139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 5

அழகுடன் பொலிந்து
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 5

பாடல் 5:

    ஆனில் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடியோர்
    மானில் அங்கையினான் மணமார் மங்கலக்குடி
    ஊனில் வெண் தலைக் கை உடையான் உயர் பாதமே
    ஞானமாக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே
    

விளக்கம்:

கிளர்=கிளர்ந்து எழும், உண்டாகும்; மானில்=மான் நில், மான் நிற்கின்ற; அவிர்முடி=விரிந்த சடை; பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களை அழகிய பொருட்கள் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாவது பாடலை (4.11.2) நினைவூட்டுகின்றது. பெருமானுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும் அழகுடன் பொலிந்து விளங்குவது இயற்கை தானே. பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே. சிவபெருமான் விரும்பி நீராடும் ஐந்து பொருட்களைத் தருவதால் (பால், தயிர், நெய், பசுஞ்சாணம் மற்றும் கோமியம் ஆகியவையே இந்த ஐந்து பொருட்கள்) பசு சிறப்புத் தன்மை பெறுகின்றது.

    பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
    கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
    நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

பொழிப்புரை:

பசுவிலிருந்து உண்டாகும் பால் தயிர் முதலான ஐந்து தூய்மையான பொருட்களைக் கொண்டு தனது விரிந்த சடைமுடியில் அபிடேகம் செய்து கொள்பவனும், இளமையான மான் கன்றினைத் தனது கையினில் நிற்க வைத்துக் கொண்டிருப்பவனும், நறுமணம் உடைய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தினை தனது இருப்பிடமாகக் கொண்டவனும், சதைப் பற்று நீங்கிய காய்ந்த வெண்தலையினைத் தனது கையில் ஏந்தியவாறு ஊரூராக பலிக்கு திரிபவனும் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை அடைவதே ஞானத்தின் பயன் என்பதை அறிந்து, அந்த இறைவனின் திருப்பாதங்களை புகழ்ந்து போற்ற வல்லவர்களின் வினைகள் முற்றிலும் நாசம் அடைந்துவிடும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com