முதல் டெஸ்டில் இந்திய அணி அசத்தல் வெற்றி

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 
இந்திய அணி
இந்திய அணி

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தார்.

ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 228 பந்துகளில் 3 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 175 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் லக்மல், விஷ்வா பொ்ணான்டோ, எம்புல்டெனியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய இலங்கை அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார். 

இந்தியா சார்பாக் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 400 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள இந்தியா, முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் எடுக்காத இலங்கையை பாலோ ஆன் செய்ய பணித்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸை போலவே சொதப்பினர்.

தொடக்க வீரர் திரிமானே ரன் ஏதும் எடுக்காமலும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய நிசாங்கா 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். தேநீர் இடைவெளியின்போது, இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது. 

பின்னர், அஸ்வின், ஜடேஜா சுழல்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் பெவிலியன் திரும்பிய வண்ணமிருந்தனர். இறுதியாக, 178 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணி ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பாக அஸ்வினும் ஜடேஜாவும் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com