118. யாமாமாநீ யாமாமா - பாடல் 2

மணிவாசகப் பெருமான்
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 2

பாடல் 2:

    யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
    யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

விளக்கம்:

    யாகா யாழி காயா காதா யார் ஆர் ஆதாய் ஆயாய் 
    ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா

யாகா=யாகத்தின் வடிவமாக இருப்பவன், வேதமும் வேள்வியும் ஆயினான் என்று மணிவாசகர் பொற்சுண்ணம் பதிகத்தின் கடைப் பாடலில் கூறுகின்றார். யாழீ=யாழ் வாசிப்பவன்; காயம் என்றால் உடல்; தான் உருவம் இல்லாதவன் எனினும்; அடியார்களுக்கு உதவுவதற்காக பல்வேறு உருவங்களை அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்த தருணத்திற்கு ஏற்ப பல வடிவங்களை எடுப்பவன் பெருமான். காயா=அடியார்களுக்கு அருளும் பொருட்டு பல வடிவங்கள் எடுப்பவன்; எந்த பெயரை வைத்து அழைத்தாலும், அந்த பெயர் உணர்த்தும் பொருளினைக் கடந்து நிற்கும் திறமை படைத்த இறைவனை என்னவென்று அழைப்பது, எந்த உருவம் தான் அவனது உருவம் என்று நாம் நினைப்பது, என்பதே மணிவாசகப் பெருமான் எழுப்பும் கேள்வி. தனது அடியார்கள் பால் கருணை கொண்டு, அவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு அவன் எடுத்த சில வேடங்களையே நாம் அறிவோம் என்பதால் அவனது வேடங்களையும் நம்மால் முழுதுமாக அறிந்து கொள்ள முடியாது அல்லவா. இருந்தாலும் அவனை எவ்வாறு வழிபடுவது ஏதாவது ஒரு பெயரினை சொல்லித் தானே வழிபடவேண்டும் என்பதால், ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவீர்கள் என்று மணிவாசகர் இந்த தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில் கூறுகின்றார். தெள்ளேணம் என்பது அரிசியில் உள்ள கற்களையும் பதர்களையும் புடைத்து பிரித்து எடுக்கும் முறை. நமது அன்றாட வாழ்க்கையின் பல செயல்களிலும் இறைவுணர்வினை புகுத்தும் முறையில், அம்மானை, பூவல்லி, பொற்சுண்ணம், தெள்ளேணம் ஆகிய பதிகங்களை அருளியவர் மணிவாசகர்.

    திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
    உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
    ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 

பதிகத்தின் முதல் பாடலில், காக்கும் கடவுள் திருமாலாக இறைவன் செயல்படுவதை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், இந்த பாடலில், அழிக்கும் கடவுளாக இருந்து செயல்படும் நிலையை காதான் என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். கர்த்தா என்ற வடமொழிச் சொல் இங்கே காதா என்று மாறியுள்ளது. காதுதல்=கொல்லுதல்; யார் ஆர்= எத்தகையவர்களுக்கும்; ஆதாய் ஆயாய்=பொருந்துகின்ற தாயாக இருப்பவனே

கண்டுகொள்ள அரியவன் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிட்டு காலபாசக் குறுந்தொகைப் பதிகத்தினை (5.92) தொடங்குகின்றார். கேட்டிரேல்=கேட்பீராகில்: சூழலே=சூழ வேண்டாம். கனிவித்து=அன்பு பாராட்டி கனியச் செய்து, பக்குவப்படுத்தி: பாணி=கை: துன்னுதல்=சூழுதல்: பாழிமை=அடிமைத் திறத்தின் வலிமை. 

    கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்
    பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்
    கொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே

இவ்வாறு தன்மை என்னவென்று ஆராய்ந்து உணரமுடியாத வண்ணம் இருக்கும் பெருமானை, ஆயா (ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன்) என்ற சொல் மூலம் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். தார்=மாலை; ஆர் என்றால் ஆத்தி மரத்தினை குறிக்கும், இங்கே ஆத்தி மரத்தின் பூக்களை குறிக்கின்றது. ஆர் ஆயா என்று ஆத்திப் பூக்களின் கூட்டத்தினை, ஆத்தி மலர் மாலையை அணிந்த பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஆயம் என்பதற்கு கூட்டம் என்ற பொருளும் உள்ளது. பிச்சை எடுக்கும் கோலத்துடன் வந்த பெருமானின் அழகினில் மயங்கி, அவன் பால் தீராத காதல் கொண்டு, தாங்கள் செய்வது இன்னதென்று அறிய முடியாத சூழ்நிலையில், தீராத தாகத்துடன் அவனைப் பின் தொடர்ந்து சென்று தாருகவனத்து முனிவர்களின் கூட்டத்தை உடையவன் பெருமான் என்று இங்கே உணர்த்துகின்றார். காழீயா==காழி நகரத்தின் தலைவனே, கா=எம்மை காப்பாற்றுவாய்; யா=துன்பங்களிலிருந்து;

பொழிப்புரை:

வேதங்களால் போற்றப்படும் வேள்வியின் வடிவமாக இருப்பவனும், யாழ் இசைக் கருவியினை திறம்பட வாசிப்பவனும், அடியார்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த அடியார்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்கள் எடுப்பவனும் அழிக்கும் கடவுளாக இருந்து கொண்டு உயிர் உடலிலிருந்து பிரிவதற்கு காரணமாக இருப்பவனும் ஆகிய இறைவன், அனைவர்க்கும் தாயாக இருக்கின்றான். பெருமானின் தன்மையை நம்மால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது. அவன் நறுமணம் கமழும் ஆத்தி மலர் மாலையை அணிந்தவனாக காணப்படுகின்றான். அவன் மீது தீராத காதல் கொண்டமையால், தாங்கள் இன்ன செய்கின்றோம் என்பதையும் மறந்து தாருக வனத்து மகளிர் கூட்டம், பிச்சைப் பெருமானாக அவன் சென்ற போது அவனைப் பின் தொடர்ந்து சென்றது; சீர்காழி நகரின் தலைவனாக விளங்கும் பெருமானே, நாங்கள் படும் துன்பங்களிலிருந்து எங்களை காப்பாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com