133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 4

திருஞானசம்பந்தர் கூறும் திருவைகா
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 4


பாடல் 4:

    பூண்டவ் வரை மார்பில் புரிநூலன் விரி கொன்றை
    ஈண்டவ் வதனோடும் ஒரு பாலம் மதி அதனைத்
    தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
    ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே

விளக்கம்:

தொழில் அல்லது=தொழுதால் அல்லது; ஈண்ட=நெருங்க; பாலம் மதி=பால்+அம்+மதி; பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் சந்திரன்; வரை=மலை; பூண்ட=அணிந்த, அணிகலன்களை அணிந்த என்று சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்; கழல்=கழல்களை அணிந்த திருவடிகள்; சென்ற பாடலில் சப்தப்ரபஞ்சத்தின் ஆதாரமாக இறைவன் வைத்துள்ள உடுக்கை ஒலி இருக்கும் நிலையினை தனது உள்ளம் உணர்வதாக சம்பந்தர் கூறினார். ஆனால் பல்வேறு விதமான ஒலிகளை கேட்கும் அனைவர்க்கும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்பதையே இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.    

இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

    மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
          வார்சடையான் என்னின் அல்லால்
    ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர்
          உவமனில்லி
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்
          காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
          என்றெழுதிக் காட்ட ஒணாதே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
    தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
    பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
    ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறும் திருவைகா தலத்து பாடலை (3.71.4) நாம் இங்கே காண்போம். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்= பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;

 இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
 தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்  
 முன்னை வினை போய் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
 மன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

பொழிப்புரை:

தனது மலை போன்று பரந்த மார்பினில் அணிகலன்களை பூண்டவனும், முப்புரி நூலை அணிந்தவனும், நெருக்கமாக கட்டப்பட்ட விரிந்த கொன்றை மலர் மாலையினையும், பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் பிறைச் சந்திரனையும் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமான், வானத்தை தொடும் வண்ணம் உயர்ந்து வளர்ந்த சோலைகள்  கொண்டுள்ள திருநின்றியூரில் உறைகின்றான். நம்மை ஆட்கொண்டு அருளும் அவனது திரு வடிகளைத் தொழுதால் அன்றி அவனது தன்மையை எவராலும் அரிய முடியாது.       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com