143. கொடியுடை மும்மதில் - பாடல் 3

சிவபெருமானின் மீது கோபம்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 3


பாடல் 3:

    நொய்யதோர் மான்மறி கை விரலின் நுனை மேல் நிலையாக்கி
    மெய் எரி மேனி வெண்ணீறு பூசி விரிபுன்சடை தாழ
    மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
    வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன்னகரே

விளக்கம்:

நொய்யது=இலேசான உடலினை உடைய; மான்மறி=மான் கன்று; சிவபெருமானின் மீது கோபம் கொண்ட தாருகவனத்து முனிவர்கள், எதிரிகளை அழிக்க செய்யப்படும் அபிசார வேள்வி ஒன்றினை செய்து அந்த வேள்வியிலிருந்து மான் ஒன்றினை தோற்றுவித்து, அந்த மானுக்கு கொலைவெறி ஊட்டி சிவபெருமான் மீது ஏவினார்கள். ஆனால் சிவபெருமான், அந்த மானின் கொலைவெறியை தணித்து, இயல்பான விளையாட்டு குணம் கொண்டு துள்ளித் திரியும் மான்கன்றாக மாற்றி, தனது இடது கை விரல்களின் நுனியில் வைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. இருள் சூழ்ந்த சோலைகள் என்று இங்கே கூறப்படுகின்றது. வளமாக வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று இடைவெளி ஏதுமின்றி பின்னிப் பிணைந்து இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகுவதை தடுக்கின்றன. எனவே சோலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வைகல்=நாள்தோறும்;     

பொழிப்புரை:

மெலிந்த உடலினை உடைய மான்கன்றினை, தாருகவனத்து முனிவர்களால் கொலைவெறி ஊட்டி ஏவிவிடப்பட்ட மான்கன்றினை, அதன் பழைய இயல்பினுக்கு மாற்றி, துள்ளி விளையாடும் மான்கன்றாக மாற்றி தனது இடது கை விரல் நுனியினில் நிலையாக நிற்கும் வண்ணம் ஏந்தி இருப்பவர் சிவபெருமான். அவர், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் உள்ள தனது திருமேனியில் வெண்ணீறு பூசியவராகவும், செம்பட்டை  நிறத்தில் உள்ள சடை விரிந்து தாழும் தன்மையுடன் விளங்குகின்றார். இந்த பெருமான்,   சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகா வண்ணம் செழிப்புடன் நெருக்கமாக வளர்ந்ததால் இருள் சூழ்ந்தும் நறுமணத்துடனும் காணப்படும் சோலைகளை உடையதும்,  நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் திருவிழா போன்று முழவதிர நடைபெறும் தலமும் ஆகிய வலம்புரம் நன்னகரினில் உறைகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com