ஐபிஎல் போட்டியில் சத்தமில்லாமல் சாதித்து வரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

3 ஆட்டங்களிலும் விளையாடி குறைந்த ரன்களைக் கொடுத்த வீரர்களின் பட்டியலில்...
ஐபிஎல் போட்டியில் சத்தமில்லாமல் சாதித்து வரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது. தோனி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல் உள்ளது.

சென்னையில் மூன்று வெற்றிகளிலும் சத்தமில்லாமல் பங்களித்துள்ளார் வேகபந்துவீச்சாளரான தீபக் சஹார். இத்தனைக்கும் 3 ஆட்டங்களிலும் அவர் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். சிஎஸ்கேவின் இம்ரான் தாஹிர் 6 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

எனினும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கில்லியாக இருக்கிறார் சஹார். 3 ஆட்டங்களிலும் விளையாடி குறைந்த ரன்களைக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் சஹார் தான் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டங்களிலும் 12 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். எகானமி - 4.66. இந்தப் பட்டியலில் அடுத்த இரு இடங்களிலும் சிஎஸ்கே வீரர்களே உள்ளார்கள். 2. இம்ரான் தாஹிர் 5.20, ஜடேஜா 6.10. 

அதேபோல டாட் பந்துகளிலும் சாஹர் தான் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டங்களிலும் வீசிய 12 ஓவர்களில் 36 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளார். அடுத்த இடத்தில் 35 டாட் பந்துகளுடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளார். 

ஐபிஎல் 2019: அதிக டாட் பந்துகள் (3 ஆட்டங்கள்)

தீபக் சஹார் - 36
ஜோஃப்ரா ஆர்ச்சர் - 35
பும்ரா - 34
ரஷித் கான் - 30
இம்ரான் தாஹிர் - 29

ஐபிஎல் 2019: சிறந்த எகானமி (3 ஆட்டங்கள்)

தீபக் சஹார் - 4.66
இம்ரான் தாஹிர் - 5.20
ஜடேஜா - 6.10
ரஷித் கான் - 6.25
ஜோஃப்ரா ஆர்ச்சர் - 6.33

மேலும் 3 ஆட்டங்களிலும் பவர்பிளே பகுதியில் பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து சென்னை அணிக்குப் பேருதவி செய்துள்ளார் சஹார். இதனால் பவர்பிளேவில் அதிக ரன்களைக் கொடுப்பது குறித்த கவலையைத் தோனிக்கு இல்லாமல் செய்துவிட்டார்.  

அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் டாப் 10-ல் ஒரு சிஎஸ்கே வீரரும் இல்லை. 13-வது இடத்தில் தோனியும் 17-வது இடத்தில் ரெய்னாவும் உள்ளார்கள். ஆனால் பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பலமாக உள்ளார்கள். அவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் வேறெந்த வீரருக்கும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் தீபக் சஹார். 

2012-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வான தீபக் சஹார், 2016, 2017-ம் ஆண்டுகளில் புணே அணிக்காக விளையாடினார். 26 வயது சஹாரைக் கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை அணி. கடந்த வருடம் 12 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை எடுத்தார் சஹார். எகானமி - 7.28. இந்நிலையில் இந்த வருடமும் அசத்தலான பந்துவீச்சால் சென்னை அணிக்குத் தகுந்த வெற்றி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com