கைத்தறி நெசவாளர்கள் காப்பீடு திட்டத்தில் குளறுபடி?

காஞ்சிபுரம், ஆக. 16:     கைத்தறி நெசவாளர்களுக்கான ஐசிஐசிஐ-லாம்பார்ட் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விவசாயத்துக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் நெசவுத் தொ
கைத்தறி நெசவாளர்கள் காப்பீடு திட்டத்தில் குளறுபடி?

காஞ்சிபுரம், ஆக. 16:     கைத்தறி நெசவாளர்களுக்கான ஐசிஐசிஐ-லாம்பார்ட் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் நெசவுத் தொழிலை தான் ஏராளமானோர் நம்பி உள்ளனர். நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத்தொழிலுக்கு பெயர் பெற்று விளங்குகின்றன. தமிழக அரசின் கணக்கின்படி 6 லட்சம் பேர் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.

நெசவாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஐசிஐசிஐ-லாம்பார்ட் என்ற தனியார் காப்பீடு நிறுவனம் மூலம் காப்பீடு திட்டத்தை 2005-ல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உடல் நிலை பாதிக்கப்படும் நெசவாளர்கள் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

இத் திட்டத்தில் 2009 மார்ச் வரை 2 லட்சத்து 89 ஆயிரத்து 23 பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மருத்துவ சிகிச்சை பெறும் நெசவாளர்கள், தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வழியுள்ளது. மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் நெசவாளர்களுக்கு உரிய சிகிச்சை தரப்படுவதில்லை.

மேலும், காப்பீடு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவமனை / டாக்டர்களுக்கு 20 நாளில் மருத்துவ சிகிச்சைக்கான பணம் தரப்படும் என ஐசிஐசிஐ-லாம்பார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் முதல் மருத்துவத்துக்காக செலவு செய்த டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இதுவரையிலும் பணம் தரப்படவில்லை.   

காஞ்சிபுரத்தில் மட்டும் சில டாக்டர்களுக்கு குறைந்தது ரூ.4 லட்சம் வரை நிலுவைத் தொகை உள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக மாநில கைத்தறி நெசவாளர்கள் நலவாரிய உறுப்பினர் இ.முத்துக்குமார் கூறியது:

ஐசிஐசிஐ-லாம்பார்ட் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நெசவாளர்கள் செலவு செய்த மருத்துவச் செலவில் 50 சதவீதம் ஏமாற்றப்படுகின்றனர்.

தற்போது, தனியார் மருத்துவர்களிடம் நெசவாளர்கள் சிகிச்சை பெறச் சென்றால் இனி சிகிச்சை தரமுடியாது எனத் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், 4 மாதங்களாக மருத்துவர்களுக்கு காப்பீடு நிறுவனம் தர வேண்டிய மருத்துவச் செலவுத் தொகை நிலுவையில் உள்ளது தான்.

இதுதொடர்பாக கேட்டால் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

எனவே நெசவாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெசவாளர்களுக்கு ஓராண்டுக்குரிய காப்பீடு தொகையை மத்திய அரசிடம் இருந்து காப்பீடு நிறுவனம் பெற்று விட்டது. இதுவரை மாநில அரசு ரூ.4 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளது. ஆனால், மருத்துவக் காப்பீடு நிலுவையை வழங்காமல் இருப்பது முறைகேடான செயலாகும்.

மருத்துவர்களுக்கான பாக்கித் தொகையை உடனே வழங்கவும், நெசவாளர்களுக்கு உள்ள மருத்துவ நிலுவைத் தொகையை வழங்கவும் கைத்தறித் துறை தலையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com