120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 3

பெருமானை வழிபட்டான்
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 3


பாடல் 3:

    புண்டரீகத்தவன் மேவிய புகலியே
    புண்டரீகத்தவன் மேவிய புகலியே
    புண்டரீகத்தவன் மேவிய புகலியே
    புண்டரீகத்தவன் மேவிய புகலியே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

புண்டரீகத்தவன் மேவிய புகலியே
புண்டரீகம் தவன் மேவிய புகலி ஏ
புண்டரீகம் தவன் மே வியம் பு கலி ஏ
புண்டரீகத்தவன் மேவிய புகலியே 

முதல் அடி; புண்டரீகம்=இதய கமலம்; புண்டரீகத்தவன்=எனது இதய கமலத்தில் உள்ளவன்; மேவிய=மீண்டு வாராமல் பொருந்திய; புகலி=புகலிடம்; எப்போதும் இறைவனை தியானித்து நமது மனதினில் நிறுத்திக் கொண்டால், அவன் நமக்கு சிறந்த புகலிடமாக விளங்கி மீண்டு வாராத வண்ணம் முக்தி உலகுக்கு அழைத்துச் செல்வான் என்று இங்கே உணர்த்துகின்றார். புகலியே என்ற சொல்லில் உள்ள ஏகாரம் புகலிடமாக விளங்கும் பெருமானின் சிறப்புத் தன்மையை உணர்த்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. இரண்டாவது அடி; புண்டரீகம்= மூன்று கோடுகளாக திருநீற்றை அணிந்தவன்; தவன்=மிகுந்த பெருமை உடையவன்; மேவிய=சொல்லப்பட்ட; புகலுதல்=சொல்லுதல்; புகல்=சொல், இங்கே பாடல் என்று பொருள் கொள்ளவேண்டும்; ஏ=பொருள் ஏதும் இல்லாத அசைச்சொல்; திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமானே, யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மூன்றாவது அடி: புண்டரீகம்=புலி; தவம்=முனிவன்; புண்டரீகம் தவம்= புலிக்கால் முனிவர்; மே=கூத்து; வியன்=பொன்; வியம் என்ற சொல் விய என்று கடைக்குறையாக இந்த பாடலில் உள்ளது; பு=பொது, அரங்கு; கலி=கற்றவன்; நான்காவது அடி: புண்டரீகத்தவன்= தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமதேவன்; மேவிய=பொருந்தி வழிபட்ட

பொழிப்புரை:

எப்போதும் இறைவனை தியானித்த வண்ணம் இருக்கும் அடியேனின் இதய கமலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமான், இந்த நிலவுலகினுக்கு மீண்டும் வாராத வண்ணம் முக்தி உலகினை பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அளிக்கும் வல்லமை உடையவனாகவும், மற்ற உயிர்களுக்கு புகலிடமாகவும் திகழ்கின்றான்.  திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமான் தான், யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட வியாக்ரபாதர் காணும் வண்ணம் பொன்னம்பலத்தில், தில்லைச் சிற்றம்பலத்து பொதுவினில் நடனம் ஆடியவன் சிவபெருமான். தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமதேவன், புகலி நகரில் பொருந்தி, மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த பெருமானை வழிபட்டான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com