141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 4

முக்தி நெறிக்கு
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 4

பாடல் 4:

    செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன
    கவிகள் பாடுவ்வன கண் குளிர்விப்பன
    புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
    அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே

விளக்கம்:

முந்தைய பாடலில் பெருமானின் அடையாளங்கள் முக்தி நெறிக்கு வழி காட்டுகின்றன என்று குறிப்பிட்டு மறுமையில் இன்பம் அளிக்கும் தன்மையை உணர்த்திய சம்பந்தர், அந்த அடையாளங்கள் இம்மையில் புலன்களுக்கு எவ்வாறு இன்பம் அளிக்கின்றன என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஆர்வித்தல்=நிறைவித்தல்; பெருமானின் அடையாளங்களின் பெருமையை குறிப்பிடும் சொற்கள் காதுகளுக்கு மிகவும் இனிமையையும் குளிர்ச்சியையும் தருவதாக உள்ளன என்று சம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பெருமான் நீற்றறையில் பாடிய பதிகத்தின் முதல் பாடலை (5.90.1) நினைவுக்கு கொண்டுவருகின்றது. வீங்கு=பெருகிய, இளவேனில்=சித்திரை, வைகாசி மாதங்கள். மூசு வண்டு=மொய்க்கும் வண்டு. அறை=ஒலிக்கின்ற. வெப்பத்தைத் தரும் நீற்றறையின் உள்ளே அமர்ந்திருக்கும் எவருக்கும் வெப்பத்தை அளிக்கும் பொருட்களே நினைவுக்கு வரும். ஆனால் சிவபிரானது அருளால் வெப்பத்தைக் கொடுக்கும் நீற்றறையும் குளிர்ந்த காரணத்தால் நாவுக்கரசருக்கு நீற்றறை உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐந்து புலன்களும் இன்பமான சூழ்நிலையினை உணர்ந்த தன்மையை, ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கும் பொருட்களை இங்கே குறிப்பிட்டு நமக்கு நாவுக்கரசர் இங்கே உணர்த்துகின்றார்.  அத்தகைய சூழ்நிலைக்கு இறைவனது திருவடிகளே காரணம் என்பதையும் அந்த சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இங்கே நமக்கு தெரிவிக்கின்றார்.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலே

திருநாவுக்கரசர் நீற்றறையில் அனுபவித்த சூழ்நிலையை குறிப்பிடும் சேக்கிழார் இறைவன் அருளால் குளிர்ந்த அந்த சூழ்நிலை ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சேக்கிழார், நாவுக்கரசுப் பெருமான் தனது பதிகத்தில் பயன்படுத்திய சொற்களைக் கையாண்டுள்ளது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.

    வெய்ய நீற்றறை அது தான் வீங்கிள வேனில் பருவந்
    தைவரு தண் தென்றல் அணை  தண்கழுநீர் தடம் போன்று     
    மெய்யொளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
    ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே

தனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொங்குதல்=பெருகுதல்; அவிகள்=வேள்வியில் அளிக்கப்படும் அன்னம் முதலான பொருட்கள்; ஹவிஸ் என்ற வடமொழிச் சொல் அவி என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது.  பதிகத்தின் முதல் பாடலில் முனிவர்களால் இந்த அடியாளங்களின் பெருமை உணரப்பட்டு தியானிக்கப் படுகின்றன என்று குறிப்பிடும் சம்பந்தர், இந்த பாடலில் இந்த அடையாளங்கள் கவிகளை கவிதைகள் இயற்றத் தூண்டுகின்றன என்று கூறுகின்றார். சிந்தை சேர்விப்பன என்று குறிப்பிட்டு, பெருமானின் அடையாளங்களின் பெருமைகள் அடியார்களின் சிந்தை சென்றடைந்து நிலையாக ஆங்கே இடம் பெறுகின்றன என்று கூறுகின்றார். இவ்வாறு சிந்தையில் நிலையாக இடம் பெற்றால், அந்த சிந்தனைகள் கவிதையாக வெளிப்படுவது இயற்கை தானே. புவிகள்=நிலவளம்; உய்த்தல்=மகிழ்ச்சி அடைதல்;         

பொழிப்புரை:

பெருமானின் அடையாளங்களின் பெருமை கேட்போர் செவிகளுக்கு இனிமை நிறைந்ததாக உள்ளது; அடியார்களின் சிந்தையில் அவைகளின் பெருமைகள் சென்றடைந்து கவிதையாக வடிவம் எடுக்கின்றன; காண்போரின் கண்களை குளிர்விக்கின்றன; நிலவளம் பெருகும் வண்ணம் பொங்கிப் பாயும் ஆற்றினை உடைய திருந்துதேவன்குடி தலத்தில் உள்ள இறைவன் மகிழும் வண்ணம், தலத்து மக்களால் வேத வேள்விகள் வளர்த்து அவிகள் அளித்து ஆராதிக்கப் படுகின்றான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com