123. ஓர் உருவாயினை - பாடல் 1

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார்.
123. ஓர் உருவாயினை - பாடல் 1

முன்னுரை:

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் திருவெழுகூற்றிருக்கை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது திருவெழுகூற்றிருக்கை திருப்பதிகத்தை சிந்திப்போம். இந்த பதிகம் அகவல் முறையில் அமைந்துள்ளது. இந்த பதிகத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன.

மிகவும் அழகான அலங்காரத்துடன் வீதி வலம் வரும் பெருமானின் அழகினைக் கண்டு இரசிப்பதற்கு அனைவரும் விரும்புவார்கள். அதிலும் தேரில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து வீதி வலம் வரும் பெருமானை காண்பதற்கு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்புவார்கள். திருஞான சம்பந்தர் ஒரு படி மேல் சென்று, பெருமானை தானே தேரில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று விரும்பினார் போலும். சொற்களாலான தேரினை உருவாக்கி அந்த தேரினில் பெருமானின் பண்புகளையும் தன்மையையும் சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும் வைத்து நாம் அனைவரும் படித்து இன்புறும் வண்ணம் ஒரு பதிகத்தினை இயற்றுகின்றார். இவ்வாறு சொற்களால் அமைந்த தேரினில் இறைவனின் பலவிதமான பெருமைகளை குறிப்பிட்டு அழகு பார்க்கின்றார். சொற்களால் அமைந்துள்ள தேர் என்பதை நாம் உணரும் வண்ணம் தேரின் மேல் பாகம் அமைந்திருப்பது போன்று எண்களை வைத்து பல வரிசைகளாய் அடுக்கியுள்ளார். இத்தகைய கவிதை நடையினை இரதபந்தம் என்று வ்டமொழியில் அழைப்பார்கள். இதனை தமிழ்மொழியில் மிகவும் அழகாக திருவெழுகூற்றிருக்கை (திரு எழு கூற்று இருக்கை) என்று அழைக்கின்றனர். திரு=தெய்வம்; எழு=எழுந்தருளும்; கூற்று=சொற்களாலான; இருக்கை=அமரும் இடம், தேர்; 

இனி, எண்களைக் கொண்டு எவ்வாறு தேரின் அமைப்பினை சம்பந்தர் உணர்த்துகின்றார் என்பதை நாம் காண்போம். முதல் வரிசையில் 13 சதுரங்கள் அதற்கு மேல் வரிசையில் 11 சதுரங்கள் அதற்கும் மேல் 9 சதுரங்கள் அதற்கும்மேல் உள்ள வரிசைகளில் 7 சதுரங்கள் 5 சதுரங்கள் 3 சதுரங்கள் வைக்கப்பட்டுள்ள அமைப்பினை கற்பனை செய்து பார்த்தால் ஒரு தேரின் மேல் பகுதியை ஒத்திருக்கும் உண்மையை நாம் அறியலாம். கீழ் வரிசையில் ஒன்று முதல் ஏழு வரை எண்களை முதலில் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் அமைத்து, ஒவ்வொரு எண்ணையும் ஒரு சதுரத்தை உணர்த்துவதகக் கொண்டால் இந்த வரிசையில் பதின்மூன்று சதுரங்கள் இருப்பதை (1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1) நாம் உணர்ந்து அறியலாம். இவ்வாறு கீழ் வரிசையில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கையை உணர்த்திய ஞானசம்பந்தர் அதற்கும் மேல் உள்ள வரிசைகள் முறையே பதினோரு சதுரங்கள் (1 2 3 4 5 6 5 4 3 2 1) ஒன்பது சதுரங்கள்  (1 2 3 4 5 4 3 2 1) ஏழு சதுரங்கள் (1 2 3 4 3 2 1) ஐந்து சதுரங்கள் (1 2 3 2 1) மற்றும் மூன்று சதுரங்கள் (1 2 1) வைத்திருப்பதை நாம் காணலாம். இந்த அமைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் நமக்கு தேரின் மேற்கூரையின் மேல் உள்ள அமைப்பு தென்படும்,                                                         
(1 2 1)
(1 2 3 2 1)
(1 2 3 4 3 2 1)
(1 2 3 4 5 4 3 2 1)
(1 2 3 4 5 6 5 4 3 2 1)
(1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1)

பாடலின் 19ஆம் வரியிலிருந்து  31ஆம் வரிகள் வரை ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைத்துள்ள சம்பந்தர், மீண்டும் பாடலின் 32ஆம் வரியிலிருந்து 42ஆம் வரிகள் வரையிலும் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைந்துள்ளார். இவ்வாறு அமைந்துள்ள நிலையினை தேர் தட்டின் கீழ் பாகம் என்றும் கூரை என்றும் கொள்வதும் பொருத்தமாக உள்ளது, இனி இந்த பாடல் உணர்த்தும் பொருளை நாம் காண்போம்.

பாடல் வரிகள்:  1 & 2

    ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து
    ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம்

விளக்கம்:

ஓருரு என்று ஈரியல்பு ஒரு விண் என்று ஒன்று இரண்டு ஒன்று ஆகிய எண்கள் இங்கே உணர்த்தப் படுவதை நாம் காணலாம். ஓர் உரு=ஒப்பற்ற ஒரு உருவம்; அனைத்து தத்துவங்களையும் கடந்ததும், சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் எட்டாமல் இருப்பதும் ஆகிய நிலை பெருமானின் இயல்பு நிலை. இதனை சொரூப நிலை என்றும் இயல்பு நிலை என்றும் கூறுவார்கள்; அருவம் உருவம் அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளையும் தாண்டி எண்குண வடிவினனாய் எங்கும் பரந்தும் நிறைந்தும் சர்வ வியாபியாக நிற்பவன் இறைவன். அவனது அந்த தன்மையை யாரும் காண இயலாது. எனினும் உயிர்கள் பால் இரக்கம் கொண்டு ஐந்தொழில்கள் செய்யும் நோக்கத்துடன், தன்னிச்சையாக எந்த ஒரு உருவமும் கொள்ளும் வல்லமை படைத்தவன் பெருமான். அவ்வாறு சிவமாகவும் சக்தியாகவும் இறைவன் கொண்டுள்ள உருவமே மேலே குறிப்பிட்ட செயல்களை செய்வதற்கு பெருமானே எடுத்துக் கொண்ட ஒப்பற்ற உருவம். இதனை தடத்த நிலை என்று கூறுவார்கள். இவ்வாறு ஒப்பற்ற உருவங்களை உடையவன் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது; மான்=பெண் இங்கே சக்தியை குறிக்கின்றது; ஆங்காரம்=தீர்மானம் செய்து, ஒரு செயலை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு; உலகத்தில் உள்ள உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐந்து தொழில்களைச் செய்து உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொண்டு தன்னை வந்து அடைவதற்காக வழி வகுத்த நிலை; ஈர் இயல்பாய்=சக்தி சிவம் என்று வேறு வேறு இயல்புகளைக் கொண்டு நிற்கும் நிலை; சிவம் உலகத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என முடிவு செய்து நினைக்கின்றது. சக்தி அந்த நினைவுகளை செயலாக்குகின்றது. இந்த தன்மை இங்கே ஈரியல்பு என்று உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு உலகத்தை படைக்கும் இறைவன், ஆணவக் கலப்புடன் விளங்கும் உயிர்களை தகுந்த உடல்களுடன் சேர்த்து, அந்த உயிர்கள் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு பதியைச் சார்ந்து இருக்கவும், ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்களைக் கழித்துக் கொள்ளவும் உதவி புரிகின்றான். இந்த உதவியும் ஈரியல்பாய் உள்ள சிவமும் சக்தியும்  இருவரும்  இணைந்து செய்வது தான்.

படைப்பின் அடிப்படையாக நாதத்திலிருந்து எழுவது ஆகாயம் (வெளி என்றும் கூறுவார்கள்) இந்த ஆகாயத்திலிருந்து காற்று தீ நீர் மற்றும் நிலம் ஆகிய மற்ற பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வாறு ஆகாயம் முதல் உலகம் ஆகிய பஞ்ச பூதங்களை தோற்றுவிக்கும் நிலை விண் முதல் பூதலம் என்ற தொடரால் விளக்கப் படுகின்றது. ஆகாயத்திற்கு ஒப்பற்ற என்ற பொருளைத் தரும் ஒரு என்ற அடைமொழியைச் சேர்த்து ஒரு விண் என்று சம்பந்தர் கூறுகின்றார். மற்ற நான்கு பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ள ஆகாயம், தான் எந்த பூதத்தையும் சார்ந்து தோன்றாமல் இருந்த ஒப்பற்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.  ஈரியல்பாய் ஒரு என்ற தொடருக்கு, இரண்டு வேறு வேறு இயல்புகளுடன் செயல்பட்டாலும், சிவமும் சக்தியும் இணைந்து ஒரே உருவமாக மாதொரு பாகனாக இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றது என்றும் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமானதே.

பொழிப்புரை:

சர்வ வியாபியாக அனைத்து உயிர்களுடன் கலந்து நிற்கும் பெருமானே, நீ உயிர்கள் மீது கொண்டுள்ள கருணையால் ஐந்து தொழில்களையும் புரியும் பொருட்டு ஒப்பற்ற உருவத்தையும் தாங்கி நிற்கின்றாய்; உலகிலுள்ள உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெண்ணாகிய சக்தியுடன் சேர்ந்து இரு வேறு இயல்புகளுடன் ஐந்து தொழில்களைச் செய்து உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிர்களையும் இறைவன் இயக்குகின்றாய். உன்னால் தான் வேறு பூதங்களின் கலப்பின்றி தோன்றியது என்ற ஒப்பற்ற பெருமையை உடைய ஆகாயமும், மற்ற நான்கு பூதங்களும் தோற்றுவிக்கப் படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com