132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 4

புட்பக விமானம்
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 4


பாடல் 4:

    மாகாயம் பெரியது ஒரு மான் உரிதோல் உடையாடை
    ஏகாயம் இட்டு உகந்த எரியாடி உறையும் இடம்
    ஆகாயம் தேரோடு இராவணனை அமரின் கண்
    போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மான்=யானை; ஏகாயம்=மேலாடை, அங்கவஸ்திரம்; ஈரப்பசை உள்ள யானையின் தோலை உடல் மீது போர்த்துக் கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனை தவிர்ப்பார்கள்; ஆனால் பெருமானோ அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், இட்டு உகந்த எரியாடி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். எரியாடி=ஊழித் தீயினில் நின்று ஆடும் பெருமான்; புட்பக விமானத்தில் பறந்து கொண்டு சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் பயணம் தடைப்படும் வண்ணம் அரக்கனைத் தாக்கி ஜடாயு போர் புரிந்த செய்கை இங்கே கூறப்படுகின்றது. மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது. அழித்தான்=வலிமையை குறைத்தவன்;

இந்த பாடலில் மான் என்ற சொல் மானினத்தை குறிக்காது யானையை குறிக்கும். மானின் தோலை பெருமான் உரித்ததாக புராணத்தில் எங்கும் கூறப்படவில்லை; தாருவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியின் தோலை உரித்ததாகவும், யானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இங்கே யானையின் தோலை உரித்த நிகழ்ச்சியே குறிப்பிடப் படுவதாக கொள்ள வேண்டும். மான் என்று யானையைக் குறிப்பிட்டு, கருமான் என்று உணர்த்தி கரிய நிறம் கொண்ட விலங்காகிய யானை என்பதை புரிய வைக்கும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.2) கருமானின் உரியாடை என்று யானையின் தோலை பெருமான் உரித்ததை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு காதினில் குழை அணிந்தவன் என்று மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இழை=ஒன்பது இழைகளால் ஆன பூணூல்; நசை=தேன்; போது=மலர்கள்;

    காதிலங்குக் குழையன் இழை சேர் திருமார்பன் ஒரு பாகம்
    மாதிலங்கு திருமேனியினான் கருமானின் உரியாடை
    மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை
    போது இலங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே  

தில்லைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.1.3) அப்பர் பிரான், இறைவனை கருமானின் (யானையின்) தோலினை மேலாடையாக இறுகக் கட்டியுள்ளான் என்று கூறுகின்றார். கருமான்=யானை; அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனைகழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்=பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.

    கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்து
        ஒலிப்ப அனல் கை ஏந்தி
    வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு
        அணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி
        வணங்க ஆடுகின்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
        பிறவா நாளே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.90.5) சுந்தரர் பெருமானின் மேலாடையை கருமானின் உரியாடை என்று குறிப்பிடுகின்றார். உரும் அன்னக் கூற்று=இடி  போல் முழங்கும் கூற்றுவன்;   

    கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை
    உரும் அன்னக் கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்
    தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட்கொள்வான்
    பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே
   
  
பொழிப்புரை:

தனது பெரிய திருமேனியின் மீது, தன்னை எதிர்நோக்கி மிகுந்த ஆவேசத்துடன் வந்த பெரிய கரிய யானையின் தோலினை உரித்து மேலாடையாக போர்த்துக் கொண்டவனும், ஊழித் தீயின் நடுவே நின்று நடமாடுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். சீதாப் பிராட்டியைக் கவர்ந்து கொண்டு பறக்கும் புட்பகத் தேரினில் வானில் சென்று கொண்டிருந்த அரக்கன் இராவணனை சண்டைக்கு அழைத்து அவனை மேலே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com