132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 2

இறைவனின் திருநாமம்
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 2

பாடல் 2:

    தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்
    ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்
    மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்
    பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு  ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்= அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  

ஈடு=பெருமை; தங்களது உயிர்நிலை இருக்கும் இடத்தினை எதிரிக்கு அறிவித்து விட்டு சண்டை செய்வதை அந்நாளில் வீரர்கள் பெருமையாக கருதினர் போலும். வால்மீகி இராமாயணமும் கம்ப இராமாயணமும் ஜடாயு மற்றும் இராவணனின் இடையே நடைபெற்ற சண்டையை  மிகவும் விவரமாக கூறுகின்றது. இராவணன் கூரிய அம்புகளைக் கொண்டு ஜடாயுவை வருத்திய போதும், ஜடாயு அந்த தாக்குதலை முறியடித்து தனது மூக்கினால் இராவணன் வைத்திருந்த இரண்டு விற்களை உடைத்து, வாளினைத் தவிர்த்து வேறு ஆயுதங்கள் இல்லாத வகையில் இராவணனை நிலை குலையச் செய்தது என்று வால்மீகி முனைவர் கூறுகின்றார். இராவணன் தன்னிடம் இருந்த வாளினைக் கையில் ஏந்திய வண்ணம் ஜடாயுவின் சிறகுகளை அறுத்து எறிந்தான் என்று கம்பரும் வால்மீகி முனிவரும் கூறுகின்றனர். ஜடாயுவோ மீண்டும் மீண்டும் இராவணின் தலைகளை குறி வைத்து தாக்கியதாகவும், அரக்கனது கிரீடங்களை உடைத்து கீழே தள்ளியதாகவும், சடாயுவால் கிள்ளப்பட்ட தலைகள் மீண்டும் வளர்ந்ததாகவும், இருவரும் கூறுகின்றனர். எனவே தனது உயிர்நிலை சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை உணர்த்தி ஜடாயு போரிட்டதாகவும், அரக்கன் இராவணனோ தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொன்னதாகவும் சம்பந்தர் இங்கே கூறுகின்றார் போலும். இந்த செய்தி இராமயணத்தில் கூறப்படவில்லை எனினும் தனது ஞானத்தால் சம்பந்தர் இதனை அறிந்தார் போலும். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் நாம், பாகவதம் மற்றும் இராமாயணம் புராணங்களில் இல்லாத பல சுவையான செய்திகளை விவரங்களுடன் காணலாம்.

ஜடாயுவின் சிறகுகள் வெட்டப்பட்டதை குறிப்பிடும் கம்பர், தெய்வத்தன்மை பொருந்திய வாளினால் சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கூறுகின்றார். எனவே  சிவபெருமான் அருளிய சந்திரகாசம் என்ற வாளினை அரக்கன் பயன்படுத்தினான் என்பது தெளிவாகின்றது. இராமயணத்தில் வேறு எங்கும் சிவபெருமான் அருளிய இந்த வாளினை இராவணன் கையாண்டதாக குறிப்பு காணப்படவில்லை. தன்னால் ஏதும் செய்யமுடியாத நிலையில் ஜடாயுவுடன் நடைபெற்ற சண்டையில் உடைவாளை வீசிய இராவணன் ஏன் இராமபிரானுடன் நடைபெற்ற யுத்தத்தில் அந்த உடைவாளினை பயன்படுத்தவில்லை என்பதற்கு ஒரேவொரு விளக்கமே இருக்க முடியும். ஒரேவொரு முறையே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இந்த தெய்வீக ஆயுதம் இருந்தது போலும். மகாபாரதத்தில் கர்ணனுக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தின் தன்மை நினைவுக்கு வருகின்றது. ஒரேவொரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட இந்த சக்தி ஆயுதத்தை அர்ஜுனனுடன் நடைபெறும் சண்டையில் கையாள வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் கர்ணன் செயல்பட்டு வந்த போதிலும், அவனது விருப்பத்திற்கு மாறாக கர்ணன் இந்த ஆயுதத்தினை கடோத்கஜன் மீது ஏவ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றான். பதினான்காம் நாள் யுத்தத்தில் துரோணர் இறந்த பின்னரும் இரவிலும் சண்டை தொடர்ந்து நடைபெற்ற போது, இரவு நேரத்தில் அரக்கன் கடோத்கஜனின் ஆற்றல் பல மடங்கு பெருகியதால், கௌரவர் படையில் எவராலும் கடோத்கஜனை எதிர்கொள்ள முடியாத நிலையில் துரியோதனன் கர்ணனை சக்தி ஆயுதத்தினை கடோத்கஜன் மீது வீசுமாறு வற்புறுத்துகின்றான். கடோத்கஜனை கொன்ற பின்னர் அந்த சக்தி ஆயுதம் இந்திரனின் கைகளுக்கு திரும்பி விடுகின்றது என்று வியாசபாரதம் கூறுகின்றது. இந்த பாடலில் ஜடாயு குறித்த உண்மை பேசுவதை தனது உயிரினும் மேலாக ஜடாயு கருதியமையை புலப்படுத்துகின்றது.   

பொய் சொல்லாது என்ற தொடருக்கு நடந்த உண்மைகளை இராமனுக்கு எடுத்துரைத்த  ஜடாயு என்றும் விளக்கம் கூறுகின்றனர். சீதையைத் தேடிக்கொண்டு இராமனும்  இலக்குவனும் வந்த போது, தேரின் உடைந்த பாகங்கள், முறிக்கப்பட்ட வில், அம்புகள்  ஆகியவற்றை முதலில் கண்டனர். சீதையின் காரணமாக ஏதோ இருவரின் இடையே சண்டை நடைபெற்றது என்று புரிந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து ஈனக்குரல் ஒன்று கேட்கவே, அந்த குரல் வந்த திசை நோக்கி சென்று ஆங்கே ஜடாயு உயிர் பிரியும் நிலையில் இருப்பதைக் கண்டனர். அப்போது ஜடாயு நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறியதாக இராமாயணம் கூறுகின்றது. ஆனால் மெய் சொல்லா இராவணன் என்ற குறிப்பின் பின்னணியில் பார்க்கும்போது, ஜடாயு உண்மை பேசியதாக இங்கே குறிப்பிடப் படும் நிகழ்ச்சி இராவணனுடன் போரிட்டபோது நடந்தது என்று கொள்வதே மிகவும்  பொருத்தமாக உள்ளது.
                            
பொழிப்புரை:

உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்திலும் கங்கை நங்கையைத் தனது சடையிலும் ஏற்றுள்ள பெருமான், பக்குவம் அடைந்து தனது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கு தயாராக உள்ள அடியார்களைத் தேடிச் சென்று அவர்களது மலங்களைத் தான் வாங்கிக் கொண்டு என்றும் நிலையாக உள்ள பேரின்ப முக்தியை அவர்களுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவனாக விளங்குகின்றான். தனது உயிர்நிலை தனது  சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை எதிரிக்கு உணர்த்தி, தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொல்லி போரிட்ட இராவணனின் தலைகள் மீது பல முறை மோதி போரிட்ட ஜடாயு தான் உண்மை சொன்னதால் தனது உயிரினை இழக்கின்றான். அத்தகைய ஜடாயு வழிபட்ட இறைவன் உறையும் தலம் புள்ளிருக்குவேளூர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com