141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 3

காமம் குரோதம் மோகம்
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 3


பாடல் 3:

    மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
    வானை உள்கச் செய்யும் வழிகள் காட்டுவ்வன
    தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
    ஆனஞ்சு ஆடும் அடிகள் வேடங்களே

விளக்கம்:

மாசு=குற்றங்கள்; மானம்=பெருமை; வான்=உயர்ந்த உலகம், இங்கே சிவலோகத்தை குறிக்கின்றது. ஆனஞ்சு=பசுக்களிளிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள். உள்குதல்= நினைத்தல்; காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்களும் உயிர்களின் உட்பகைகளாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்கள் தாம் மனிதனை பல வகையான தீய செயல்களை செய்யத் தூண்டுகின்றன. பெருமானின் அடியார்களாக வாழும் அன்பர்களுக்கு இந்த குற்றங்கள் இருப்பதில்லை. இத்தகைய குற்றங்கள் இருப்பவன் எவரேனும் பெருமானின் அடியாராக மாறினால், அவரது குற்றங்களும் களையப்படும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. தேன் என்ற சொல் இங்கே தேனை சேகரிக்கும் பெண் தேனீக்களை குறிப்பிடுகின்றது. பெருமானின் அடையாளங்களில் ஒன்றான சடைமுடி நீராட்டப்படும் தன்மை இங்கே கூறப் பட்டுள்ளது.  

பொழிப்புரை:

திருந்துதேவன்குடி தலத்து பெருமானின் அடையாளங்கள், அடியார்களுக்கு பெருமையை சேர்க்கின்றன; அவர்களின் மனதில் உள்ள குற்றங்களை நீக்குகின்றன. முக்தி உலகத்தை அடையவேண்டும் என்ற ஆவலை அடியார்களின் உள்ளத்தில் உண்டாக்கி, அந்த  உலகம் செல்வதற்கான வழிகளை காட்டுகின்றன. இத்தகைய அடையாளங்களை உடைய  இறைவன், தேனை சேகரிக்கும் பெண் வண்டுகளும் ஆண் வண்டுகளும் இசை பாடும் சோலைகள் நிறைந்த தேவன்குடி தலத்து இறைவன், பசுக்களிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு அபிடேகம் செய்யப்படும் சடைமுடியை உடையவனாக விளங்குகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com