128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 1

திருநாவுக்கரசரை வரவேற்றார்
128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 1


பின்னணி:

தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக்கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர் சில நாட்கள் சீர்காழியில் தங்கினார். அப்போது அவரது பெற்றோர்களால் அவருக்கு உபநயனச் சடங்கு செய்து வைக்கப் பட்டது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தரை நேரில் காணும் ஆர்வத்துடன் சீர்காழி வந்தடைந்தார்.  தனது  ஊருக்கு திருநாவுக்கரசர் வருவதை அறிந்து கொண்ட திருஞான சம்பந்தர், தனது தொண்டர்களுடன் ஊர் எல்லைக்கு சென்று மிகுந்த உற்சாகத்துடன்  திருநாவுக்கரசரை வரவேற்றார். பின்னர் பாசம் பொங்க அவரை அப்பரே என்று அழைத்தார். பின்னர் இருவருமாக சேர்ந்து சீர்காழி நகரில் உள்ள திருக்கோயிலுக்கு சென்றனர்; அதன் பின்னர் தனது இல்லத்திற்கு, அப்பர் பிரானை அழைத்துச் செல்ல ஆங்கே இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானை குறித்து அளவளாவினர். இந்த சந்திப்பின் பின்னர் அவர்கள் இருவரும், இறுதி வரை நெருங்கிய தோழர்களாக பழகியதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம்.  இவ்வாறு இறைவனைக் குறித்து பேசியதால் விளைந்த சிவானந்த அனுபூதியில் திளைத்த இருவரும் பல பதிகங்கள் இயற்றினார்கள் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். அவர்கள் இருவரின் இடையே அன்பும் நண்பும் மேலும் மேலும் பெருகியது என்று சேக்கிழார் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்.  இயல்பாகவே அவர்கள் இருவரின் மனதினில் இறைவன் பால் இருந்த அன்பு பொங்க அவர்கள் இருவரும் உரையாடினார்கள் என்று சேக்கிழார் கூறுவதை நாம் இந்த பாடலில் உணரலாம்.

    அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
    இணையில் திருவமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து
    புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
    உணரும் சொல்மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்

பின்னர் இருவருமாக திருக்கோலக்கா தலம் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடியதாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. எனினும் அப்பர் பிரான் திருக்கோலக்கா தலத்தின் மீது பாடிய பதிகம் ஏதும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. திருக்கோலக்கா தலத்திலிருந்து சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் பல சோழ நாட்டுத் தலங்கள் காண்பதற்கு தமக்கிருந்த விருப்பத்தை வெளியிட்டு, சம்பந்தரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு செல்ல, திருஞான சம்பந்தர் மேலும் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கினார். அந்நாட்களில் பலவகையான வித்தியாசமான பாடல்கள் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடலில்  நடையில் முடுகு இராகம் என்ற வகையில் பதிகம் பாடினார் என்று கூறுகின்றார். முடுகுதல் என்றால் வேகம் என்று பொருள். வேகமான நடை கொண்ட பண்ணில் பாடப்பட்டுள்ள பதிகம் இந்த பதிகம். சாதாரி பண்ணில் அமைந்துள்ள 34  பாடல்களில் ஐந்து பாடல்கள் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்டவை.  சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பிரமாபுரத்து பதிகம், வழிமொழி இராகம் என்று குறிப்பிடப்படுகின்றது. விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் பதிகம் முக்கால் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த இரண்டு பதிகங்களையும் நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். எஞ்சிய மூன்று பதிகங்கள், எந்தமது சிந்தை,  சங்கமரு முன்கை,  திருந்துமா களிற்றிள என்று தொடங்கும் பதிகங்கள். இந்த மூன்று பதிகங்களும் (3.75, 3.81 & 3.89), பொதுவாக நடையின் முடுகு இராகம் என்று சேக்கிழாரால் குறிப்பிடப் படுகின்றன என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த மூன்று பதிகங்களில் எந்தமது சிந்தை என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இங்கே சிந்திப்போம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சண்பை என்ற சீர்காழியின் பெயர் குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்தின் ஒன்பது பாடல்களில் தேவியுடன் பெருமான் இந்த வீற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.    
 
பாடல் 1:

    எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
    வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்
    அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
    சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே

விளக்கம்:

எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று தேவர்கள் பெருமானை இறைஞ்சியதாக சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சூரபதுமனின் கொடுமைகளுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த தலத்து பெருமானிடம் புகல் அடைந்ததால் புகலி என்ற பெயர் வந்தது என்பதை நாம் அறிவோம். அந்த சம்பவம் தான் இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றது. பெருமான்=பெருமைக்குரிய ஆண் மகன் என்ற சொற்றொடர் பெருமான் என்று குறுகியதாக கூறுவார்கள்.  வளர்=வாசனை வளரும்;  வாய்மை=தன்மை; சீர்காழி தலத்தில் அமர்ந்துள்ள பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்த பின்னர், சிறந்த முறையில் தூபம் தீபம் முதலிய உபசாரங்கள் செய்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அந்தி=மாலை நேரம்; அமர்=பொருந்திய; சந்தி=சந்திப் பொழுதுகள்; இரண்டு வேறுவேறு  காலங்கள் சந்திக்கும் நேரங்கள்; இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை நேரம்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கலக்கும் நேரம் நண்பகல்; பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம் மாலை;  இரவும் முற்காலை நேரமும் இணையும் நேரம் நள்ளிரவு, அர்த்த ஜாமம்; இத்தகைய நான்கு பொழுதுகளிலும் அர்ச்சனைகள் செய்து பெருமானை அந்நாளில் வழிபட்டு வந்தனர் என்பது இந்த பாடல் மூலம் தெளிவாகின்றது. பெருமானை விடவும் அழகில் சிறந்தவர் வேறு எவர் உள்ளார். அதனால் தான் பெருமானை அழகன் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.  சொக்க வைக்கும் அழகினை உடையவன் என்ற பொருளினை  கொண்ட திருநாமம் தானே மதுரையம்பதியில் வீற்றிருக்கும் பெருமானின் திருநாமம்--சொக்கன்; மலி=சிறந்த; குந்தளம்= கூந்தல்; விரித்த சடையுடன் உள்ள பெருமானுக்கு துணைவியாக இருப்பவள் மிகுந்த அழகுடன் விளங்கும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று கூறுவது நயமாக உள்ளது. சந்தம் மலி=அழகு பொருந்திய; எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று கூறுவது நமக்கு, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்ற திருவாசகத் தொடரை நினைவூட்டுகின்றது.   

பொழிப்புரை:

எங்களின் சிந்தையில் இருந்து பிரியாத பெருமானே, எங்களது தலைவனே என்று தேவர்கள் புகலி நகர் வந்தடைந்து தொழுது போற்றி வணங்க சீர்காழி நகரில் வீற்றிருப்பவன் பெருமான்;  அத்தகைய பெருமானை மாலை நேரம் உள்ளிட்ட பல சந்தியா காலங்களிலும் முறையாக அர்ச்சனை செய்து சிறப்பான முறையில் தூபம் தீபம் முதலான உபசாரங்கள் செய்து அனைவரும் வழிபடுவதை விரும்பி சீர்காழி நகரில் அமர்ந்து உறைகின்றான்; அழகன் என்று அழைக்கப் படும் பெருமான், அழகிய கூந்தலை உடையவளும், பல நல்ல குணங்களை உடைய பெண்மணியும் ஆகிய பிராட்டியுடன் பொருந்தி உறைகின்ற தலம் சண்பை நகரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com