அணிக்கு திரும்பிய வார்னர் அதிரடி: ஹைதராபாத் அணி 181 ரன்கள் குவிப்பு

12-ஆவது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்துள்ளது.  
புகைப்படம்: iplt20.com
புகைப்படம்: iplt20.com


12-ஆவது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்துள்ளது. 

12-ஆவது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் அதிரடியாக ரன் குவித்து விளையாடினார். மறுமுனையில் பேர்ஸ்டோவ் நல்ல ஒத்துழைப்பு அளித்து வந்தார். இதனால், இந்த அணியின் ரன் ரேட் சீராக உயர்ந்து வந்தது. 

9-ஆவது ஓவரில் ரஸல் பந்தில் சிக்ஸர் அடித்த வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 37-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் தனது 31-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். வார்னரின் இந்த அதிரடியால் முதல் 10 ஓவரில் ஹைதராபாத் அணி 92 ரன்கள் எடுத்தது. 

எனினும், மறுமுனையில் பொறுப்புடன் ஆடி வந்த பேர்ஸ்டோவ் துரிதமாக ரன் குவிக்க முயன்றார். ஆனால், அவர் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து சாவ்லா ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

ஆனால், இந்த அதிரடியான தொடக்கத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேர்ஸ்டோவ் விக்கெட்டுக்கு பிறகு விஜய் சங்கரும் வார்னரும் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினர். 

ஆனால், வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் குவித்த வார்னர் 16-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் விஜய் சங்கரும், மணீஷ் பாண்டேவும் சற்று அதிரடி காட்ட அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 5 பந்துகளில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

கொல்கத்தா அணியின் நல்ல பந்துவீச்சால், ஹைதராபாத் அணி கடைசி 10 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் ரஸல் 2 விக்கெட்டுகளையும், சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com