138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 3

மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 3


பாடல் 3:

    துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்
    தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்
     அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல்
    கொக்கிறகு அணிந்தவன் கோடிகாவு சேர்மினே
 

விளக்கம்:

சோர்வு=இளைப்பு; மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லற்படுவதால் உயிர் வருந்தி இளைப்பதை சோர்வு என்று சம்பந்தர் கூறுகின்றார். சிவபுராணத்தில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று மணிவாசகர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. இவ்வாறு உயிர் வருத்தம் அடைவதை நாம் உணர்வதில்லை. எனவே தான்   அருளாளர்கள், பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு உயிர் தவிப்பதை நமக்கு உணர்த்தி, அந்த உயிரினுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளதை நினைவூட்டுகின்றனர்.

இந்த பாடலில் கொக்கிறகு அணிந்தவன் என்று பெருமானை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.  குரண்டாசுரன் என்ற அரக்கன், கொக்கின் உருவம் கொண்டு மனிதர்களை துன்புறுத்தி வந்தான் என்றும், பெருமான் அந்த கொக்கினை அழித்து மனிதர்களின் இடரினை தீர்த்ததும் அன்றி, கொக்கை அழித்ததன் அடையாளமாக கொக்கிறகினை தனது தலையில் அணிந்து கொண்டார் என்று புராணம் கூறுகின்றது. கந்த புராணத்திலும் இந்த செய்தி சொல்லப்படுகின்றது (பாடல் எண். 8--9--64)  இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.41.2), திருஞானசம்பந்தர், பெருமான் தனது சடையில் வில்வம் மற்றும் ஊமத்தை கொன்றை எருக்கு ஆகிய மலர்களுடன் கொக்கின் இறகையும் சூட்டிக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்.

    கொக்கிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்
    அக்கினோடு ஆமை பூண்டு அழகாக அனலது ஆடும் எம் அடிகள்
    மிக்க நால்வேத வேள்வி எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்
    பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே  

நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது (1.85.2) அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர், பெருமான் ஒளி வீசுவதும் தாழ்ந்தும் காணப்படும் தனது சடையினில் கொக்கின் இறகுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் சூட்டிக் கொண்டு திகழ்கின்றான் என்று கூறுகின்றார்.

    தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
    துக்கம் பல செய்து சுடர் பொற்சடை தாழக்
    கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
    நக்கன் நமை ஆள்வான் நல்ல நகரானே

காடது அணிகலம் என்று தொடங்கும் மொழிமாற்றுப் பதிகத்தின் பாடலில் ஞானசம்பந்தர் (1.117.6) இறைவன் கொக்கின் இறகினை சூடிக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்து பாடல்களில் பல சொற்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. சாத்துவர் கோவணம், பாசம் தடக்கையில் ஏந்துவர், தம் கூத்தவர், கச்சுக் குலவி நின்று ஆடுவர், கொக்கிறகும் சூடுவர், பேர்த்தவர் பல்படை பேயவை என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பேர்த்தவர்=காலினை பெயர்த்து நின்று நடனமாடியவர்; இந்த பாடலில் சம்பந்தர் கச்சு குலவி நின்று ஆடுவர் என்று கூறுகின்றார். குலவி=விளங்கித் தோன்றும் வண்ணம்; நடராஜப் பெருமானின் நடனத் தோற்றத்தை காணும் நாம் அவரது இடுப்பினில் அணிந்துள்ள கச்சின் ஒரு முனை வெளிவட்டத்தை தொடும் நிலையில் அமைந்துள்ளதை காணலாம். பொதுவாக நிலையாக நிற்கும் ஒருவரின் இடுப்புக் கச்சு தரையை நோக்கியே சரிந்து காணப்படும். ஆனால் இடைவிடாது நடனம் ஆடும் பெருமானின் கச்சும், அவரது நடனச் சுழற்சிக்கு ஏற்றவாறு ஆடுவதால், கீழ்நோக்கி சரிந்து நில்லாமல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. இதனையே விளங்கித் தோன்றும் கச்சு என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தம் கூத்தவர் என்று ஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் ஆடும் கூத்து அவருக்கே உரியது; வேறு எவராலும் ஆடமுடியாத கூத்து என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

    சாத்துவர் பாசம் தடக்கையில் ஏந்துவர் கோவணம் தம்
    கூத்தவர் கச்சுக் குலவி நின்று ஆடுவர் கொக்கிறகும்
    பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
    பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.65.2) கொக்கின் இறகினை அணிந்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் எதிர்மறையாக கூறிய அனைத்தையும் மாற்றி பொருள் கொள்ளவேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.

    கூரம்பது இலர் போலும் கொக்கின் இறகிலர் போலும்
    ஆரமும் பூண்டிலர் போலும்  ஆமை அணிந்திலர் போலும்
    தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு  அருளிலர் போலும்
    பேரும் பல இலர் போலும் பிரமபுரத்து அமர்ந்தாரே

திருநாரையூர் தலத்தில் கொக்கு பெருமானை நோக்கி செய்த வழிபாட்டினை நினவு கூர்ந்த ஞானசம்பந்தருக்கு கொக்கின் இறகினை பெருமான் சூடிக் கொண்டு வரலாறு நினைவுக்கு வந்தது போலும். பெருமானை திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.107.6) சம்பந்தர் இறைவன் கொக்கிறகு அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். குழகாக=இளமையுடன்: குலாய=செழுமை மிகுந்த; புகல்=திருவருள் சக்தி பதிதல்; நாரையூர்ப் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் அடியார்களின் மனதினில் திருவருளின் சக்தி பதியும் என்று சம்பந்தர் கூறுகின்றார்.  

     கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
    அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக
    நக்கமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்
    புக்கமரும் மனத்தோர்கள் தம்மை புணரும் புகல் தானே  

திருவாரூர் தலத்தில் தான், மனக்கண்ணில் கண்ட பெருமானின் உருவத்தை விவரிக்கும் பாடல் ஒன்றினில் (4.19.2) பெருமான் அணிந்திருக்கும் கொக்கிறகு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பூதகணங்கள் சூழ பல ஊர்கள் சென்று பிச்சை ஏற்கும் பெருமான், நிறைந்த கோவணமும் சங்குமணி மாலையும் இடுப்பினில் அணிந்தவராக காணப்படுகின்றார் என்றும் இங்கே கூறுகின்றார்.  

    பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
    புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்
    கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு
    அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.72.8) கொக்கின் இறகு இறைவனின் சடையில் மலர்ந்து இருப்பதாக கூறுகின்றார். கடிகுரல்=கடுமையான குரல்; விளியர்=ஆரவாரம் செய்பவர்; மகா சங்கார காலத்தில் மிகவும் கடுமையான குரலில் ஆரவாரம் செய்பவராக இறைவன் கருதப் படுகின்றார். கோடு= கொம்பு;, கிளை;

    காடு இடம் உடையர் போலும் கடிகுரல் விளியர் போலும்
    வேடுரு உடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்
    கோடலர் வன்னித் தும்பை கொக்கிறகு அலர்ந்த கொன்றை
    ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

நாரை என்றால் கொக்கு என்று பொருள். கொக்கு வழிபாட்டு உய்வினை அடைந்த தலம் திருநாரையூர். அந்த தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் கொக்கிறகினை அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது போலும். தூவல்=இறகு; கொக்கின் இறகு பூண்டு இறைவன் இருப்பது மிகவும் அழகாக உள்ளது என்று இந்த பதிகத்தின் பாடலில் (5.55.4) குறிப்பிடுகின்றார். கொக்கின் இறகு, வில்வ இலைகள், மண்டையோட்டு மாலை, விரிந்த சடை, குறைந்த ஆடை, எலும்பு மாலை ஆகியவை அணிந்த பெருமானாக தான் கண்டதை அப்பர் பிரான் இங்கே எடுத்துரைக்கின்றார். மேலே குறிப்பிட்ட பொருட்களில் எதுவும் எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதை நாம் உணரலாம். ஆனாலும் இவை அனைத்தும் அணிந்த பெருமான் அழகுடன் திகழ்வதால், தான் வியப்புக்கு உள்ளாகியதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.    

    கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
    மிக்க வெண்டலை மாலை விரிசடை
    நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு
    அக்கின் ஆரமும் அம்ம அழகிதே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய ஒரு பாடல் (5.80.5) கொக்கிறகர் என்றே தொடங்குகின்றது. கொக்கின் இறகை சூடியும், எலும்பு மாலைகளையும் அணிந்தும், மிகவும் குறைந்த ஆடைகளுடன் காண்போர் நகைக்கும் தோற்றத்துடன் இருக்கும் சிவபெருமானை எளியவர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று உணர்த்தும் வண்ணம் அவர், செருக்கு மிகுந்த மூன்று அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானது வீரம் மிகுந்த செயலைக் கேட்ட நாம், அவரிடம் அச்சம் கொண்டு அவரை அணுக தயக்கம் காட்டுவோம் என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு வந்தது போலும். அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் வண்ணம், சிவபெருமான் கருணை மிகுந்தவர் என்று, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்ததை நினைவூட்டி, பெருமான் நம்மை நன்றாக அறிந்தவர் என்று இங்கே உணர்த்தும் நயத்தையும் இந்த பாடலில் நாம் காணலாம்.

    கொக்கிறகர் குளிர் மதிச் சென்னியர்
    மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்
    அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
    நக்கு உருவரும் நம்மை அறிவரே

சுண்ண வெண்சந்தன என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.2.2) காண்டகு புள்ளின் சிறகு என்று பெருமான் கொக்கின் இறகினை அணிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உணர்த்தப்படும் பெருமானின் அடையாளங்கள் அவருக்கே உரியதாக தனித்துவம் பெற்று விளங்குவதை நாம் உணரலாம். இத்தகைய அடையாளங்கள் உடைய பெருமானின் அடியானாக உள்ள தான் எவருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.  

    பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
    நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
    காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்
    ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
    அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான் பெருமானை கொக்கிறகு சென்னி உடையான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானை கொல்லை விடையேறும் கூத்தன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.

கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடையேறும் கூத்தன்    கண்டாய்
அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய  ஆதிகண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.79.2) அப்பர் பிரான் கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மகுடம்=பெருமான் தனியாக மகுடம் ஏதும் அணிவதில்லை. எனவே அவரது சடையே மகுடமாக கருதப் படுகின்றது. கொக்கு என்பது இங்கே கொக்கின் இறகினை குறிக்கும். குழைவார்=உள்ளம் குழைந்து உருகி வழிபடும் அடியார்கள்; சீர்ப் போகம்=செல்வத்தால் வரும் இன்ப போகங்கள்; தக்கிருந்த=வாய்த்து இருக்கும்;

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்
கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னைக் குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் புண்ணியனை எண்ணரும்
சீர்ப் போகம்  எல்லாம்
தக்கிருந்த தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூடி உள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.     

 மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
 மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்
 பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீயேன் என்று நிற்றிரால்
 அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே

கானப்பேர் தலத்தின் (தற்போதைய பெயர் காளையார்  கோயில்) மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.84.2) பெருமான் குளிர்ந்து இருக்கும் தனது சடையில் கொடிய பாம்பையும் ஊமத்தை மலரையும் கொக்கின் இறைகையும் பொருத்தி வைத்துள்ளார் என்று சுந்தரர் கூறுகின்றார். பெருமான் தனது சடையினில் கங்கை நதியினைத் தேக்கியதை, கூதலிடும் (கூதல்=குளிர்) சடை என்று உணர்த்துகின்றார். விரவுதல்=கலத்தல்; விரசும் ஓசை=செறிந்த ஒலி, அடர்த்தியான ஒலி; பெருமானின் பெருமைகளை உணர்ந்து, உள்ளம் நைந்து அவனது பெருமைகளை இசைப் பாடலாக பாடும் அடியார்கள் சிவமாக மாறி விடுவார்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கூதலிடும் சடையும் கோளரவும் விரவும் கொக்கிறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள்ளுருகா விரசும்  ஓசையைப் பாடலும் நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையின் மாமலர்        கொண்டு என் கணது அல்லல் கெடக்
காதல் உறத் தொழுவது என்றுகொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை  காளையையே  
           

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானைச் சிறப்பித்து பாடியவாறே தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது.

    குலம் பாடி கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்
    நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்
    அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற    
    சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருக்கோவையார் பாடல் ஒன்றினில் பெருமான் கொக்கிறகு அணிந்து காணப்படும் காட்சியை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எட்டு திக்குகளை எட்டுமாறு பரந்த தோள்களை உடைய தில்லைக் கூத்தன், கொக்கின் இறகு அணிந்துள்ளான் என்று இங்கே கூறுகின்றார். தோழியின் கூற்றாக அமைந்த இந்த பாடலில், கூடல் நகரத்து முத்து போன்ற பற்களை உடைய தலைவியை விட்டுவிட்டு, அயல் மாதரிடம் நாட்டம் கொண்டு பிரிந்த தலைவனைப் பழித்து உரைப்பது போன்ற பாடல். தலைவியை சிவனருளாக உருவகித்து, அந்த அருளினைப் பிரிந்து பிற தெய்வத்தை நாடும் ஆன்மாவினை, தகுதி இல்லாத ஆன்மா என்று இழித்துக் கூறுவது இந்த பாடலின் உட்பொருளாகும்.  

    திக்கின் இலங்கு திண்தோள் இறை தில்லைச் சிற்றம்பலத்துக்
    கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தென் கூடல் அன்ன
    அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
    தக்கின்று இருந்திலன் நின்ற செவ்வேல் என் தனி வள்ளலே  
 

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா) பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல்) கொக்கின் இறகையும் கொன்றை மலரையும் தனது சடையில் அணிந்தவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அடியார்கள் நினைப்பதைத் தரும் இறைவன் என்பதால் கற்பகம் என்று இங்கே கூறுகின்றார். கொக்கின் இறகையும், கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், ஊமத்தம் பூவினையும் சடையில் சூடி, நடனமாடும் தில்லைக் கூத்தனின் உருவம் தனது சிந்தையுள் நிறைந்து உலவுகின்றது என்று இங்கே கூறுகின்றார்.  

 ஏர்கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்
 பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
 சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா
 நீர்கொள் செஞ்சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே
 
 பொழிப்புரை:

பிறப்பு எடுத்ததால் ஏற்படும் துன்பங்களால் வருந்தி துக்கம் அடையும் வாழ்க்கைகள் பல வாழ்ந்து அதனால் சோர்ந்திருக்கும் உயிரின் நீக்கும் பொருட்டு, தகுந்த நெறியினை பின்பற்ற வருவீர்களாக. தனது இடுப்பினில் எலும்பு மாலையை அணிந்தவனும், தனது தலையின் மேல் கங்கை ஆற்றினையும் கொக்கு இறகினையும் அணிந்தவனகிய பெருமான்  உறைகின்ற கோடிகா தலம் சென்று சேர்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து உயிரின் சோர்வினை நீக்குவீர்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com