ஆர்சிபி அணியில் அடுத்த வருடமும் இதே வீரர்கள் இடம்பெறுவார்கள்: பயிற்சியாளர் கிறிஸ்டன்

அடுத்த வருடம்  அணியின் அமைப்பில் சில மாற்றங்கள் இருந்தாலும் அணியில் இடம்பெறும் வீரர்களில் ஒரு தொடர்ச்சி இருக்கும் என நம்புகிறேன்...
ஆர்சிபி அணியில் அடுத்த வருடமும் இதே வீரர்கள் இடம்பெறுவார்கள்: பயிற்சியாளர் கிறிஸ்டன்

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் என கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. கடைசி 41 ஆட்டங்களில் 13-ல் மட்டுமே ஆர்சிபி வென்றுள்ளது. 

ஆர்சிபி அணியின் நிலை குறித்து அதன் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியதாவது:

அணியில் சில அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இந்தச் சிக்கல்கள் சிலகாலமாகவே அணியில் உள்ளன. ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக எனக்கு இது முதல் வருடம். அந்தப் பிரச்னைகள் என்ன என்பது குறித்த புரிதல்கள் தற்போது எனக்கு உள்ளன. எங்கள் அணி உரிமையாளரிடம் இதுகுறித்து விவாதிக்க அடுத்த வருடம் மாற்றங்களை மேற்கொள்ள முயல்வோம்.

இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. நல்ல முடிவுகளைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். போட்டியின் இரண்டாம் பாதியில் நாங்கள் விளையாடிய விதம் உற்சாகத்தை அளிக்கிறது. முதல் பாதியில் எங்களால் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெல்லமுடிந்தது. கடைசி 7 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளோம். ஓர் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஐபிஎல்லில் மோசமான தொடக்க அமைந்துவிட்டால் பிறகு கடைசிவரை தடுமாற்றம் தான் இருக்கும். 

ஆரம்பத்தில், மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வென்றிருக்கவேண்டும். இரு ஆட்டங்களில் 95% நாங்கள் நன்றாகவே விளையாடினோம். அதுபோன்ற ஆட்டங்களில் உங்களால் வெற்றி பெறமுடியவில்லையென்றால் அது ஐபிஎல் போட்டியில் பெரிதளவில் உங்களைப் பாதிக்கும். 

அடுத்த வருடமும் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே விருப்பப்படுகிறேன். வீரர்களைத் தொடர்ச்சியாகவே தக்கவைத்துக்கொள்ளவே ஐபிஎல்லின் ஒவ்வொரு பயிற்சியாளரும் விரும்புவார்கள். அணியைக் கட்டமைத்து ஒரு கலாசாரத்தை உருவாக்கவே நாம் முயல்வோம். அப்போது அதே வீரர்களைத் தேர்வு செய்யவே விரும்புவீர்கள். ஐபிஎல்-லின் வெற்றிகரமான அணிகள் அதைத்தான் செய்துள்ளன. அப்படியொரு நிலையை ஆர்சிபியில் உருவாக்க எண்ணுகிறோம். அடுத்த வருடம்  அணியின் அமைப்பில் சில மாற்றங்கள் இருந்தாலும் அணியில் இடம்பெறும் வீரர்களில் ஒரு தொடர்ச்சி இருக்கும் என நம்புகிறேன். 

ஒவ்வொரு வருடமும் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருபவர்கள்தான் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். தனிநபர் ஓவ்வொரு போட்டியிலும் நன்கு விளையாடுவதல்ல ஐபிஎல். ஆனால் வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டால் அவர்கள் நிச்சயம் ஒரு போட்டியில் நன்கு விளையாடுவார்கள்.

ஐபிஎல் போட்டியில் ஓர் அணி வெற்றி பெறும்போதுதான் அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒவ்வொரு ஆட்டத்தையும் ரசித்து விளையாடுவதாக கோலி சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நீங்கள் வெற்றி பெறாதபோது மகிழ்ச்சியை நீட்டிக்கச் செய்வது சுலபமல்ல. ஐபிஎல் என்பது மிகவும் கடினமான போட்டி. இதுபோன்ற இன்னொரு உள்ளூர் போட்டி கிடையாது. எல்லா வீரர்களும் அழுத்தத்தை உணர்கிறார்கள். முக்கியமாக ஐபிஎல்லில் புதிதாக விளையாட வரும் வீரர்கள், கண்கள் விரிய உள்ளே வருகிறார்கள். ஆனால் ஆட்டங்கள் இந்தளவுக்குத் தீவிரமாக இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. மூத்த வீரர்களும் அழுத்தத்தை உணர்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com