124. வரமதே கொளா - பாடல் 7
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 24th March 2019 12:00 AM | Last Updated : 24th March 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 7:
சுரபுரத்தினைத் துயர் செய் தாரகன் துஞ்ச வெஞ்சினக் காளியை தரும்
சிரபுரத்து உளான் என வல்லவர் சித்தி பெற்றவரே
விளக்கம்:
சுரர்=தேவர்கள்; சுரபுரம்=தேவர் உலகம்; தாருகன் என்றால் அரக்கன் என்று ஒரு பொருள் உள்ளது. இங்கே மகிடாசுரனை குறிக்கும். துஞ்ச=இறந்துபட; சிரபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ர. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.
தாருகனைக் கொல்வதற்காக காளியை படைத்ததும், அதன் பின்னர் காளிக்கு ஏற்பட்ட கோபத்தை அடக்கும் வண்ணம் நடனமாடியதும் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இந்த நிகழ்ச்சி மச்ச புராணத்தில் காணப்படுவது. தாரகன் எனப்படும் மகிடனின் கொடுமை தாளாமல் தேவர்கள் வருந்தி சிவபிரானிடம் முறையிட்ட போது, பார்வதி தேவியின் அம்சமாகிய காளியை, தாரகனைக் கொல்வதற்காக விடுத்த செய்தி காளத்தி தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் (3.110) மூன்றாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. பல வகையான பழங்களை உண்ட களிப்பில் குரங்குகள் கூட்டமாக மலை அதிரும் வகையில் விளையாடும் காட்சி இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
வல்லை வருகாளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ
கொல் என விடுத்து அருள் புரிந்த சிவன் மேவு மலை கூறி வினவில்
பல்பல இருங்கனி பருங்கி மிக உண்டு அவை நெருங்கி இனமாய்க்
கல் அதிர நின்று கருமந்தி விளையாடு காளத்தி மலையே
தாரகனைக் கொன்ற காளியம்மையின் கோபம் தணியாத நிலையில், ஆவேச நடனம் ஆடி வந்த காளியை நடனத்தில் வென்ற நிகழ்ச்சி மிகவும் விரிவாக கழுமலம் பதிகத்தின் (1.126) ஐந்தாவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகனை வெட்டி வீழ்த்திய காளி ஊழித்தீ பொங்கி வருவது போன்று கோபத்துடன் உலகில் உள்ள உயிர்களை எல்லாம் அழிக்க வந்தவள் போல் ஆவேச நடனம் ஆடி வந்த செய்தியும். உலகத்து துயர்களைக் களையும் பொருட்டு சிவபெருமான் நடனம் ஆடி காளியைத் தோல்வியுறச் செய்து பின்னர் காளியின் கோபத்தைத் தணித்ததும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. சீறார்=சீறி வந்த தாரகன், வீறு= தனித்து இருத்தல், சொக்கத்தே=சொக்கம் என்ற நடனம், செங்கதம்=சிவந்த கோபம், கைக்க=வெறுக்க, ஏயாமே=பொருந்தாதபடி, பேர் யுக்கம்=பெரிய ஊழித் தீ.
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார் வீறார்
போரார் தாரகன் அவன் உடல் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர்
தீ கான் மீப்புணர் தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு
ஏயாமே மாலோகத் துயர் களைபவனது இடம்
கைக்க பேர் யுக்கத்தே கனன்றும் மிண்டு தண்டலைக் காடே ஓடா
ஊரே சேர் கழுமல வளநகரே
மணிவாசகரும் தனது திருச் சாழல் பதிகத்தில், காளியுடன் நடம் புரிந்து அன்று சிவபெருமான் காளியை வென்றிராவிட்டால், உலகம் முழுவதும் காளியின் கோபத்திற்கு இரையாக மாறியிருக்கும் என்று குறிப்பிடுவது இங்கே நினைவு கூரத்தக்கது. தண்பணை=நீர் வளம் நிறைந்ததால் குளிர்ந்து காணப்படும் வயல்கள்
தேன் புக்கு தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
தான் புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம்
ஊன் புக்க வேற்காளிக்கு ஊட்டாம் காண் சாழலோ
அப்பர் பிரானும் குரங்காடுதுரையின் மீது அருளிய பதிகத்தின் (5.63) ஒரு பாடலில் தாரகனின் உயிரை உண்ட காளியின் கோபத்தையும் முயலகனின் கோபத்தையும் தணித்த சிவபிரான் என்று குறிப்பிடுகின்றார். மாத்தன்=பொன்னினும் உயர்ந்த மாற்று போன்றவன், மறை ஓத்தன்=மறைகளை ஓதுபவன், போத்தன் தானவன்=வீரத்துடன் வந்த அரக்கன் முயலகன்,
மாத்தன் தான் மறையார் முறையான் மறை
ஓத்தன் தாரகன் உயிர் உண்ட பெண்
போத்தன் தானவன் பொங்கு சினம் தணி
கூத்தன் தான் குரங்காடு துறையனே
இந்த நிகழ்ச்சி பருவரை சுற்றி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலும் (4.14.4) அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. நெடுவேலை=நெடிய, பரந்த கடல், சூடிய கையர்=தொழுத கையர், நெடிது உயர்ந்த ஆகாயம், நிலவுலகம், கடல், மலைகள், மற்றுமுள்ள ஏழுலகங்கள் அனைத்தும் வருந்துமாறு தாரகன் துன்புறுத்த, அதனால் வருந்திய தேவர்கள் சிவபிரானை அணுகி, தங்களது கைகளைத் தலை மேல் குவித்து அவரைத் தொழுது வேண்டினார்கள்: அதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான், பார்வதி தேவியின் அம்சமாகிய காளிக்கு வேண்டிய வல்லமை அளித்து தருகனைக் கொல்லுமாறு பணித்தார்: மிகுந்த வல்லமையுடன் காளி வருவதைக் கண்டு, தனது இறுதிநாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த தாரகன் தப்பி ஓட முயற்சி செய்த போது, அவனைத் துரத்திக் கொன்ற பின்னும் தனது கோபம் தணியாமல் காளியம்மை இருந்த போது, போட்டி நடனம் ஆடி அவளது கோபத்தைத் தணித்த சிவபெருமானின் திருப்பாதங்கள் நமக்கு ஒப்பற்ற அடைக்கலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
நீடுயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு
ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம் அவையாம் நமக்கொர் சரணே
பொழிப்புரை:
தேவருலகத்தினை துன்புறுத்திய அரக்கர்களின் தலைவனாகிய மகிடாசுரன் மடிந்து வீழும் வண்ணம் வல்லமையும் கோபமும் கொண்ட காளியை, அம்பிகையின் அம்சமாக தோற்றுவித்த சிவபெருமானை, சிரபுரம் என்று அழைக்கப்படும் நகரில் உறைபவனே என்று அழைத்து வணங்கும் அடியார்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவார்கள்.