நடப்பு சீசனில் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற்றம்

டி காக், கே.எல். ராகுல், கரண் சர்மா, க்ருணால் பாண்டியா என அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
குஜராத் அணி வீரர்கள்
குஜராத் அணி வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று மோதின. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விர்த்திமான் சாஹா சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் சுப்மான் கில் நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார். 

லக்னெள அணியில் ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் மாத்திவ் வாடே (10), ஹார்திக் பாண்டியா (11), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 24 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் தெவாடியா 16 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார். எனினும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் அரை சதம் கடந்து 63 ரன்களைக் குவித்தார்.

முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 144 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னெள அணி களமிறங்கியது.

எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டி காக், கே.எல். ராகுல், கரண் சர்மா, க்ருணால் பாண்டியா என அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். தீபக் ஹூடா மட்டும் 27 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். 

13.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த லக்னெள அணியால் 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு சென்றது மட்டுமில்லாமல் நடப்பு சீசனில் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com