144. அடையார்தம் புரங்கள் - பாடல் 10

உடுக்கை வாத்தியம்
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 10


பாடல் 10:

    உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
    கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
    தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
    பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சரமே    

விளக்கம்:

இடுக்கண்=துன்பம்; உடுக்கை=உடை மற்றும் உடுக்கை வாத்தியம்; கண்டறியாத இடம் என்று குறிப்பிட்டு சமணர்களும் புத்தர்களும் இறைவனை தரிசித்து மகிழும் வாய்ப்பினை இழந்தவர்கள் என்பதை சம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார் போலும். பயில்வார் என்ற சொல் இறைவனை குறிப்பதாக பொருள் கொண்டு பல இசைக் கருவிகளின் இசைக்கு பொருந்தும் வண்ணம் நடமாடும் பெருமானார், பண்டைய நாளிலிருந்தே தனது அடியார்களின் இடர்களை தீர்த்து வருகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.  

பொழிப்புரை:

வயிறார உண்டும் ஆடை ஏதும் இன்றியும் ஊரார் நகைக்கும் வண்ணம் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாமல் தங்களது உடலில் ஆடையை போர்த்த வண்ணம் திரியும் புத்தர்களும் கண்டறியாத இடம் பல்லவனீச்சரம் தலமாகும். தண்டு உடுக்கை தாளம் தக்கை ஆகிய கருவிகள் எழுப்பும் இசைக்கு பொருந்த நடனம் பயிலும் அடியார்களின்  துன்பங்களை, பண்டைய காலத்திலிருந்தே தீர்த்து அருள் புரியும் பெருமான் உறையும் இடம் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com