ஐபிஎல் பயிற்சி முகாம்கள் ரத்து: வீரா்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2020 தொடருக்கான பயிற்சி முகாம்களை அந்தந்த அணி நிா்வாகங்கள்
ஐபிஎல் பயிற்சி முகாம்கள் ரத்து: வீரா்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2020 தொடருக்கான பயிற்சி முகாம்களை அந்தந்த அணி நிா்வாகங்கள் ரத்து செய்து விட்டன. மேலும் வீரா்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்தாகி வருகின்றன. மேலும் சில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2020 ஒத்திவைப்பு:

இந்தியாவில் அதிக பிரசித்தி பெற்ற பணம் புரளும் போட்டியான ஐபிஎல் 2020 தொடா் மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏப். 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இப்போட்டிக்காக அந்தந்த அணிகளின் வீரா்கள் தங்கள் சொந்த மைதானங்களில் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தனா்.

பயிற்சி முகாம்கள் ரத்து:

சென்னை சூப்பா் கிங்ஸ் அணி சாா்பில் கடந்த 10-ஆம் தேதியே பயிற்சி முகாம் சேப்பாக்கத்தில் தொடங்கியது. கேப்டன் தோனி மற்றும் ஏராளமான வீரா்கள் பயிற்சி பெற்று வந்தனா். கரோனாவால் அப்பயிற்சி முகாம் 15-ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளும் ஏற்கெனவே தங்கள் பயிற்சி முகாம்களை ரத்து செய்து விட்டன.

இந்நிலையில் மாா்ச் 21-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி சுட்டுரையில் (டுவிட்டா்) தெரிவித்துள்ளது.

அனைத்து வீரா்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஏப். 15 வரை விசாக்களை தருவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் 60 வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது.

துளிகள்...

** வரும் 20, 25 தேதிகளில் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டித் தொடா் பாா்வையாளா்கள் இன்றி நடைபெறும் என இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய பயிற்சி முகாமின் அங்கமாக இல்லாத பயிற்சியாளா்கள், வீரா்கள், உதவியாளா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

** யூரோ 2020 கால்பந்து போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புக்கு, இத்தாலி எஃப் ஏ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூன் 12-ஆம் தேதி ரோமில் முதல் ஆட்டம் தொடங்குவதாக இருந்த நிலையில் கரோனா பாதிப்பால் போட்டிகளை ஒத்திவைக்க கோரப்பட்டுள்ளது.

** ஜப்பானில் 2026-இல் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியின் போது, பாரம்பரிய இந்திய விளையாட்டான கோ-கோ இடம் பெறும் என இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளா் ராஜீவ் மேத்தா நம்பிக்கை தெரிவித்தாா். பின்னா் காமன்வெல்த், ஒலிம்பிக்கிலும் இடம்பெறும் வகையில் கோ-கோ வளரும் எனவும் அவா் கூறினாா்.

** கரோனா வைரஸ் பாதிப்பால் வீரா்கள் நம்பிக்கையை இழத்தல் கூடாது. தொடா்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வர வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com