தொடர்ச்சியாக 6-ஆவது தோல்வியை சந்தித்தது கொல்கத்தா: கடைசி கட்டத்தில் வெற்றி கண்ட ராஜஸ்தான் 

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர்/ராஜஸ்தான் ராயல்ஸ்
நன்றி: டிவிட்டர்/ராஜஸ்தான் ராயல்ஸ்


கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் விவரம்: http://bit.ly/2IWnCnu

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடி தொடக்கத்தை தந்தது. ரஹானே கடந்த போட்டியில் சதம் அடித்த உத்வேகத்துடன் விளையாடினார். இந்த ஜோடி முதல் 5 ஓவரில் 53 ரன்கள் எடுத்தது. 

இந்த நிலையில் 34 ரன்கள் எடுத்திருந்த ரஹானே நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 22 ரன்களுக்கு சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களுக்கு நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் பின்னி தலா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

கடைசி 7 ஓவரில் 77 ரன்கள், 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது, அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் இல்லை என ராஜஸ்தான் அணி பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதையடுத்து, 17 வயதே ஆன ரியன் பராக்குடன் ஷ்ரேயாஸ் கோபால் இணைந்தார். ஷ்ரேயாஸ் கோபால் வந்த வேகத்தில் 18 ரன்கள் எடுக்க கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் கோபால் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி மீண்டும் பின்னடைவை சந்தித்தது. இதனால், 16-வது ஓவரில் அந்த அணிக்கு 8 ரன்கள் தான் கிடைத்தது. மேலும், கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 

17-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவர் கொல்கத்தா அணிக்கு முக்கியமான ஓவராக பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்ச்சர் மற்றும் இளம் ரியன் பராக் அந்த ஓவரை தங்களது சாதகமாக மாற்றினர். 

சுனில் நரைன் ஓவரை ஆர்ச்சர் சிக்ஸர் அடித்து தொடங்கினார். பராக்கும் அந்த ஓவரில் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். இதனால், கொல்கத்தாவுக்கு முக்கியமான ஓவராக பார்க்கப்பட்ட அந்த ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 15 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் பராக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க 13 ரன்கள் கிடைத்தது.

இதனால், கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நெருக்கடியற்ற நிலை உருவானது. ரஸல் வீசிய 19-வது ஓவரின் 4-வது பந்தில் பராக் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து கொல்கத்தாவை மிரட்டினார். அடுத்த பந்தையும் அவர் பவுண்டரிக்கு விரட்ட முயன்று துரதிருஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஆர்ச்சர் முதல் 2 பந்திலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 27 ரன்கள் எடுத்தார்.  

முதல் 10 ஓவரிலேயே முக்கியமான விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com