122. கல்லால் நீழல் - பாடல் 4

மாசில் வீணையும்
122. கல்லால் நீழல் - பாடல் 4


பாடல் 4:

    கூற்று உதைத்த
    நீற்றினானைப்
    போற்றுவார்கள்
    தோற்றினாரே

விளக்கம்:

தோற்றினார்=பிறந்ததன் பயனை அடைந்தவர்கள்; பெருமானை போற்றாத மனிதர்கள் தாங்கள் பிறந்ததன் பயனை அடையாதவர்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில்  கூறுகின்றார். இந்த கருத்து நமக்கு அப்பர் பிரான் அருளிய திருவாரூர் பதிகத்தின் முதல் பாடலை (4.53.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் ஆரூர்ப் பெருமானைத் தொழுது வலம் வந்து வணங்குபவர்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் என்று கூறுகின்றார். தோன்றினார் தோன்றினாரே=பிறந்தவர் பிறந்தவர்களாவர்கள். நாம் பிறந்ததன் பயன், சிவபிரானை கும்பிட்டு உய்வினை அடைதல் தானே. அந்த கருத்து தான் இங்கே கூறப்படுகின்றது

    குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேற்கண்ணி தன்னைக்
    கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்களைக் கணங்கள் ஆர
    அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
    தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே

புல்லாங்குழலின் இனிமையான ஓசையையும் வென்ற இனிய மொழியை உடையவளும், அழகிய வேல் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின், திருவடிகளை வலம் வந்து, அந்த திருவடிகள் பற்றிய சிந்தனையிலிருந்து நீங்காது இருக்கும் அடியார்களின் கண்கள் நிறையுமாறு காட்சி அருள்பவன் சிவபெருமான். தனது இடது கையினில், எப்போதும் வலம் சுழித்து எழும் தீப்பிழம்பை கையில் ஏந்தியவராக காட்சி தரும் சிவபெருமான், தன்னுடைய அருளாகிய ஒளியினை அடியார்கள் பால் வீசும் இடம் திருவாரூர் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாரூர்ப் பெருமானை வலம் வந்து தொழக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவர்கள், தாங்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் ஆவார்கள் என்பதே மேற்குறிப்பிட்ட அப்பர் பிரான் பாடலின் திரண்ட கருத்து. .  

இதே கருத்து நாகைக் காரோணம் பதிகத்தின் பாடலிலும் (4.71.8) அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தில் அப்பர் பிரான், நாகைக் காரோணத்து சிவபிரானைப் புகழ்ந்து வணங்க வல்லவர்களே பிறந்தவர்கள் என்றும் மற்றவர் பிறந்தவராக கருதப் படமாட்டார்கள் என்றும் கூறுகின்றார். தெற்றினர்=மாறுபட்டவர்கள், நல்ல நெறியாகிய சைவ நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்கள்: செற்ற=வென்ற: சிலையர்= வில்லைக் கையில் ஏந்திய சிவபெருமான்:  

        தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
        செற்ற எம் சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார்    
        கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்
        பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே

இந்த பதிகம் நமக்கு சுந்தரரின் நமச்சிவாயப் பதிகத்தின் (7.48) முதல் பாடலை நினைவூட்டும். சிவபெருமானின் திருவடிகள் தவிர்த்து வேறு பற்றுக்கோடு ஏதும் இல்லை என்ற எண்ணம் மனதினில் உறுதியாக நிலைபெற்ற பின்னரே, தான் மனிதனாக பிறந்தவனானேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். அவ்வாறு சிவபெருமானை உறுதியாக வழிபட்டதால், தனது பிறவிப்பிணி நீங்கப்பெற்று, சிவபெருமானின் அருளால் இனிமேல் பிறவாத தன்மையும் வரப் பெற்றதாக இங்கே கூறுகின்றார். 

        மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
        பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
        கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
        நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

    
நமக்கு வாய்த்த மனிதப் பிறவியை மதித்து நாம் செய்யக் கூடிய செயல் என்பது ஏதேனும் உண்டென்றால், அது தில்லையில் நடமாடும் கூத்தனுக்கு அடிமை என்று நம்மை கருதி அவனுக்கு ஆட்பட்டு இருப்பது தான் என்று கூறி, அப்பர் பிரான் நம்மை வழிப்படுத்துவதை நாம் அவரது தில்லைப் பதிகம் ஒன்றினில் காணலாம். கூழைமை=கடமை. 

        வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
        பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்
        கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்
        கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே    

இதே கருத்து மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் (5.90) பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றது. சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.

    பூக் கை கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
    நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
    ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
    காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே 

கூற்றுவனை உதைத்து வீழ்த்தியவன் என்ற குறிப்பு பெருமான் காலனைக் கடந்தவன் என்பதையும் நீற்றினான் என்ற குறிப்பு திருநீற்றினை அணிவதன் மூலம் தான் ஒருவனே நிலையானவன் என்பதையும் மற்றவர்கள் அனைவரும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ளவர்கள் என்பதையும் பெருமான் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன என்பதை நாம் அறிவோம். நிலையான தன்மை உடைய ஒருவன் தானே, நிலையற்ற பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க இயலும். எனவே அவனை வழிபட்டு, நமது பிறவிப் பிணியை தீர்த்துக் கொள்வது தானே நமது கடமையும் பிறவி எடுத்ததன் பயனாகவும் இருக்க முடியும். எனவே தான் அந்த கடமையைச் செய்யும் மாந்தர்களை, பிறவிப் பயனை அடைந்தவர்கள் என்று உணர்த்தும் வண்ணம் தோன்றியவர்கள் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:  

கூற்றுவனை உதைத்து தனது அடியானைக் காத்தவனும், திருநீற்றினை அணிந்து தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதை உணர்த்துவனும் ஆகிய சிவபெருமானை போற்றி வணங்கும் அடியார்கள் மட்டுமே பிறந்தவர்களாக கருதப் படுவார்கள். ஏனையோர் பிறந்ததன் பயனை அடையாததால் பிறந்தவர்களாக கருதப் படமாட்டார்கள்.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com