மோசம்: தில்லி மைதான ஆடுகளத்தைக் கடுமையாக விமரிசிக்கும் ரிக்கி பாண்டிங்!

அருமையாக பேட்ஸ்மேன்கள் உள்ள எங்கள் அணியினர் 129 ரன்கள் மட்டும் எடுத்தால் எப்படி...
மோசம்: தில்லி மைதான ஆடுகளத்தைக் கடுமையாக விமரிசிக்கும் ரிக்கி பாண்டிங்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தில்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முதலில் ஆடிய தில்லி 129/8 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 131/5 ரன்களை எடுத்தது. பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி 48 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியடைந்துள்ளது தில்லி அணி. தில்லியில் விளையாடியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியடைந்துள்ளது. 8 அணிகள் உள்ள புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி 5-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் தில்லி ஆடுகளம் குறித்துக் கடுமையாக விமரிசித்துள்ளார் தில்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

தில்லி ஆடுகளம் ஹைதராபாத் அணிக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. அவர்களிடம்  சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் மெதுவாக வீசக்கூடியவர்கள். இந்த ஆடுகளத்தில் மெதுவாகப் பந்துவீசப்பட்டால் அதை அடித்து ஆடுவது கடினம்.

ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்றால் அணித்தேர்வு குறித்து நாங்கள் யோசிக்கவேண்டியிருக்கும். ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என ஆடுகள வடிவமைப்பாளர்கள் எங்களுக்குச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய 3 ஆடுகளங்களில் இதுதான் சிறந்ததாக இருக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இதுதான் மிக மோசமாக உள்ளது. பந்து எந்தளவுக்குக் குறைவாகக் குதித்தது என எல்லோரும் பார்த்தீர்கள். ஒரு பயிற்சியாளராக எங்களுடைய வீரர்களின் இதுபோன்ற பங்களிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அருமையாக பேட்ஸ்மேன்கள் உள்ள எங்கள் அணியினர் 129 ரன்கள் மட்டும் எடுத்தால் எப்படி? என்னுடைய இந்தக் கருத்தை வீரர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக ஆடவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com