ரசிகர்களைக் கவர்ந்த உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகள்

2019-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கவர்ந்த உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகள் குறித்த விவரங்கள்:
ரசிகர்களைக் கவர்ந்த உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகள்

2019-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகள் குறித்த விவரங்கள்:

2019 உலகக் கோப்பை

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் நியூஸிலாந்து அணியை அதிக பவுண்டரிகள் அடித்ததன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

* உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து, தனது அணியை நன்கு வழிநடத்தி 2-ம் இடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. 

உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்

1975: லாயிட்
1979: ரிச்சர்ட்ஸ்
1983: அமர்நாத்
1987: பூன்
1992: அக்ரம்
1996: அரவிந்த் டி சில்வா
1999: வார்னே
2003: பாண்டிங்
2007: கில்கிறிஸ்ட்
2011: தோனி
2015: ஃபாக்னர்
2019: ஸ்டோக்ஸ்

உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்கள்

1992: குரோவ்
1996: ஜெயசூர்யா
1999: க்ளூஸ்னர்
2003: டெண்டுல்கர்
2007: மெக்ராத்
2011: யுவ்ராஜ்
2015: ஸ்டார்க்
2019: வில்லியம்சன் 

* ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனை இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் முறியடிக்கப்படவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் பெற்ற சாதனை சச்சின் வசம் உள்ளது. 2003 உலகக் கோப்பையில் 673 ரன்களை அவர் சேர்த்திருந்தார். 

2019 உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில், ரோஹித் சர்மா 647  ரன்களும் வார்னர் 638 ரன்களும் எடுத்திருந்தார்கள். இதனால் அரையிறுதியில் இவ்விருவரும் சச்சின் சாதனையைச் சுலபமாக முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 32 வயது ரோஹித் அரையிறுதியில் 1 ரன்னும் அதே வயது கொண்ட வார்னர் 9 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்கள். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோற்றதால் சச்சினின் சாதனையை இவ்விருவராலும் தகர்க்க முடியாமல் போனது.

இறுதிப்போட்டியிலும் இரு வீரர்களுக்கு சச்சினின் சாதனையைத் தாண்ட வாய்ப்பு இருந்தது. ரூட் 123 ரன்களும் வில்லியம்சன் 124 ரன்களும் எடுத்தால் சச்சினைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் ரூட் 7 ரன்களிலும், வில்லியம்சன் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். இதனால் 2003 உலகக் கோப்பையில் சச்சின் நிகழ்த்திய சாதனை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்

673 ரன்கள் - சச்சின் (2003)
659 ரன்கள் - ஹேடன் (659)
648 ரன்கள் - ரோஹித் சர்மா (2019)
647 ரன்கள் - டேவிட் வார்னர் (2019)
606 ரன்கள் - ஷகிப் அல் ஹசன் (2019)

* மேற்கிந்தியத் தீவுகளில் 2007ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் ஆஸி. அணியிக் கிளென் மெக்ராத். இந்நிலையில் அவரை விடவும் அதிகபட்சமாக ஒரு விக்கெட் எடுத்து 27 விக்கெட்டுகளுடன் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இருமுறை 5 விக்கெட்டுகளும் இருமுறை 4 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார். 

2019 உலகக் கோப்பை: அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

1.ரோஹித் சர்மா (இந்தியா) - 648 ரன்கள்
2. வார்னர் (ஆஸ்திரேலியா) - 647 ரன்கள்
3. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 606 ரன்கள்
4. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) - 578 ரன்கள்
5. ரூட் (இங்கிலாந்து) - 556 ரன்கள்

2019 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

1. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட்டுகள்
2.ஃபெர்குசன் (நியூஸிலாந்து) - 21 விக்கெட்டுகள்
3. ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட்டுகள்
4. முஸ்தாஃபிசுர் ரஹ்மான் - 20 விக்கெட்டுகள்
5. பும்ரா - 18 விக்கெட்டுகள்

* உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றார்கள். 

ஐசிசி அணி

ஜேசன் ராய் (இங்கிலாந்து)
ரோஹித் சர்மா (இந்தியா)
கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூஸிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா)
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
ஃபெர்குசன் (நியூஸிலாந்து)
பும்ரா (இந்தியா)

* இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்துடன் இந்தியா வெளியேறியது குறித்து தனது சுட்டுரையில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "ஏமாற்றமளிக்கும் முடிவு; எனினும், இந்தியா அணி இறுதி வரை முயன்றது. உலகக் கோப்பை போட்டி முழுவதுமாகவே இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாகச் செயல்பட்டது. அதற்காக பெருமை கொள்கிறோம். வெற்றி-தோல்வி வாழ்வின் அங்கம். இந்திய அணியின் எதிர்கால போட்டிகளுக்காக வாழ்த்துகள்' என்று கூறினார். ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.

* இங்கிலாந்தில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில், சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 

2019 ஐபிஎல்

ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. பரபரப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்து தோல்வியைத் தழுவியது சென்னை. 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மலிங்கா வீசிய பந்தில் தாகுர் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானார். இதன் மூலம் மும்பை அணி, 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹைதராபாத், தில்லி அணிகளுக்கு தலா ரூ. 8.75 கோடி பரிசளிக்கப்பட்டது.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

1.டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 692 ரன்கள்
2. ராகுல் (பஞ்சாப்) - 593 ரன்கள்
3. குயிண்டன் டி காக் (மும்பை) - 529 ரன்கள்
4. ஷிகர் தவன் (தில்லி) - 521 ரன்கள்
5. ரஸ்ஸல் (கொல்கத்தா) - 510 ரன்கள்

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

1. இம்ரான் தாஹிர் (சென்னை) - 26 விக்கெட்டுகள்
2. ரபாடா (தில்லி) - 25 விக்கெட்டுகள்
3. தீபக் சஹார் (சென்னை) - 22 விக்கெட்டுகள்
4. ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்) - 20 விக்கெட்டுகள்
5. பும்ரா (மும்பை) - 19 விக்கெட்டுகள்

2020 ஐபிஎல் ஏலம்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்து கொண்டன. யூசுப் பதான், விஹாரி போன்ற இந்திய அணிக்காக விளையாடிய, விளையாடும் வீரர்கள் சிலர் எந்த அணிக்கும் தேர்வாகாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் அதிகச் சம்பளம் பெறுகிற வீரராக விராட் கோலி தொடர்ந்து நீடிக்கிறார். அவருக்கு ஆர்சிபி அணி ரூ. 17 கோடி தருகிறது.

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்

ரூ. 15.50 கோடி: கம்மின்ஸ் - பந்துவீச்சாளர் 
ரூ. 10.75  கோடி: மேக்ஸ்வெல் - பேட்டிங் அல்ரவுண்டர் 
ரூ. 10.00 கோடி: கிறிஸ் மாரிஸ்: பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 
ரூ. 8.50 கோடி: காட்ரெல் - பந்துவீச்சாளர் 
ரூ. 8.00 கோடி: நாதன் கோல்டர் நைல் - பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 
ரூ. 7.75 கோடி: ஹெட்மையர் - பேட்ஸ்மேன் 
ரூ. 6.75 கோடி: பியூஷ் சாவ்லா - பந்துவீச்சாளர் 
ரூ. 5.50 கோடி: சாம் கரண் -  பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 

ஐபிஎல் 2020 போட்டிக்கான ஏலம் முடிவடைந்த நிலையில் அதிகச் சம்பளம் பெறும் முதல் ஐந்து வீரர்கள்

1. விராட் கோலி (பெங்களூர்) - ரூ. 17 கோடி
2. பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா) - ரூ. 15.50 கோடி
3. தோனி (சென்னை) - ரூ. 15 கோடி
4. ரோஹித் சர்மா (மும்பை) - ரூ. 15 கோடி
5. ரிஷப் பந்த் (தில்லி) - ரூ. 15 கோடி

ஒவ்வொரு அணியிலும் அதிகச் சம்பளம் பெறும் மூன்று வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

1. விராட் கோலி - ரூ. 17 கோடி
2. ஏபி டி வில்லியர்ஸ் - ரூ. 11 கோடி
3. கிறிஸ் மாரிஸ் - ரூ. 10 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்

1. தோனி - ரூ. 15 கோடி
2. ரெய்னா - ரூ. 11 கோடி
3. ஜாதவ் - ரூ. 7. 80 கோடி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

1. பேட் கம்மின்ஸ் - 15.50 கோடி
2. சுனில் நரைன் - ரூ. 12.50 கோடி
3. ரஸ்ஸல் - ரூ. 8.50 கோடி
(கேப்டன் தினேஷ் கார்த்தின் சம்பளம் ரூ. 7.40 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

1. ராகுல் - ரூ. 11 கோடி
2. மேக்ஸ்வெல் - 10.75 கோடி
3. காட்ரெல் - ரூ. 8.50 கோடி

தில்லி கேபிடல்ஸ்

1. ரிஷப் பந்த் - ரூ. 15 கோடி
2. ஹெட்மையர் - ரூ. 7.75 கோடி
3. அஸ்வின் - ரூ. 7.60 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

1. ஸ்மித் - ரூ. 12.50 கோடி
2. பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
3. சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி

மும்பை இந்தியன்ஸ்

1. ரோஹித் சர்மா - ரூ. 15 கோடி
2. ஹார்திக் பாண்டியா - ரூ. 11 கோடி
3. கிருனால் பாண்டியா - ரூ. 8.80 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

1. டேவிட் வார்னர் - ரூ. 12.50 கோடி
2. மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
3. ரஷித் கான் - ரூ. 9 கோடி

2020 ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர்கள்

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 9 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் வருண் சக்கரவர்த்தி மட்டும் பஞ்சாப் அணியால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வருட ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். அவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெற்ற 10 தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம் 
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம் 
9. முகமது - ரூ. 20 லட்சம் 
10. அபினவ் - ரூ. 20 லட்சம்

இவர்களில் மூன்று தமிழக வீரர்கள் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வருண் சக்கரவர்த்தி மற்றும் எம். சித்தார்த் ஆகிய இருவரையும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் தேர்வு செய்துள்ளன. 

ஏலத்தில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 4 கோடி 
2. சாய் கிஷோர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 20 லட்சம்
3. எம் சித்தார்த் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம்

எனினும் ஏலத்தில் பங்கேற்ற 10 தமிழக வீரர்களில் ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித், முகமது, அபினவ் ஆகிய 7 தமிழக வீரர்களை எந்த அணியும் தேர்வு செய்யாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

2020 ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்

9. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி

10. சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்

11. எம் சித்தார்த் - கொல்கத்தா - ரூ. 20 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com