140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 2

பெருமான் அனைத்து உயிர்களிடமும்
140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 2


பாடல் 2:

    ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலையானான்
    ஆறார் தரு சடையன் அனல் உருவன் புரி உடையான்
    மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன் மடவாள்
    வீறார் தர நின்றான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

ஏறு=இடபம்; நிலையானான்=எல்லா உயிர்களிலும் கலந்து நிலையாக இருப்பவன்; அழிவு என்பது இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவன் என்று கொள்வதும் பொருத்தமே. ஆர்தருதல்=ஊர்தல், பொருத்துதல்; புரிவுடையான்=அன்புடையவன்; உயிர்களிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம் ஏதும் இல்லாது இருப்பினும் பெருமான் அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருப்பது இங்கே குறிப்பிடப்படுகின்றது. மாறார்=வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு மாறாக கொள்கை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; வீறு=ஒப்பேதுமின்றி பெருமிதம் அடையும் நிலை; இந்த பாடலில் பல உருவன் என்று சிவபெருமான் பல மூர்த்தங்களாக உள்ள செய்தியும் உணர்த்தப் படுகின்றது.   பொதுவாக கருதப்படும் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று பெரியோர்கள் கூறுகின்றனர். ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திரிபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும். இந்த பாடலில், ரிஷபாரூடர், திரிபுராரி ஆகிய இரண்டு கோலங்கள் குறிப்பிடப்படுகின்றன. பதிகத்தின் முதல் பாடலில் கஜசம்ஹாரர், மூன்றாவது பாடலில் பிக்ஷாடனர், ஆறாவது பாடலில் பாசுபதர், ஒன்பதாவது பாடலில் இலிங்கோத்பவர், கடைப் பாடலில் சந்திரசேகரர் ஆகிய மூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன.    

பொழிப்புரை:

எருதினை தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் ஊர்ந்து செல்பவனும், ஒப்பற்ற தனி ஒருவனாக இருப்பவனும், அடியார்களின் பக்குவம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பல வேடங்கள் தாங்கி அடியார்களுக்கு காட்சி கொடுப்பவனும், தனது நிலையிலிருந்து மாறாமல் என்றும் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்குபவனும், கங்கை நதி தனது சடையினில் பொருந்தும் வண்ணம் தேக்கியவனும், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு போன்று  சிவந்த நிறத்தில் திருமேனியை உடையவனும், காரணம் ஏதுமின்றி உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் கருணையாளனும், வேதநெறியிலிருந்து மாறுபட்டு நின்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் வில்லை வளைத்து அம்பு எய்தவனும், ஒப்புமை இல்லாத வண்ணம் மிகுந்த பெருமிதத்துடன் உமையன்னை இருக்கும் வண்ணம் பல விதமான சிறப்புகளை உடையவனும் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.        
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com