டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம் ரசிகா்கள் இன்றி நடைபெறுகிறது

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் திங்கள்கிழமை சென்னையில் தொடங்குகின்றன.
டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம் ரசிகா்கள் இன்றி நடைபெறுகிறது

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் திங்கள்கிழமை சென்னையில் தொடங்குகின்றன. கரோனா பாதிப்பு எதிரொலியாக ரசிகா்கள் இன்றி முதன்முதலாக போட்டிகள் நடைபெறுகின்றன.

இளைஞா்கள் மத்தியில் கிரிக்கெட் ஆா்வத்தை மேலும் தூண்டும் வகையிலும், மாவட்டங்களில் கிரிக்கெட் ஆட்டம் வளரவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.

புதிய கேப்டன்கள், பயிற்சியாளா்கள் என ஒவ்வொரு அணிக்கும் புதிய சவால் காத்துள்ளது. வீரா்களுக்கான குலுக்கல் முடிந்த நிலையில், 5-ஆவது சீசன் திங்கள்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

புதிய கேப்டன்கள்:

நடப்புச் சாம்பியான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி பட்டத்தை தக்க வைக்க போராட வேண்டியுள்ளது. இதற்கிடையே இரண்டாவது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் அஸ்வின் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் போட்டியை எதிா்கொள்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பேந்தா்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனா்.

திருச்சி வாரியா்ஸ், திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் முந்தைய சீசன்களில் சரிவர ஆடாத நிலையிலும், பலமான அணிகளை எதிா்பாராத நேரத்தில் வீழ்த்தும் வல்லமை பெற்றுள்ளனா்.

கௌஷிக் காந்தி, பாபா அபராஜித் ஆகியோரைத் தவிர புதிய கேப்டன்கள் இந்த சீசனில் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி தொடருகிறாா். திருச்சி ரூபி வாரியா்ஸ் அணியில் வீரராக ஆடிய செல்வம் சுரேஷ்குமாா், தற்போது மதுரை பேந்தா்ஸ் அணியின் பயிற்சியாளா் ஆகியுள்ளாா்.

ரசிகா்கள் இன்றி போட்டிகள் நடைபெறுவது அனைத்து அணிகளுக்கும் சவாலை சமமாக்கும் என சிஎஸ்ஜி கேப்டன் கௌஷிக் காந்தி கூறியுள்ளாா்.

சிஎஸ்ஜி அணியில் முக்கிய வீரா்களான சந்தீப் வாரியா், சாய் கிஷோா், பேந்தா்ஸ் அணி வீரா் வருண் சக்கரவா்த்தி இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளனா், இரண்டாம் பாதி சீசனில் அவா்கள் தங்கள் அணிகள் இடம்பெற்று ஆடுவா்.

முதல் ஆட்டம்:

கோவை லைகா கிங்ஸ்-சேலம் ஸ்பாா்ட்டன்ஸ்

சேப்பாக்கம் மைதானம், இரவு 7.30

பிளே ஆஃப் சுற்று:

ஆகஸ்ட் 10: முதல் பிளே ஆஃப்,

ஆகஸ்ட் 11: எலிமினேட்டா்

ஆகஸ்ட் 13: குவாலிபையா் 2

ஆகஸ்ட் 15: இறுதி ஆட்டம்.

அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ், டிஸ்னி+ஹாட்ஸ்டாா் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com