133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 1

இறைவனுக்கு அர்ப்பணம்
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 1


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையினை கண்ணார்கோயில் தலத்தில் தொடங்கிய சம்பந்தர் அங்கிருந்து புள்ளிருக்குவேளூர் (தற்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் தலம்)  சென்ற பின்னர் திருநின்றியூர், நீடூர், திருப்புன்கூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநீடூர் தலத்தின் மீது காழிப் பிள்ளையார் அருளிய பதிகம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.  மற்ற இரண்டு தலங்களின் மீது அருளிய ஒவ்வொரு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

    நீடு திருநின்றியூரில் நிமலனார் நீள்கழல் ஏத்திக்
    கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண்டமிழ் கூறி
    நாடு சேர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி
    ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

இந்த தலம் வைத்தீஸ்வரன்கோயில் மயிலாடுதுறை பாதையில், வைத்தீச்வரன்கோயில் தலத்திலிருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில் பாதையில் ஆனந்ததாண்டவபுரம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே சுமார் மூன்று கி.மீ, தொலைவில் உள்ளது. இலக்குமி வழிபட்டமையால் திருநின்றியூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில். இந்த தலத்தின் மீது அருளிய நான்கு தேவாரப் பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் அருளிய ஒவ்வொரு பதிகமும் சுந்தரர் அருளிய இரண்டு பதிகங்களும் கிடைத்துள்ளன.           

சுந்தரர் தான் பாடிய பதிகத்தின் பாடலில் (7.65.3), பரசுராமர் முன்னூறு வேதியர்களை கோயில் திருப்பணிக்கு நியமித்து, முன்னூற்று அறுபது வேலி நிலங்களையும் அளித்தார் என்று கூறுகின்றார். அவரே இந்த தலத்திற்கு நின்றியூர் என்று பெயரிட்டு அழைத்தார் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலே குறிப்பிட்ட கொடையினை பரசுராமர், அழகிய பொற்கலசங்கள் கொண்டு நீர் வார்த்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார் என்றும் பரசுராமரின் பக்தியை மெச்சிய இறைவன்  அவருக்கு தனது திருவடிகளை காட்டி அருளினார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.   
    மொய்த்த சீர் முன்னூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரோடு நுனக்கு
    ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏத்தி ஓங்கு நின்றியூர் உனக்கு அளிப்பப்
    பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
    சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென் திருநின்றியூரானே

வடமொழியில் இந்த தலம் வர்த்தி நிவாரணபுரம் என்று அழைக்கப்படுகின்றது. பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு சோழ மன்னன் தினமும் இந்த தலத்திற்கு நள்ளிரவு பூஜையினை காண்பதற்காக வருவதை பழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன்  வேறு ஏதோ அலுவல் காரணமாக வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், இந்த தலம் வந்த போது இரவுநேரம் தொடங்கிவிட்டது. இரவு நேரத்தில் இந்த கோயிலைக் காண முடியாமல் மன்னன் வருந்திய போது, சிவலிங்கத்திலிருந்து ஒரு ஜோதி தோன்றி அடையாளம் காட்டியதாக கூறுவார்கள். அந்த ஜோதியின் திரி இலிங்கத் திருமேனியின் மீது விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டது என்றும் தலபுராணம் கூறுகின்றது. இதனால் இந்த தலத்திற்கு திரிநின்றியூர் என்று பெயர் வந்தது என்றும் நாளடைவில் அந்த பெயர் திருநின்றியூர் என்று மாறியதாகவும் கூறுவார்கள். ஜமதக்னி முனிவர், அகத்தியர், பரசுராமர், இலக்குமி தேவி, பரசுராமன் ஆகியோர் வழிபட்ட தலம். இறைவனின் திருநாமம், மகாலக்ஷ்மீசர், பரிகேச்வரர்; இறைவியின் திருநாமம் உலகநாயகி.              
பாடல் 1:

    சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
    பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்
    காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்
    நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே

விளக்கம்:

பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நின்றியோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு பண்டைய நாளில் சிறுவன்  மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி அழிந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று  விளக்கம் அளிக்கின்றனர்.        
  
பொழிப்புரை:

சூலத்தைத் தனது படைக்கலமாக கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டு சாம்பலை நறுமணம் மிகுந்த வாசனைப் பொடியாகவும் குழைத்த சந்தனமாகவும் பாவித்து, தனது உடல் முழுவதும்  பூசிக்கொண்டு, பால் போன்று வெண்ணிறத்தில் அமைந்துள்ள பிறைச் சந்திரனைத் தனது பவள நிறத்தில் உள்ள சடைமுடியில் மேலே வைத்துள்ளார். பண்டைய நாளில் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனின் வலிமையைத் தனது காலினால் இயமனை உதைத்து வீழ்த்திய பெருமான், நறுமணம் கமழும் நீல மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் கொண்டுள்ள நின்றியூரில் நிலையாக உறைகின்றார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com