133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 2

சிவபெருமான்
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 2


பாடல் 2:

    அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்
    நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
    நச்சம் மிடறு உடையார் நறுங்கொன்றை நயந்து ஆளும்
    பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே

 
விளக்கம்:

நஞ்சம் என்பது எதுகை நோக்கி நச்சம் என்று திரிந்தது. பக்ஷம் என்ற வடமொழிச் சொல் பட்சம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது. வேற்றுமை பாராட்டி ஒரு பாலாருக்கு பரிந்து செயல் புரிதல் என்று பொருள்; தீயவினைகள் அகற்றப் படுவதால் அத்தகைய தீவினைகள் விளையும் கேடும் அகற்றப் படுகின்றன. நித்தம் என்ற சொல்லும் எதுகை கருதி நிச்சம் என்று மாற்றப் பட்டுள்ளது. பெருமான் ஒருதலைப் நடந்து கொள்கின்றார் என்று சம்பந்தர் உணர்த்துவது, தனது அடியார்களுக்கு பல விதமான நன்மைகளை புரியும் பெருமான், அடியார் அல்லாதவர்களுக்கு அத்தகைய நன்மை புரியார் என்பதே ஆகும். இந்த தன்மையை அப்பர் பிரான் மிகவும் அழகாக நமச்சிவாயப் பதிகத்தில் சொல்வதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் (4.11.6) உணரலாம். சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. எப்போதும் ஒரே தன்மையுடன் தோன்றுபவன். உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.

    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
    நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
    குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
    நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

உள்ளொன்றும் புறமொன்றுமாக இல்லாமல், எப்போதும் ஒரே தன்மையுடன் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான், என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை.  .  

பெருமானது அடியார்கள் அச்சம் ஏதும் இல்லாதவராக இருப்பார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அனைவரிலும் வலியவனாக உள்ள பெருமான் துணையாக இருக்கையில்  பெருமானின் அடியார்கள் எதற்காகவும் எவரிடமும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவர் இவ்வாறு கூறுவது நமக்கு திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவூட்டுகின்றது. தங்களுடன் இருந்த போது தீராத வயிற்று வலியால் வருந்திய தருமசேனர், திருவதிகைப் பெருமானின் அருளினால் தனது வயிற்றுவலி (சூலைநோய்)  நீங்கப்பெற்று பெருமானின் அருளினால் சைவராக மாறியதை அறிந்த சமண குருமார்கள் இந்த   மாற்றம் தங்களது மதத்தின் பால் மக்கள் வைத்திருந்த மதிப்பினை வேகமாக குறைத்துவிடும் என்று அச்சம் கொண்டு உண்மையை திரித்து மன்னனிடம் சொல்லவும், தருமசேனரை பழிவாங்கவும் முயற்சி செய்தனர். சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த தனது தமக்கையாருடன் கூடுவதற்காக, தான் பொய்யாக உருவாக்கிக்கொண்ட சூலை நோய் தீரவில்லை என்ற நாடகம் நடத்தி, சூலை நோய் சமண சமய மருத்துவர்களால் தீர்க்கப்படவில்லை என்று சமண சமயத்திற்கு ஒரு இழுக்கினை ஏற்படுத்தி, சமணசமய குருமார்களுக்கான விதிகளை மீறியதும் அல்லாமல், சமண சமயத்தை மிகவும் இழிவாகவும் தருமசேனர் பேசினார், என்று மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் அவரை அழைத்துப் பேசி தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மன்னனும் தனது படைவீர்ர்களை அமைச்சர்களுடன் அனுப்பி, திருநாவுக்கரசரை (தருமசேனர் என்ற பெயர் பெருமானால் நாவுக்கரசர் என்று மாற்றப்பட்டது.) சிறை பிடித்து வருமாறு கட்டளையிட்டான். தன்னை அணுகிய அமைச்சர்களை நோக்கி நாவுக்கரசர், உமது மன்னனின் ஆணையினைக் கேட்டு அதன் வழியே உமது மன்னனைச் சாரும் நிலையில் தான் இல்லை என்று விடை அளித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

    நாமார்க்கும் குடி அல்லோம் என்றெடுத்து நான்மறையின்
    கோமானை நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானைத்
    தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
    யாமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார்

மன்னனின் கட்டளை தனக்குப் பொருந்தாது என்று வீரமொழி பேசிய நாவுக்கரசர், அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறிய பாரதி உட்பட பல புலவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. அந்த தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் தான் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் இந்த பதிகம் (6.98). இயமனுக்கும் அஞ்சமாட்டோம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்            நடலை இல்லோம்
    ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே
        எந்நாளும் துன்பம்  இல்லை
    தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்
        குழை ஓர் காதில்
    கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி                              குறுகினோமே

சமண குருமார்களின் போதனையால் மதி மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை  சுண்ணாம்புக் காளவாயில் இடுமாறு கட்டளை இடுகின்றான். இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அப்பர் பிரானை இடறித் தள்ள பட்டத்து யானை ஏவப்படுகின்றது.  அப்போது  அருளிய பதிகத்தில், இறையவனின் அடிமையாக இருக்கும் தான் எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் தம்மை அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் ஏதும் நிகழாது  என்றும் அப்பர் பிரான் மிகவும் உறுதியுடன் கூறுகின்றார். இந்த  பதிகத்தின் (4.02) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை= உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ளவேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.

    சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
    வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
    அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
    திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
    அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

பாவம் இலர் கேடும் இலர் என்ற தொடருக்கு, அடியார்கள் யான் எனது என்கின்ற செருக்குடன் கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகளும் அவற்றால் விளையும் கேடுகளும் இருப்பதில்லை என்று விளக்கம் கூறுகின்றனர். பண்டைய வினைகளை நுகர்ந்து கழிக்கும் உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கும் போது தாங்கள் செய்யும் செயல்களால், எண்ணும் எண்ணங்களால் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றன. அவ்வாறு வளரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இவ்வாறு மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்வதால், உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து, பழைய வினைகள் மற்றும் புதியதாக தோன்றும் ஆகாமிய வினைகள் ஆகியவற்றின் அழுத்தத்தால், விடுபட முடியாமல் தவிக்கின்றது, ஆனால் பெருமானின் அடியார்கள் அனைத்தும் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொண்டு செயல்படுவதால், வினைகளால் மாற்றம் ஏதும் விளையாத தற்போத நிலையில் இருப்பதால்,  ஆகாமிய வினைகள் தோன்றுவதில்லை; அவற்றால் ஏற்படும் கேடுகளும் தவிர்க்கப் படுகின்றன.     
                                                         
பொழிப்புரை:

பெருமானின் திருப்பாதங்களைப் பணியும் அடியார்களுக்கு, அனைவரிலும் வல்லவனாகிய பெருமான் தகுந்த துணையாக இருப்பதால், அவர்கள் எதற்கும் அஞ்சாமல் இருக்கின்றனர். அவர்களது தீவினைகளை பெருமான் தீர்த்துவிடுவதால் பாவங்கள் அவர்களை அணுகுவதில்லை; பாவங்கள் விலகிப் போவதால் பாவங்களால் நாள்தோறும் விளையும் கெடுதிகளும் தவிர்க்கப் படுகின்றன. மேலும் மன நலனும் உடல் நலமும் வாய்க்கபெற்று அடியார்கள் இன்பமாக வாழ்வார்கள். இவ்வாறு தனது அடியார்களை பாதுகாக்கும் பெருமான், நிலையாக நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நஞ்சு தேக்கப்பட்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனாக உள்ளான்; நறுமணம் கொண்ட கொன்றை மாலைகளை அன்புடன் தனது திருவடிகளில் சாத்தும் அடியார்களை பெருமான் ஆட்கொண்டு அருள் புரிகின்றான். தன்னிடம் அன்பு பாராட்டாத மாந்தர்களை ஆட்கொள்ளாமல் பட்சபாதமாக நடந்து கொள்கின்றான்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com