சென்னையை மீட்ட ராயுடு, தோனி: மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

குவாலிஃபையர் 1 போட்டியில் மும்பைக்கு எதிராக முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. 
நன்றி: டிவிட்டர் / ஐபிஎல்
நன்றி: டிவிட்டர் / ஐபிஎல்


குவாலிஃபையர் 1 போட்டியில் மும்பைக்கு எதிராக முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

சென்னை அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. பவர்பிளே ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ரோஹித் சர்மா சென்னையின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், பவர்பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டு பிளெசிஸ், ரெய்னா, வாட்சன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

இந்த முறை 4-வது வீரராக களமிறங்கிய முரளி விஜய், அம்பதி ராயுடுவுடன் இணைந்து விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினார். இந்த ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இதனால், ரன் ரேட் ஓவருக்கு 6 ரன்களை தொடவில்லை. 

இந்த நிலையில் முரளி விஜய் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு தோனி களமிறங்கினார். ஜெயந்த் யாதவ் ஓவரில் தோனி மற்றும் ராயுடு தலா 1 சிக்ஸர் அடிக்க, சென்னை அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6-ஐ தொட்டது. 

ஆனால், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதால் க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார் ஓவரில் ரன் குவிக்க முடியவில்லை. பூம்ரா வீசிய 18-வது ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி கிடைக்க ரன் ரேட் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. 

இதையடுத்து, 19-வது ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடிக்க சென்னைக்கு அது மிக முக்கியமான ஓவராக மாறியது.

தொடர்ந்து கடைசி ஓவரை வீசிய பூம்ரா முதல் பந்திலேயே தோனி விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தோனிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், பூம்ரா அந்த ஓவரை சிறப்பாக வீச கடைசி ஓவரில் சென்னை அணிக்கு ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை. 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 

மும்பை அணி சார்பில் ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com