144. அடையார்தம் புரங்கள் - பாடல் 8

அடியார்களிடம் வினைகள் தங்காது
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 8


பாடல் 8:

    தேரரக்கன் மால் வரையைத் தெற்றி எடுக்க அவன்
    தார் அரக்கும் திண்முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
    கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெலாம் உணரப்
    பார் அரக்கம் பயில் பல்லவனீச்சரமே

விளக்கம்:

சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் தருபவன் என்றும் சம்ஹாரம் செய்பவன் என்றும் இரண்டு விதமான பொருள்கள் கூறப்படுகின்றன. தேவாரத் திருப்பதிகங்களில் பெருமானை சங்கரன் என்று  பல இடங்களிலும் மூவர் பெருமானர்கள் பல இடங்களில் அழைக்கின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

எந்த இடத்தில் பிறந்தாலும், எந்த விதமாக பிறந்தாலும் தனது அடியார்களாக இருந்தால், அங்கே சென்று அவர்களுக்கு அருள் புரியும் தன்மையாளன் சங்கரன் என்று சம்பந்தர் கூறுகின்ற பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏயும் என்றால் நறுமணம்மனம் பொருந்திய என்று பொருள். இந்த பாடல் பிரமபுரம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.40.6).

    எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு
    இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான் எருது ஏறி
    கொங்கு ஏயும் மலர்ச் சோலை குளிர் பிரமபுரத்து உறையும்
    சங்கே ஒத்து ஒளிர்மேனிச் சங்கரன் தன் தன்மைகளே

கரவீரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.58.2) சம்பந்தர் சங்கரனின் திருப்பாதங்களை வழிபடும் அடியார்களிடம் வினைகள் தங்காது என்று கூறுகின்றார். இன்பம் தருபவன் என்ற பொருள் அழகாக பொருந்துவதை நாம் இங்கே காணலாம்.

    தங்குமோ வினை தாழ்சடை மேலவன்
    திங்களோடு உடன் கூடிய
    கங்கையான் திகழும் கரவீரத்து எம்
    சங்கரன் கழல் சாரவே

சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.11.6) அப்பர் பிரான் தன்னைச் சார்ந்தவர்களுக்கு நன்மை புரிந்தும் சாராதவர்களுக்கு அருள் புரியாமலும் இருக்கும் சங்கரன், என்றும் அதே கொள்கையுடன் இருக்கின்றார் என்று கூறுகின்றார். சலம்= மாறுபாடு இல்லாத தன்மை; மேலும் அவர் குலத்தின் அடிப்படையில் எவரையும் நோக்காமல், அடியார்களின் பக்தி அடிப்படையில் நன்மை அளிப்பதால், தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் அன்பர்களுக்கு உயர்ந்த குலத்தில்  பிறந்தோர் அடையும் நற்பயன்களை சங்கரன் கொடுக்கின்றார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.  

    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
    நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
    குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
    நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.77.4) தனது சடையில் வைத்து, அழிந்த நிலையில் இருந்த பிறைச் சந்திரனை காத்து இன்பம் அளித்தவன் என்ற பொருள் பட, சந்திரன் சடையில் வைத்த சங்கரன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் நமச்சிவாய என்ற மந்திரத்தைச் சொல்லி திருநீறு அணிந்தால், நமது நோய்களும் வினைகளும் நெருப்பில் இடப்பட்ட விறகு போல் வெந்து சாம்பலாக மாறிவிடும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.  

    சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
    அந்தரத்து அமரர் பெம்மான் நல் வெள்ளூர்தியான் தன்
    மந்திர நமச்சிவாயவாக நீறு அணியப் பெற்றால்
    வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டன்றே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.11.6) சுந்தரர், தன் மீது அன்பு வைப்போர்க்கு இன்பம் விளைவித்தும் தன்னை விரும்பாதவர்களுக்கு துன்பம் இழைத்தும், சங்கரன் என்ற பெயருக்கு ஏற்ப நடந்து கொள்ளும் இறைவன் பொன் நிறத்த மேனியனாக விளங்குகின்றான் என்று கூறுகின்றார்.

    மின்னனையாள் திருமேனி விளங்க ஓர்
    தன்னமர் பாகமது ஆகிய சங்கரன்
    முன் நினையார் புரம் மூன்று எரி ஊட்டிய
    பொன்னனையான் உறை பூவணம் ஈதோ

கச்சி அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.10.9) சுந்தரர், உமையன்னை மகிழும் வண்ணம் சுடுகாட்டில் நடனம் ஆடும் சங்கரன் என்று கூறுகின்றார். தளவு=முல்லை அரும்பு; ஏல்=போன்ற; விராவுதல்=கலந்திருத்தல்; பெருமான் மீது ஐயப்பாடு ஏதுமின்றி அவனை வணங்கித் தொழுதால் தான் அவனது சேவடிகளைச் சென்றடையமுடியும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. முல்லை அரும்பு போன்ற சிரிப்பினை உடையவள் என்றும், எப்போதும் பெருமானுடன் கலந்திருக்கும் சிறப்பினைப் பெற்றவள் என்றும் உமையன்னையை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அங்கையவன்=உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தனக்கு தெளிவாக விளங்குபவன் பெருமான் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். ஒலி மிகுந்ததும் அகன்றதும் ஆகிய  மழுப் படையினை உடையவன் என்றும் கூறுகின்றார்.   

 சங்கையவர் புணர்தற்கு அறியான் தளவு ஏல் நகையாள் விரா மிகு சீர்
மங்கையவள் மகிழச் சுடுகாட்டிடை நட்ட நின்றாடிய சங்கரன் எம்
அங்கையவன் அனல் ஏந்துபவன் கனல் சேர் ஒளியன்னதொர் பேர் அகலம்
தம் கையவன் உறைகின்ற இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலில், மணிவாசகர் திருமாலுக்கு சக்கரம் அருளி மகிழச் செய்தவன்  என்ற பொருள் பட, சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு என்று குறிப்பிடுகின்றார். பங்கயம்=தாமரை மலர்கள்; இடந்து=பேர்த்து;

    பங்கயம் ஆயிரம் பூவினில் ஓரு பூக் குறையத்
    தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே
    சங்கரன் எம் பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு
    எங்கும் பரவி நாம் தோணோக்கம் ஆடாமோ  

திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தில் பெருமான் பற்றிய நினைப்பே தனது மனதில் அமுதம் போல் ஊறுகின்றது என்று மணிவாசகர் கூறுகின்றார். நினைத்தாலே இனிய உணர்வுகளை உண்டாக்கும் பெருமானை சங்கரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது அல்லவா. சட்டோ=செம்மையாக, நன்றாக, முழுவதுமாக; சிட்டாய=அறிவுடைப் பொருளாகிய, நுட்பமாக; தொழும்பர்கள்=இழிவான தன்மை உடையவர்கள்; பெருமானை நினையாத இழிந்த மனிதர்களை தான் அருவருத்து வெறுப்போம் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

    சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனைக்
    கெட்டேன் மறப்பேனோ கேடு படாத் திருவடியை
    ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்
    சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ  

தெற்றி=கைகளை பின்னி எடுக்க; தார் அரக்கும்=மாலைகள் அழுத்தும், மாலைகள் பதிந்த; கார்=மேகங்கள்; கார் அரக்கும்=மேகங்கள் அழுத்தி கடல் நீரினை முகரும்; கடல் கிளர்ந்த காலம்=கடல் பொங்கி எழுந்து  உலகினை மூழ்கடிக்கும் பிரளய காலம்; பாராரக்கம்=பாரார்+அக்கம்; பாரார்=உலகத்தவர்; அக்கம்= உருத்திராக்கம்; பயில்=பூண்டு போற்றி;   
     
பொழிப்புரை:

சிறந்த புட்பக விமானத்தை உடைய அரக்கன் இராவணன், பெருமை மிகுந்த கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மாலைகள் பதிந்த அவனது வலிமை மிகுந்த தலைகள் பத்தினையும் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு வருந்துமாறு தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றிய சங்கரன், பின்னர் அந்த அரக்கன் தனது தவறினை உணர்ந்து சாமகானம் பாடி தன்னைப் போற்றி புகழ்ந்த போது, சங்கரன் என்ற தனது பெயருக்கு ஏற்ப, அவனுக்கு பல நன்மைகள் புரிந்து அருள் செய்தார். மேகங்கள் அழுந்தி முகர்க்கும் நீரினை கொண்டுள்ள கடல் பொங்கி எழுந்து உலகினை மூழ்கடிக்கும் பிரளய காலத்திலும் அழியாது உணரப்படும் சிறந்த தன்மை உடையதும், உருத்திராக்கத்தின் சிறப்பினை உணர்ந்து மக்கள் அதனைப் போற்றி வாழும் மக்கள் நிறைந்த பெருமையினை உடையதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமே, அடியார்கள் இன்பமடையும் வண்ணம் பல நன்மைகள் புரியும் தலமாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com