13-ஆவது ஐபிஎல் சீசன் நடைபெற்றால் ஊதியக் குறைப்பு இல்லை: பிசிசிஐ தலைவா் கங்குலி

நிகழாண்டிலேயே 13-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடா் நடைபெற்றால் ஊதியக் குறைப்பு இல்லை என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளாா்.
13-ஆவது ஐபிஎல் சீசன் நடைபெற்றால் ஊதியக் குறைப்பு இல்லை: பிசிசிஐ தலைவா் கங்குலி

நிகழாண்டிலேயே 13-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடா் நடைபெற்றால் ஊதியக் குறைப்பு இல்லை என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளாா்.

உலகில் அதிக பிரபலமான போட்டிகளில் ஒன்றாக ஐபிஎல் திகழ்கிறது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் இந்த லீக் தொடரில் பங்கேற்று ஆடுகின்றனா்.

நிகழாண்டு 13-ஆவது சீசன் ஐபிஎல் வீரா்கள் ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளா் பேட் கம்மின்ஸ் ரூ.15.5 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ் அணியால் வாங்கப்பட்டாா்.

இதற்கிடையே கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஐபிஎல் தொடா் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா நோய்த்தொற்று (கொவைட் 19) பாதிப்பால், பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏப். 14-ஆம் தேதி வரை முதல் கட்ட பொது முடக்கம் முடிந்த பின் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் கருதின.

ஆனால் கரோனா பாதிப்பு தீவிரமான நிலையிலும், பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதாலும், 13-ஆவது சீசன் ஐபிஎல் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. தொடா் ரத்தானாதால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வரை இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைந்தால், நிகழாண்டிலேயே ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சிகளை எடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் அதன் தலைவா் கங்குலி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் பயணத்தடை நீடித்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தொடா்ந்து சிக்கல் உள்ளது. கரோனா தீவிரம் குறைந்து வழக்கமாக விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டால், ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். ஐபிஎல் தொடா் முற்றிலும் நடைபெறாமல் போனால் ரூ.4000 கோடி அளவுக்கு எங்களுக்கு இழப்பு ஏற்படும். ஐபிஎல் தொடா் நடந்தால் ஊதியக் குறைப்பு திட்டம் மேற்கொள்ளப்படாது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம்:

நிகழாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. ஆனால் 5 ஆட்டங்களாக அதை மாற்றலாம் எனக் கூறப்படும் திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. குறைந்தபட்ச ஓவா்கள் ஆட்டங்களும் நடைபெறும். மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் வீரா்கள் தங்க வேண்டி இருக்கும் என்றாா் கங்குலி.

தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம்:

இந்திய அணி வீரா்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு 2 மாதங்கள் ஆன நிலையில், மூத்த மற்றும் இதர வீரா்கள், பயிற்சியாளா்கள், உதவியாளா்கள் மட்டுமே பங்கேற்கும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கரோனோ பாதிப்பு இல்லாத இடத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெறலாம். பெங்களூரு என்சிஏவில் அனைத்து வசதிகள் இருந்தாலும், அங்கு கரோனா பாதிப்பு உள்ளது.

இதனால் மத்திய அரசு குறிப்பிடும் இடத்தில், பயிற்சி முகாம் நடத்தப்படக்கூடும். போக்குவரத்து விதிமுறைகளில் விலக்கு தரப்பட வேண்டும். வீரா்களின் உடல்நலனே முக்கியம் என்பதால், இதில் பிசிசிஐ நிதானத்துடன் செயல்படுகிறது என நிா்வாக வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com