143. கொடியுடை மும்மதில் - பாடல் 8

143. கொடியுடை மும்மதில் - பாடல் 8

பல வித ஆயதங்களை ஏந்திய

பாடல் 8:

    தண்டணை தோள் இரு பத்தினொடும் தலை பத்து உடையானை
    ஒண்டணை மாதுமை தான் நடுங்க ஒரு கால் விரல் ஊன்றி
    மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
    வண்டு அணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்னகரே

விளக்கம்:

தண்டணை=தண்டு+அணை; அணை=சென்று சேர்ந்த, இங்கே கொண்ட என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்டணை=ஒண்டு+அணை, உடலுடன் ஒன்றாக இணைந்த; மிண்டு=செருக்கு; விகிர்தன்=மாறுபட்ட தன்மை உடையவன்; வைகும்=தாங்கும்; வண்டு என்பது இங்கே ஆண் வண்டினை குறிப்பதாக கொண்டு, தன்னோடும் என்ற சொல்லுக்கு பெண் வண்டு என்று விளக்கம் அளித்துள்ளனர்.
 
பொழிப்புரை:

தண்டு முதலான பல வித ஆயதங்களை ஏந்திய கைகளை உடைய இருபது தோள்களும் பத்து தலைகளும் கொண்ட அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மலையில் ஏற்பட்ட அசைவு காரணமாக, பெருமானின் உடலுடன்  இணைந்துள்ள உமையம்மை பயந்து நடுக்கம் அடைந்ததைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலினை கயிலாய மலையின் மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழே நெருக்கி, அவனது செருக்கினை அடக்கினார். பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் இசைத்து பாடியபோது, தனது இருப்பிடத்தை தகர்த்தெறிய முயன்றவன் என்பதையும் பொருட்படுத்தாமல், அவனுக்கு பல வரங்களை அருளியவர் சிவபெருமான். இந்த செய்கையால் அவர், மற்றைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றார். அத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமான், ஆண் வண்டுகள் தாங்கள் தழுவும் பெண் வண்டுகளுடன் மகிழ்ந்து தங்கும் சோலைகள் நிறைந்த வலம்புர நகரமாகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com