கை மற்றும் காளி) மூன்று தல மரங்கள் (ஆல மரம், வில்வமரம் மற்றும் கொன்றை மரம்), கொண்டுள்ள தலம் திருவெண்காடு.  

பொழிப்புரை:

குளிர்ந்த முத்துக்கள் தோன்றும் அகன்ற மூன்று நீர்நிலைகளை தீர்த்தமாக கொண்டுள்ள  வெண்காட்டு இறைவனை தியானித்து, கண்களில் முத்து போன்று கண்ணீர் மல்க வீரக்கழல் அணிந்துள்ள அவனது திருப்பாதங்களை கைகூப்பித் தொழும் அடியார்களின் உள்ளங்களில் முத்து போன்று தூய்மையான, துன்பக்கலப்பு ஏதும் இல்லாத இன்பம் தோன்றும் வண்ணம் அருள் புரியும் இறைவன் உறையும் தலம் திருவெண்காடு. வெண்மை நிறத்து முத்தினைப் போன்று தெளிந்த நீரினை உடைய அருவிகள் ஏற்படுத்தும் அலைகள் வீசும் நீர்நிலைகளைக் கொண்ட தலம் வெண்காடு.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com