145. பரசு பாணியர் பாடல் - பாடல் 11

நல்ல குணங்களை
145. பரசு பாணியர் பாடல் - பாடல் 11

பாடல் 11:

வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்றில்லை மாதர் பல்லவனீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே

விளக்கம்:

ஊனம்=தடை; மாதர்=அழகிய; பெருமானை சிந்திக்கும் திறன் உடைய மாந்தர்கள், பல நல்ல குணங்களை பெறுவதால் அவர்கள் நல்ல செயல்களையே புரிவார்கள் எனவே அத்தகைய நற்செயல்கள் விளைவிக்கும் புண்ணியத்தின் பயனாக வானுலகினை ஆளும் தகுதி படைத்தவர்களாக இருப்பார் என்று இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அழகிய காவிரிப்பூம்பட்டினத்து நகரினில் உள்ள பல்லவனீச்சரம் தலத்தில் உறையும் இறைவனைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இந்த நற்றமிழ் பதிகத்தினை ஓதும் வல்லமை படைத்த அடியார்கள் பல நற்குணங்களை உடையவராக, நற்செயல்கள் செய்வதன் பயனாக வானுலகினை ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்களில், பொதுவாக சம்பந்தர் பதிகங்களில் காணப்படும் இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு ஆகிய எதுவும், காணப்படவில்லை. அத்தகைய சம்பந்தர் பதிகங்கள் மிகவும் அரிதாக காணப்படுகின்றன. குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தில் ஐந்து பாடல்கள் (ஆறாவதிலிருந்து பத்தாவது பாடல் வரை) சிதைந்து இருப்பதால், சம்பந்தர் இயற்றியபோது அத்தகைய குறிப்புகள் இடம் பெற்றனவா அல்லது அல்லவா என்பது குறித்து நாம் ஏதும் சொல்லமுடியவில்லை. இந்த பதிகத்தில் எஞ்சிய பாடல்களில் இந்த மூன்று குறிப்புகளில் ஒன்றும் இடம்பெறவில்லை. விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடல்களிலும் மேலே குறிப்பிட்ட மூன்று குறிப்புகளும் காணப்படவில்லை. வண்டரங்கப் புனல் என்று தொடங்கும் தோணிபுரம் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது பதிகம் அகத்துறை வகையைச் சார்ந்தது. தனது நிலையினை, பெருமான் பால் தான் தீராத காதல் கொண்டு அவனுடன் இணையமுடியாமல் ஏங்கும் நிலையினை, பெருமானுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் பலரையும் தூது அனுப்புவதாக அமைந்த பதிகம். இந்த பதிகத்திலும் இராவணனின் கயிலை நிகழ்ச்சி அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு எங்கும் காணப்படவில்லை. பைங்கோட்டு மலர்ப்புன்னை என்று தொடங்கும் செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகமும் வண்டரங்கப்புனல் என்று தொடங்கும் பதிகம் போன்று, அகத்துறையில் அமைந்து, மேல் குறிப்பிட்ட மூன்று குறிப்புகள் ஏதும் இல்லாமல் காணப்படுகின்றது.

இன்ன தன்மை என்று அறியமுடியாத பெருமானின் பலவிதமான தன்மைகளை, தான் அறிந்த வண்ணம் திருஞானசம்பந்தர் எடுத்துரைக்கும் பதிகம். வீணை முதலான பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் பெற்றவர் பெருமான் என்று பதிகத்தின் முதல் மற்றும் நான்காவது பாடல்களிலும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவர் என்று இரண்டாவது பாடலிலும் பவளம் போன்ற திருமேனியை உடையவர் என்று மூன்றாவது பாடலிலும், உலகத்தவர் உய்யும் பொருட்டு பலியேற்க பல இடங்களுக்கும் செல்பவர் என்று ஐந்தாவது பாடலிலும், பிராட்டியையும் திருமாலையும் தனது உடலில் ஏற்றுக் கொண்டமையால் பச்சை நிறத்து திருமேனியை உடையவர் என்று ஆறாவது பாடலிலும், அனைத்து இடங்களிலும் பரவி இருப்பவர் என்று ஏழாவது பாடலிலும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவர் என்று எட்டாவது பாடலிலும், அனைத்து உயிர்களிலும் கலந்து நிற்பவர் என்று ஒன்பதாவது பாடலிலும், அழியும் தன்மையிலிருந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் ஏற்று அழியாமல் வாழவைத்தவர் என்று பத்தாவது பாடலிலும் உணர்த்தும் ஞானசம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் நற்குணங்கள் பொருந்தியவராக விளங்கி, நற்செயல்களையே புரிந்து, இம்மையில் புகழும் மறுமையில் வானுலகை ஆளும் வாய்ப்பும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்று கூறுகின்றார். பெருமானின் பல தன்மைகளை இந்த பதிகம் மூலம் புரிந்து கொண்ட நாமும், இந்த பதிகத்தை உரிய முறையினில் பாடி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இம்மையிலும் மறுமையிலும் உய்வினை அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com