144. அடையார்தம் புரங்கள் - பாடல் 5

செம்மை நிறத்துடன்
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 5

பாடல் 5:

    மை சேர் கண்டர் அண்ட வாணர் வானவரும் துதிப்ப
    மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
    கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
    பை சேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சரமே

விளக்கம்:

மை சேர்=கருமை நிறம் பொருந்திய; மை சேர் என்று கூறுவதன் மூலம், பெருமானின் கழுத்தும் உடல் போன்று செம்மை நிறத்துடன் பண்டைய நாளில் விளங்கியது என்றும், பின்னாளில் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்தது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மேவி=விருப்பம் கொண்டு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு என்று கூறுவார்கள். அண்ட வாணர்=பல விதமான அண்டத்தில் வாழ்வோர்கள்; பொடி=திருநீறு; பை சேர்=பை போன்று; பை=பாம்பின் படம்; விழைவு=பற்று, அன்பு;   
  
பொழிப்புரை:

ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்த கழுத்தினை உடைய பெருமானை, பல அண்டங்களில் வாழ்வோரும் வானவர்களும் துதித்து போற்றுகின்றனர். இவ்வாறு அனைவராலும் போற்றப்படும் பெருமான், தனது உடல் முழுதும் திருநீறு பூசியவனாக , அடியார்கள் அவனது தன்மையை புகழ்ந்து பாட, விரும்பி அமர்ந்துள்ள இடம் பல்லவனீச்சரம் தலமாகும். தங்களது கைகளில் மிகவும் அதிகமாக வளையல் கொண்டவர்களும் பாம்பின் படம் போன்று புடைத்து காணப்படும் மார்பினை உடையவர்களும் உடைய இளமகளிர், பெருமான் பால் கொண்டுள்ள பற்று மற்றும் அளவு கடந்த காதலால், அவனது திருவடிகளை வழிபட ஒன்று சேர்கின்ற காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமே இறைவன் உறையும் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com