ஆசிய தட கள போட்டியில் தங்கப் பதக்கம்: காயத்ரி, சரஸ்வதிக்கு மாநில சங்கம் பாராட்டு

சென்னை, மே 2:  தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய ஓபன் தட கள போட்டியில் பதக்கம் வென்று பெருமை சேர்த்த தமிழகக் குழுவுக்கு சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.   நேரு ஸ்டேடியத்தில் மாநில தட கள சங்கம்
ஆசிய தட கள போட்டியில் தங்கப் பதக்கம்: காயத்ரி, சரஸ்வதிக்கு மாநில சங்கம் பாராட்டு

சென்னை, மே 2:  தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய ஓபன் தட கள போட்டியில் பதக்கம் வென்று பெருமை சேர்த்த தமிழகக் குழுவுக்கு சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

  நேரு ஸ்டேடியத்தில் மாநில தட கள சங்கம் நடத்திய இந் நிகழ்ச்சிக்கு மாநில சங்கத் தலைவர் தேவாரம் தலைமை வகித்தார். காவல்துறை டி.ஐ.ஜி. ஆர். ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.

  அவர் கூறியதாவது:

  ஆசிய ஓபன் தட கள போட்டியில் காயத்ரி, சரஸ்வதி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். முடிந்த அளவிலான திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ளனர். அவர்கள் சோர்வடைந்துவிடாமல் மேலும் பதக்கங்கள் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

  பொதுவாக, எந்த நிகழ்வானாலும் சிறப்பு சேர்த்தவர்களை ஊக்குவிப்பது அவசியம். இல்லையேல் அவர்களிடம் புதிய உத்வேகம் ஏற்படாமல் போய்விடும். பெற்றோர்களும் சரி, அமைப்புக் குழுவினரும் சரி எதையும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். எதிர்மறையாகக் கூறி, ஒருவரை வழிக்கு கொண்டுவரும் சிந்தனையைக் கைவிடவேண்டும்.

  இவர்களது சிறப்பால் எதிர்காலத்தில் மேலும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுவது நிச்சயம் என்றார் ஆறுமுகம்.

  முன்னதாக காயத்ரியின் சிறப்பை மாநில சங்கத் தலைவர் தேவாரம் வெகுவாகப் பாராட்டினார்.

  சங்கத் துணைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன், செயலாளர் சி. நீலசிவலிங்கசாமி ஆகியோரும் வாழ்த்தினர்.

  பொருளாளர் ஈஸ்வரராவ், பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளர் வி.நாகராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  4 பதக்கம்: இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து 4 பேர் தாய்லாந்து போட்டியில் பங்கேற்றனர். அதில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அகாதெமியைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஜி. காயத்ரி, மும்முறை தாண்டும் போட்டியில் 12.69 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். தவிர 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் (14.21 விநாடி) தங்கம் வென்றுள்ளார்.

  மற்றொரு வீராங்கனை எஸ். சரஸ்வதி ஈட்டி எறிதலில் 49.49 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்துள்ளார். குண்டு எறிதலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

  போட்டிக்குச் சென்ற ராதிகா, முத்துசாமி ஆகியோர் பதக்கம் பெறமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com