பொறுப்பில்லாத  செயல்: ஆர்சிபி ட்வீட் குறித்து அசோக் டிண்டா ஆவேசம்!

நிலைமை கைமீறிப் போய், மக்கள் என் குடும்பத்தையும் என் மனைவி, மகளையும் மோசமான வார்த்தைகளால் விமரிசனம் செய்ய ஆரம்பித்தார்கள்... 
பொறுப்பில்லாத  செயல்: ஆர்சிபி ட்வீட் குறித்து அசோக் டிண்டா ஆவேசம்!

ஐபிஎல் ஆட்டங்களின் கடைசி ஓவர்களில் அதிகமாக ரன்களைக் கொடுப்பவர்களை டிண்டா ஆர்மி என ரசிகர்கள் சிலர் கிண்டலடிப்பதுண்டு. ஆனால் இதை ஒரு ஐபிஎல் அணியே செய்தால்?

கடந்த வாரம் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில், 3 விக்கெட்டுகளை ஆர்சிபியின் உமேஷ் யாதவ் வீழ்த்தியபோது, டிண்டா அகடமியா, யார் அது? என்று உமேஷுக்கு ஆதரவாக ஒரு ட்வீட்டை வெளியிட்டது ஆர்சிபி அணி. ஆனால் தேவையில்லாமல் டிண்டாவை இழுப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியதால் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

ஆனால் டிண்டா விடவில்லை. பொறுப்பில்லாமல் ட்வீட் செய்ததாக ஆர்சிபி அணி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்தினார் டிண்டா. 

ஆர்சிபியின் ட்வீட்டுக்குப் பிறகு என் மீது ஏராளமான விமரிசனங்கள் வருகின்றன. முதலில் இதற்கு எதிர்வினையாற்றவேண்டாம் என நினைத்தேன். ஆனால் நிலைமை கைமீறிப் போய், மக்கள் என் குடும்பத்தையும் என் மனைவி, மகளையும் மோசமான வார்த்தைகளால் விமரிசனம் செய்ய ஆரம்பித்தார்கள். அதுபோன்ற மோசமான வார்த்தைகளை எந்தத் தந்தையும் அனுசரித்துப் போகமாட்டார். ஒரு வீரர் மீது பொறுப்பில்லாத ஒரு ட்வீட்டை ஆர்சிபி அணி எப்படி வெளியிடலாம்? புள்ளிவிவரங்களின்படி, டி20 பந்துவீச்சாளர்களில் நான் நல்லவிதமாகவே பந்துவீசியுள்ளேன். கோலி உள்ளிட்ட அணி வீரர்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. ஒருகாலத்தில் ஆர்சிபி என்னுடைய தாய்வீடாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட நிலைமைக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டும் ஆர்சிபி என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் டிண்டா. 

35 வயது அசோக் டிண்டா, 13 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 115 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 417 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2017-க்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் டிண்டா விளையாடவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com