சிஎஸ்கேவின் கோட்டையைத் தகர்க்குமா கேகேஆர்?: ரஸ்ஸலின் ஆதிக்கத்தை முறியடிப்பாரா தோனி?

சென்னை சேப்பாக்கம் மைதானம், சிஎஸ்கேவின் கோட்டை. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா...
சிஎஸ்கேவின் கோட்டையைத் தகர்க்குமா கேகேஆர்?: ரஸ்ஸலின் ஆதிக்கத்தை முறியடிப்பாரா தோனி?

சென்னை சேப்பாக்கம் மைதானம், சிஎஸ்கேவின் கோட்டை. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 16 ஆட்டங்களில் (ஏப்ரல் 22, 2013 முதல்) சிஎஸ்கே அணி 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2015-ல், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டது. 

இந்நிலையில் பலமாக உள்ள கொல்கத்தா அணியை சென்னை சேப்பாக்கத்தில் இன்று எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்திலிருந்து தனது கோட்டையைக் காப்பாற்றிக்கொள்ளுமா சென்னை அணி என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தோனியின் தலைமைப்பண்பும் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளமும் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஐபிஎல் போட்டியில் 77 பந்துகளில் 207 ரன்கள் எடுத்துள்ளார் ரஸ்ஸல். ஸ்டிரைக் ரேட் - 269. 22 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள். இந்த வருட ஐபிஎல் போட்டியின் தன்னிகரற்ற வீரராக உள்ளார் ரஸ்ஸல். 

முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். பஞ்சாப்புக்கு எதிராக 17 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இதனால் 218 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி அந்த ஆட்டத்தை சற்று எளிதாக வென்றது. தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் அதகளம். 28 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். சூப்பர் ஓவரில் தோற்றது கொல்கத்தா. ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல். முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல். இந்த ஐபிஎல் போட்டியில் ரஸ்ஸலைத் தடுத்த ஒரே பந்துவீச்சாளர் தில்லியின் ரபாடா தான். சூப்பர் ஓவரில் அருமையான யார்க்கரால் ரஸ்ஸலை க்ளீன் போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மற்றபடி, இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் புதிராக உள்ளார் ரஸ்ஸல். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரஸ்ஸல் பேட்டிங்கின் உதவி இல்லாமலேயே ஜெயித்துவிட்டது கொல்கத்தா. 

ரஸ்ஸல்: ஐபிஎல் 2019

vs சன்ரைசர்ஸ் - 49* (19) - 4 சிக்ஸர் 
vs பஞ்சாப் - 48 (17) - 5 சிக்ஸர் 
vs தில்லி - 62 (28) - 6 சிக்ஸர் 
vs பெங்களூர் - 48* (13) - 7 சிக்ஸர்

எனினும், இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் ரஸ்ஸல் அதிக ரன்கள் எடுத்ததில்லை. அவருக்கு எதிராக 19 பந்துகள் வீசி, 13 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முறை அவருடைய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் தாஹிர். கெயிலின் விக்கெட்டை ஹர்பஜன் சிங் பறித்ததுபோல ரஸ்ஸலுக்குக் கடும் நெருக்கடி அளிப்பார் தாஹிர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா, சென்னை ஆகிய இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் கொல்கத்தாவைக் கீழே தள்ளி, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புண்டு.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com