சிஎஸ்கே கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மும்பை இந்தியன்ஸ்: புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள்!

சென்னை சேப்பாகத்தில் சிஎஸ்கே விளையாடிய கடைசி 21 ஆட்டங்களில் 3 முறை மட்டுமே தோற்றுள்ளது. மூன்றிலும் சென்னையை மும்பை தோற்கடித்துள்ளது...
சிஎஸ்கே கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மும்பை இந்தியன்ஸ்: புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள்!

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் சொதப்பியதுபோல இந்தமுறையும் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றினார்கள். இந்தமுறையும் தோனி வந்துதான் அணியைக் காப்பாற்றி ஓரளவு ரன்கள் சேர்த்துக்கொடுத்தார். 

18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே. மற்ற எல்லா அணிகளிடமும் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, மும்பையிடம் மட்டும் ஒவ்வொரு முறையும் தடுமாறி வருகிறது. இந்தப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள், சிஎஸ்கே மீதான மும்பையின் ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

* ஐபில் போட்டியில் சிஎஸ்கே - மும்பை இடையிலான ஆட்டங்களில் மும்பை 16 ஆட்டங்களிலும் சிஎஸ்கே 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மும்பையைத் தவிர வேறு எந்த ஐபிஎல் அணியும் சென்னையின் வெற்றியை விடவும் அதிகம் வெற்றி பெற்றதில்லை. 

* சிஎஸ்கே - மும்பை இடையிலான கடந்த 4 ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கேவை இதுபோல தொடர்ச்சியாக நான்கு முறை எந்த ஓர் அணியும் தோற்கடித்ததில்லை.

* 2013 முதல் சென்னை சேப்பாக்கத்தில் இதர அணிகளிடம் விளையாடிய 19 ஆட்டங்களில் 18-ல் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே.

ஆனால் மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோற்றுள்ளது.

* சேப்பாக்கம் மைதானம் மும்பையை விடவும் ரோஹித் சர்மாவுக்கு இன்னும் அதிர்ஷ்டமானது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இருமுறை (2008, 2010) சென்னையில் விளையாடிய ரோஹித் சர்மா இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.

மும்பை அணிக்காக சென்னையில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் ரோஹித் சர்மாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

* 2012 முதல் சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை தோற்றதேயில்லை. அதற்கு முன்பு 2008, 2010-ல் சிஎஸ்கே, மும்பையைத் தோற்கடித்துள்ளது. அடுத்த வருடமாவது இதில் மாற்றம் ஏற்படுமா?

* சென்னை சேப்பாகத்தில் சிஎஸ்கே விளையாடிய கடைசி 21 ஆட்டங்களில் 3 முறை மட்டுமே தோற்றுள்ளது. மூன்றிலும் சென்னையை மும்பை தோற்கடித்துள்ளது. 

* ஒரு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை அதிகமுறை தோற்கடித்த அணிகள்

3-0 ராஜஸ்தான் ராயல்ஸ் (2008)
3-0 கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014)
3-0 மும்பை இந்தியன்ஸ் (2019)
3-1 மும்பை இந்தியன்ஸ் (2013)
3-1 மும்பை இந்தியன்ஸ் (2015)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com