146. மண் புகார் வான் - பாடல் 3

பெருமானை தினந்தோறும் வழிபட வேண்டும்
146. மண் புகார் வான் - பாடல் 3


பாடல் 3:

    நீ நாளும் நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்
    சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே
    பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
    நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

விளக்கம்:

பெருமானின் கருணைத் தன்மையினை புரிந்து கொண்ட சான்றோர்கள், அவனது திருப்பாதங்களைச் சார்ந்தும் அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டும் அவனைப் பணிந்து வணங்குகின்றனர் என்று முதல் இரண்டு பாடல்களில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் நாமும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.  சாநாள்=இறக்கும் நாள்; உலகில் ஒருவர் எவ்வளவு நாட்கள் இருப்பர், என்று இறப்பர் என்பதை எவரும் அறிய முடியாது என்பதால் ஒருவன் தாமதம் ஏதும் செய்யாமல், இப்போதிலிருந்தே பெருமானை நாள்தோறும் வழிபடத் தொடங்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போல், சம்பந்தர் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல். பெருமானை தினந்தோறும் வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுவது போல், அப்பரும் சுந்தரரும் உணர்த்தும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

குறுக்கை வீரட்டம் தலத்து பாடல் ஒன்றினில் (4.49.2) தினமும் பெருமானை வழிபட்டுவந்த  அந்தணச் சிறுவனை காப்பாற்றும் பொருட்டு கூற்றுவனை குமைத்த பெருமானின் செய்கை  குறிப்பிடப்படுகின்றது. சாற்று நாள்=சிவபெருமான், மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு முனிவருக்கு, குழந்தை வரம் அருளிய போது, ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் என்று வரையறுத்து சிறுவனின் ஆயுட்காலம் முடியும் நாளினை குறிப்பிட்டது.

    நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
    ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணாளரைக் கொல்வான்
    சாற்று நாள் அற்றது என்று தருமராசர்க்காய் வந்த
    கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே   

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.52.5) ஞானசம்பந்தர் தேவர்கள், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது சிந்தையில் நினையாமல் தினமும் வாழ்கின்றனர் என்று கூறுகின்றார். சிறுவர்களாக இருந்த போதிலும் பெருமானின் பெருமையினை புரிந்து கொண்டு பெருமானுக்கு தொண்டு செய்த, சண்டீசர் மற்றும் மார்க்கண்டேயர் ஆகியோரை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

    கோலமாய நீள் மதில் கூடல் ஆலவாயிலாய்
    பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
    நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
    சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே  

தினமும் பெருமானை நினைத்து வணங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்த விதமான  நெகிழ்வோ தளர்ச்சியோ இல்லாமல் விருப்பத்துடன் பெருமானை வணங்க வேண்டும் என்பதை இங்கே உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய கழிப்பாலைத் தலத்து பாடலை நாம் இங்கே காண்போம். நெளிவு=நெகிழ்வு, தளர்ச்சி: வளி=மூச்சுக் காற்று; உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் சில நாட்கள் சிலர் வாழலாம், ஆனால் காற்றின்றி எவரும் வாழ முடியாது. எனவே அனைவரையும், தவத்தினில் ஈடுபட்டு உணவின்றி, தண்ணீரின்றி வாழும் முனிவர்களையும் உள்ளடக்கி, வளியுண்டார் என்று, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

நேரிழையாள்=சிறந்த ஆபரணங்களை அணிந்தவள், இங்கே உமையம்மை: கண்டல்=தாழை:

      நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள் நித்தலும்  நேரிழையாள் ஆய
    ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்து அமர்ந்து அடியார்         உள்கி ஏத்த
   களி வண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்
   வளி உண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே  

 
இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான தளர்ச்சியும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்.

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தினில், குண்டையூர் கிழார் தனக்கு அளித்த நெற்குவியலை திருவாரூர் கொண்டு சேர்ப்பதற்கு பெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறும் சுந்தரர், தனது தகுதியை குறிப்பிட்டு பெருமான் உதவி செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார். அவரது தகுதி தான் யாது. நீண்ட காலமாக தினமும் பெருமானை நினைத்தவாறு தொடர்ந்து தினமும் கை தொழுது வந்ததே தனது தகுதி என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். தினமும் தவறாது கைதொழுது வந்தால், பெருமானிடம் எந்த உதவியையும் உரிமையுடன் கோரும் தகுதி கிடைக்கும் என்பது சுந்தரரால் நமக்கு உணர்த்தப் படுகின்றது. அட்டித்தருதல்=சேர்ப்பித்தல்;

    நீள நினைந்து அடியேன் உனை நித்தலும் கை தொழுவேன்
    வாளன கண் மடவாள் வாடி வருந்தாமே
    கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்
    ஆளிலை  எம்பெருமான் அவை அட்டிதரப் பணியே
 

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.3) சுந்தரர், நஞ்சணிந்த கண்டனாகிய பெருமானை தினமும் வணங்கி நமது வினைகளை முற்றிலும் போக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். மாமணிச் சோதியான்=மாணிக்கம் ;போன்று ஒளிவீசுபவன்;  காளகண்டன்=ஆலகால விடத்தினை கழுத்தினில் தேக்கியவன்.

    நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
    ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
    தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
    காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே
 

நவின்று=விருப்பத்துடன்; புகழ்நாமம்=பெருமானது புகழினை குறிப்பிடும் திருநாமங்கள்; கங்காதரர், காலகாலர், நடராஜர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், மாதொருபாகர், பிக்ஷாடனர்,  சந்திரசேகரர், பாசுபதர், போன்ற திருநாமங்கள் அவரது கருணையையும் ஆற்றலையும் உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளன. இந்த பாடலில் நமது தலை பெருமானுக்கு அர்ச்சனை செய்ய பயன்படும் பூக்களை சுமந்து செல்லவேண்டும் என்றும் காதுகள் அவனது புகழினை உணர்த்தும் திருநாமங்களை கேட்க வேண்டும் என்றும் நமது நா விருப்பத்துடன் அவனது பெயரினை சொல்லவேண்டும் என்று சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அப்பர் பெருமான் அருளிய அங்கமாலை பதிகத்து பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. நமது செவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.9.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    செவிகாள் கேண்மின்களோ - சிவன்     எம்மிறை செம்பவள
    எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில் (பதிக எண்: 5.90), அப்பர் பிரான். சிவபிரானின் புகழினைக் கேளாத செவியினை உடையவர்கள் இழிந்தவர்கள் என்று சாடுவதையும், அவர்கள் தங்கள் வாழ்க்கையினை வீணாகக் கழித்து மண்ணோடு மண்ணாகி மங்குவதைத் தவிர, பயனுள்ள செயல்கள் ஏதும் செய்வதில்லை என்றும் கூறுவதை நாம் உணரலாம். சுரை=உட்குழி; தோளாத சுரை=துளையிடப்படாத உட்குழி.

    ஆளாகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தில் அப்பர் பிரான், சிவபெருமானின் புகழினைக் கேளாத மனிதர்களை துளையிலாச் செவித் தொண்டர்கள்  என்று குறிப்பிடுகின்றார். செவித்துளை வழியாக ஒலி அலைகள் புகுந்து செவிப்பறை மீது மோதுவதால் தான் நம்மால் பல்வேறு ஒலிகளை உணரமுடிகின்றது சிவபிரானின் புகழைக் கேட்காத செவிகள், செவிகள் என்று அழைக்கப்படும் தகுதியை இழந்துவிட்டதால், அவற்றை துளையிலாச் செவிகள் என்று குறிப்பிடும் இந்த பாடல் (5.66.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இளைய காலத்தினை, சிவபெருமானின் புகழைக் கேட்காது வீணே கழித்திருந்தாலும், இப்போதாவது அவனைப் பற்றுக்கோடாகக் கருதி உய்யவேண்டும் என்ற அறிவுரை இங்கே கூறப்படுகின்றது. முதிய காலத்தில், முதுகு வளைத்து கூனாக மாறிவிடும் நிலை, இங்கே வளையும் காலம் என்று குறிப்பிடப்படுகின்றது.  

    இளைய காலம் எம்மானை அடைகிலாத்
    துளையிலாச் செவித் தொண்டர்காள் நும்முடல்
    வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்
    களைகணாகக் கருதி நீர் உய்ம்மினே  
 

ஆமாத்தூர் தலத்துப் பதிகத்தின் (2.44) பாடலில் சம்பந்தர், சிவபெருமானின் புகழை கேட்காத காதுகள், காதுகளே அல்ல என்று கூறுகின்றார். தாள்=திருவடி. நம்பன்=விருப்பத்திற்கு உரியவன்; ஆள் ஆனார்=அடிமையாக மாறியவர்கள். சிவபிரானது திருநாமத்தையும் அவனது புகழினையும் கேட்ட அடியார்கள் அவன் மீது பெருவிருப்பு கொண்டு அவனுக்கு அடியவர்களாக மாறி, அவனைப் புகழ்ந்து வணங்கினார்கள் என்று இங்கே கூறுகினார். அவ்வாறு மாறாத மனிதர்களின் செவிகள் செவிட்டுச் செவிகள் என்று சாடுவதை நாம் உணரலாம். சிவபிரானை வழிபடாத மனிதர்களை ஆளாகார் (மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில்) என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணர்ந்தோம். அதே கருத்து உடன்மறையாக சம்பந்தர் கூறுவதை நாம் இங்கே காணலாம். சிவபெருமானைத் தொழும் அடியார்களை ஆளானார் என்று கூறுகின்றார். இதன் மூலம், சிவபிரானைத் தொழாத மனிதர்கள் ஆளாகாதார் என்பது உணர்த்தப்படுகின்றது.

    தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்
    நாள் ஆதிரை என்றே நம்பன் தன் நாமத்தால்
    ஆளானார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
    கேளார் செவி எல்லாம் கேளாச் செவிகளே

செவிகளின் செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில பாடல்களை சிந்தித்த நாம் இப்போது நமது வாய் என்ன செய்யவேண்டும் என்று கூறும் அங்கமாலை பதிகத்து பாடலை (4.9.5) காண்போம்.

    வாயே வாழ்த்து கண்டாய் - மதயானை உரி போர்த்துப்
    பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்

மேலே குறிப்பிட்ட ஆமாத்தூர் பதிகத்தின் (2.44) இன்னொரு பாடலில் சம்பந்தர், சிவபெருமானின் புகழினைக் கூறாத நாக்கினை உடையவர்கள், நாவிருந்தும் ஊமையராக கருதப் படுவார்கள் என்ற கருத்தினில், ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே என்று கூறுகின்றார்.

    மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
    வேறாக நில்லாத வேடமே காட்டினான்
    ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
    கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், அப்பர் பிரான், தான் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை, சிவபிரானை வாழ்த்தி துதிக்காமல் கழித்து விட்டதை நினைந்து மனம் வருந்துவதை நாம் உணரலாம். சிவபெருமானை அந்நாள் வரை நினைக்காது இருந்ததால் தனது மனம் அறியாமையில் மூழ்கி இருந்தது என்பதை உணர்த்தும் வகையில் மடநெஞ்சம் என்று அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (பதிக எண்: 4.30) ஒரு பாடலில் அப்பர் பிரான், நமக்கு வாயினை சிவபெருமான் அளித்தன் காரணம், அவனை வாழ்த்துவதற்கு என்று குறிப்பிடுகின்றார். வாமன் என்று இங்கே தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்ட உமை அம்மையை குறிப்பிடுகின்றார். உமை அம்மையை வணங்காமல், சிவபெருமானை மட்டும் வணங்கியவராக இருந்தவர் பிருங்கி முனிவர். சிவபெருமானும் அன்னையும் ஒருவருக்கொருவர் நெருங்கி அமர்ந்திருந்த போதும், அவர்களின் இடையே ஒரு வண்டு வடிவத்தில் புகுந்து, சிவபெருமானை மட்டும் வலம் வந்த அடியாராகத் திகழ்ந்தவர் பிருங்கி முனிவர். உமை அம்மையை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதன் மூலம், பிருங்கி முனிவர் உமையம்மையை வழிபடுமாறு செய்தவர் சிவபெருமான். மாதொரு பாகனாக காட்சி தரும் திருச்செங்கோடுத் தலத்தில், அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில், நாம் கோலை ஊன்றியபடி நடக்கும் பிருங்கி முனிவரின் உருவத்தையும் காணலாம்.

வாமன் என்ற சொல் வாமனன் என்ற சொல்லின் திரிபு என்று விளக்கம் அளித்து, வாமனனாக உருவெடுத்த திருமாலை குறிக்கும் சொல் என்றும் கூறுவார்கள். திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றதன் மூலம், அனைவரும் திருமாலை வணங்க வைத்த சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். ஆ மன் நெய்=பசுக்கள் அளிக்கும், பால், தயிர், நெய் முதலான பொருட்கள்.

    வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
    சோமனைச் சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
    ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பென்னும் பாசம் வைத்தார்
    காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தில், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் நாக்கினை புகழ்ந்து கூறும் அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வாயினை திருவாய் என்று அடைமொழியுடன் ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில் சிறப்பிக்கின்றார். பொலிதல் என்றால் அழகுடன் விளங்குதல் என்று பொருள். சிவபிரானின் நாமத்தை நாம் சொல்வதால் நமது வாய் அழகு பெற்று விளங்கும் என்ற கருத்தும் இங்கே கூறப்படுகின்றது. இந்த பாடல் மூலம், அப்பர் பிரான், நாம் திருநீறு இட்டுக் கொள்ளும் போது சிவாயநம என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்.

    கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துடையேன்
    உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
    திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்
    தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே    
     

பொழிப்புரை:

நன்னெஞ்சே, தாம் என்று இறப்போம் என்பதையும் தாம் இந்த உலகில் இனியும் வாழும் நாட்கள் எத்தனை என்பதையும் அறிந்தவர் எவரும் இல்லை; எனவே நீ சாய்க்காடு தலத்தினை சென்றடைந்து, பெருமானுக்கு தேவையான பூக்களை உனது தலையில் சுமந்து கொண்டு சென்று தொண்டு புரிவாயாக. மேலும் அவனது புகழினை உணர்த்தும் அவனது திருநாமங்களைக் கேட்டு, அவனது திருநாமங்களை உனது நாவினால் விருப்பத்துடன் நாள்தோறும் சொல்லிப் புகழ்ந்தால், நீ நல்வினைப் பயன்களைப் பெறலாம்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com