23 தங்கப் பதக்கங்களோடு விடை பெற்றார் மைக்கேல் பெல்ப்ஸ்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 4X100 மீ. மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற கையோடு ஓய்வு
23 தங்கப் பதக்கங்களோடு விடை பெற்றார் மைக்கேல் பெல்ப்ஸ்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 4X100 மீ. மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற கையோடு ஓய்வு பெற்றார் அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 4X100 மீ. மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் ரியான் மர்பி, மில்லர் காடி, மைக்கேல் பெல்ப்ஸ், நாதன் அட்ரியான் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 3 நிமிடம், 27.95 விநாடிகளில் இலக்கை எட்டியது. இதன்மூலம் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது. இதில் முதலில் நடைபெற்ற பேக்ஸ்டிரோக் போட்டியில் 51.85 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் உலக சாதனை படைத்தார் மர்பி. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் அணி (3:29.24) வெள்ளியும், ஆஸ்திரேலியா (3:29.93) வெண்கலமும் வென்றன.
இந்தப் போட்டியோடு மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெற்றார். இந்த ஒலிம்பிக்கில் மட்டும் அவர் 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றார். 31 வயதான பெல்ப்ஸ், 2000-ம் ஆண்டில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 15. அதன்மூலம் 68 ஆண்டுகால அமெரிக்க நீச்சல் வரலாற்றில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஒலிம்பிக்கில் பதக்கம் ஏதும் வெல்லாதபோதும், 200 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
2004-இல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், இரு வெண்கலம் வென்ற பெல்ப்ஸ், 2008-இல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 8 பிரிவுகளிலும் தங்கம் வென்று புதிய சகாப்தம் படைத்தார். அதன்பிறகு 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம், இரு வெள்ளி வென்றார்.
இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பெல்ப்ஸ் 5 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். இதன்மூலம் அவர் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. ஒட்டுமொத்தத்தில் அவர் 23 தங்கம், 3 வெள்ளி, இரு வெண்கலம் என 28 பதக்கங்கள் வென்றுள்ளார் பெல்ப்ஸ்.
ஆடவர் 4X100 மீ. மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்கள் ரியான் மர்பி, மில்லர் காடி, மைக்கேல் பெல்ப்ஸ்,  நாதன் அட்ரியான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com