தாதாயிஸம் வயது 46!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 46-ஆவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடி வருகிறார். 
தாதாயிஸம் வயது 46!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 46-ஆவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடி வருகிறார். கிரிக்கெட் உலகில் தாதா, வங்கப் புலி மற்றும் கொல்கத்தாவின் அரசன் என்றெல்லாம் அறியப்பட்ட கங்குலி, ஜூலை 8-ஆம் தேதி 1972-ஆம் ஆண்டு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தவர்.

1990-களில் இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகள் ஏற்படுகிறது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன், முன்னணி வீரர்கள் மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா போன்றவர்கள் மீது சூதாட்டப் புகார் எழுகிறது. இதனால் இவர்களுக்கு இந்திய கிரிக்கெட்டிலும் தடை விதிக்கப்படுகிறது. இதையடுத்து அப்போதைய மற்றொரு முன்னணி வீரரான சச்சின டெண்டுல்கரிடம் கேப்டன் பதவி வழங்கப்படுகிறது. ஆனால், சச்சினின் இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் பேட்டிங்கிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் ஆட்டங்களும் மெச்சும்படியாக அமையவில்லை. அவ்வளவு தான் சர்வதேச அரங்கில் எழுச்சி கண்டுகொண்டிருந்த இந்திய அணி மீண்டும் ஒரு சாதாரண அணியாக மாறும் நிலை ஏற்பட்டதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், சௌரவ் கங்குலி இடம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுகிறது. அப்போதைய காலகட்டத்தில் பெருமளவில் பிரபலமில்லாத கங்குலி, இந்திய அணியில் இடம்பிடிப்பதே கேள்விக்குரியாக இருக்கும்போது இக்கட்டான தருணத்தில் கேப்டன் பொறுப்பும் சேர்த்து கங்குலி சுமக்கவேண்டியதாயிற்று.

ஆனால், அத்தனை விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சௌரவ் கங்குலியின் நடவடிக்கை அமைந்தது. அந்நிய மண்ணில் நடைபெறும் தொடர்களில் இந்தியா மண்ணைக் கவ்வும் என்ற சூழ்நிலையை முற்றிலும் மாற்றியமைத்தார். இந்திய அணியில் போராடும் குணத்தை ஏற்படுத்தினார். அணிக்கு முக்கியத்துவம் அளித்து பல நடவடிக்கைகளில் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக டெஸ்ட் போட்டிகளில் 3-ஆம் நிலையில் களமிறங்கி வந்த கங்குலி, அந்த இடத்தில் ராகுல் டிராவிட்டை களமிறக்கினார். அவர் 6-ஆவது இடத்துக்கு மாறிக்கொண்டார். சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே டெஸ்ட் அரங்கில் ஒன்றாக களமிறங்கியவர்கள் தான். 

1990-களில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் போன்ற வீரர்கள் நிரந்தர இடம்பிடித்திருக்க, சேவாக், யுவராஜ், தோனி, ஹர்பஜன், ஜாகீர், கைஃப் போன்ற இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கினார். பின்னாளில் இவர்களும் இந்திய அணியில் நிரந்தர வீரர்களாயினர். மேலும், இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றியுடன் வழிநடத்தியவர். அதுமட்டுமல்லாமல் 2003 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார். 

பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தேர்வாளர்கள் அனில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு வழங்க மறுத்த நிலையில், அவரை இந்திய அணியில் இடம்பெறச் செய்தார். அந்த தொடரில் கும்ப்ளே சரியாக விளையாடவில்லை என்றால் அவருடன் சேர்த்து கங்குலியையும் இந்திய அணியில் இருந்து நீக்கிவிடுவதாக தேர்வாளர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால், அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய கும்ப்ளே, இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். இதை சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கங்குலியே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இருண்ட காலம் ஏற்பட்டது. இதுவும் தனது முடிவாலேயே தனக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்ட விதமாக அமைந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட், பதவிக்காலம் முடிந்தபோது அவர் அதை நீட்டிக்க விரும்பவில்லை. அப்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. வீரர் கிரேக் சாப்பலை நியமிக்குமாறு கேப்டனாக இருந்த கங்குலி சிபாரிசு செய்தார். இதனால் சாப்பலும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இதனிடையே கங்குலியன் ஆட்டத்திறனும், பாதிக்கப்பட்டது. மேலும் இளம் வீரர்கள் பலர் உள்ளூர் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்துக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் கேப்டன் பதவியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக டிராவிட் நியமிக்கப்பட்டார். மேலும் இந்திய அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். இதனிடையே பயிற்சியாளர் பதவியில் இருந்து கிரேக் சாப்பலும் நீக்கப்படுகிறார். அதேவேளையில் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் தனது திறமையை நிரூபித்த கங்குலி, இந்திய அணிக்கு தேர்வாகிறார். 2007-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடமும் பிடித்தார். கடைசியாக 2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய கங்குலி, உலகின் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். அதிலும் குறிப்பாக ஆஃப் சைட் திசையில் அத்தனை ஃபீல்டர்களையும் மீறி பந்தை பவுண்டரிக்கு விரட்டுவதில் கில்லாடி. சுழற்பந்துவீச்சு என்றாலே கூடுதல் கவனிப்புகள் கிடைக்கும். பந்து எப்படி சுழன்றாலும் சரி, பயமின்றி பிட்சில் இறங்கி வந்து அதை மைதானத்தை விட்டு விளாசுவதை தனித்துவமாக கொண்டவர். மொத்தம் 424 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 575 ரன்கள் குவித்துள்ளார். மேலும் தனது கச்சிதமான பந்துவீச்சால் 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் சச்சினும், கங்குலியும் சிறந்த துவக்க ஜோடியாக இன்றளவும் திகழ்கின்றனர்.

தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட்டின் தொழில்நுட்பக் குழுவிலும் செயல்பட்டு வரும் சௌரவ் கங்குலியை 1990-களின் கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தனது அதிரடி நடவடிக்கைகளால் இந்திய அணியில் எழுச்சியை ஏற்படுத்தியவர். இந்திய அணி புத்துயிர் பெற முக்கிய காரணமாக விளங்கியவர். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர். 

குறிப்பாக இங்கிலாந்தில் 2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்-வெஸ்ட் இறுதிப்போட்டியை ஒரு இந்திய ரசிகரால் என்றும் மறக்க முடியாது. தாதாயிஸம் வயது 46......

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com